Religion
பாலதண்டாயுதபாணி கோவில் மஹாகும்பாபிஷேகம் விழா
கச்சிராயபாளையம்: மண்மலை ஸ்ரீ தண்டாயுதபாணி திருக்கோவிலில் நேற்று மஹாகும்பாபிஷேக விழா நடந்தது.
கச்சிராயபாளையம் அடுத்த மண்மலை, கந்தசாமி குன்றின் மீது ஸ்ரீ பால தண்டாயுதபாணி திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கிருந்த பழைய கோவிலை அகற்றிவிட்டு புதிதாக கோவில் அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டது. கோவில் கட்டுமான பணிகள் முடிந்த நிலையில் நேற்று மஹாகும்பாபிஷேக விழா நடந்தது. அதிகாலை 6 மணிக்கு மங்கள இசை, வேதபாராயணம், பிரம்மசுத்தி தத்துவார்ச்சனை, நாடி சந்தனம் ஸ்பரஸ்யாஹீதி, மூல மந்திரஹோமம், அஸ்திர ஹோமம் ஆகியவை நடத்தப்பட்டது.
தொடர்ந்து நான்காம் கால மஹாபூர்ணாஹீதி யாகசாலை பூஜைகள் செய்யப்பட்டது. தீபாராதனை செய்து கலச புறப்பாடாகி , காலை 10 மணியளவில் விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா, சுப்பிரமணியர், இடும்பன், கடம்பன், பாலதண்டாயுதபாணி ஆகிய கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி மஹாகும்பாபிஷேகம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ட்ரோன் மற்றும் தீயணைப்பு வாகனம் மூலம் பொதுமக்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. கும்பாபிஷேக நிகழ்ச்சியில் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.



