Crime, law and justice
என்.ஐ.ஏ., சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க தமிழகத்துக்கு சுப்ரீம் கோர்ட் 2 வாரம் கெடு
- சிறப்பு நிருபர் -: என்.ஐ.ஏ., சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க தமிழகத்துக்கு உச்சநீதிமன்றம் 2 வாரம் கெடு விதித்து
என்.ஐ.ஏ., எனப்படும், தேசிய புலனாய்வு முகமை சட்டத்தின் கீழ் பதிவாகும் வழக்குகள் மற்றும் உபா எனப்படும், தேசவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டங்களின் கீழ் பதிவாகும் வழக்குகளை, காலக்கெடுவுக்குள் விசாரித்து முடிக்க, தனி சிறப்பு நீதிமன்றங்களை அமைக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
தலைமை நீதிபதி சூர்யா காந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி மற்றும் வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு இவ்வழக்கை விசாரித்தது. நாடு முழுதும் இதுவரை, 22 பிரத்யேக என்.ஐ.ஏ., சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அப்போது தெரிவிக்கப்பட்டது.
கர்நாடகா, கேரளா, தமிழகம் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில், இதற்கான பணிகளில் தாமதம் நிலவுவதாக நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.
தமிழகம் மற்றும் தெலுங்கானாவில், தலா ஒரு கூடுதல் தனி சிறப்பு நீதிமன்றத்தை, இரு வாரங்களுக்குள் செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் எனவும், கேரளாவில், இரு புதிய சிறப்பு நீதிமன்றங்களை, நான்கு வாரங்களுக்குள் அமைக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
கர்நாடகாவில் பெங்களூரு, சிக்கமகளூரு, உடுப்பி ஆகிய இடங்களில் முன்மொழியப்பட்ட, மூன்று நீதிமன்றங்கள், இரு வாரங்களுக்குள் அறிவிக்கப்படும் என, அம் மாநில தலைமை வழக்கறிஞர் உறுதியளித்தார்.
மேற்கு வங்கத்தில் மேலும் மூன்று நீதிமன்றங்களையும், அசாமில் மேலும் இரு நீதிமன்றங்களையும் விரைவாக அமைக்கவும் அமர்வு உத்தரவிட்டது.
'நீதிமன்றங்களின் முதன்மை நோக்கமே வழக்குகளை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிப்பது தான். விசாரணைகள் விரைவாக நடப்பதை உறுதிசெய்ய, ஒரு தனி சிறப்பு நீதிமன்றத்தில், 10 முதல் 12 வழக்குகளுக்கு மேல் ஒப்படைக்கப்படக்கூடாது' என்றும் அமர்வு கூறியுள்ளது.
மேலும், போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதியப்படும் குற்றங்கள் கவலையளிக்கும் வகையில் அதிகரித்து வருவதாக நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.
மேலும், நாடு முழுவதும் அடையாளம் காணப்பட்டுள்ள நிலுவையில் உள்ள போதைப்பொருள் தடுப்பு தனி சிறப்பு நீதிமன்றங்களையும் அடுத்த, ஆறு மாதங்களுக்குள் முழுமையாக அமைத்து முடிக்க வேண்டும் என, உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.