பெருவெள்ளத்தால் பாதித்த நேபாளத்தில் மற்றொரு சோகம்... சமையல் எரிவாயு தட்டுப்பாடு!

பக்திபூர் என்ற இடத்தில் கள்ளச் சந்தையில் எரிவாயு சிலிண்டர் விற்ற இருவரைப் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்தில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
நேபாளத்தில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக தலைநகர் காத்மாண்டுவில் மாணவர்கள் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்நாட்டின் பிரித்வி நெடுஞ்சாலையில் உள்ள கிரிஷ்ணபீர் என்ற இடத்தில் நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக எரிவாயு ஏற்றிவரும் வாகனங்கள் காத்மாண்டுவிற்குள் நுழைய முடியவில்லை.
காத்மாண்டு பள்ளத்தாக்கிற்கு நாள்தோறும் 35 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை சிலிண்டர்கள் தேவைப்படும் நிலையில், அதில் 5 சதவீதம் மட்டுமே கிடைப்பதாக தனியார் எரிவாயு நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. அரசு நிர்ணயித்த விலை 2 ஆயிரத்து 60 என்ற போதிலும், தட்டுப்பாடு காரணமாக கள்ளச் சந்தையில் ஒரு சிலிண்டர் 2 ஆயிரத்து 800 முதல் 3 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்படுகிறது.
அப்படி, பக்திபூர் என்ற இடத்தில் கள்ளச் சந்தையில் எரிவாயு சிலிண்டர் விற்ற இருவரைப் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தடைபட்ட எரிவாயு விநியோகத்தைச் சீரமைக்க, தாரா பிராந்தியத்தில் உள்ள மாவட்டங்களில் இருந்து மாற்று வழிகளில் 53 ஆயிரத்து 469 சிலிண்டர்கள் காத்மாண்டுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
எரிவாயு தட்டுப்பாடு குறித்து நாடாளுமன்றக் குழு கூட்டத்தில் சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்ததைத் தொடர்ந்து, தொழில், வர்த்தகம் மற்றும் விநியோகத்துறை அமைச்சர் கௌரி குமாரி யாதவ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
