மாதம் ரூ.3 லட்சம் கேக் விற்பனையில் பாதிக்கு பாதி லாபம்!

'கேக்' தயாரித்து, சமூக வலைதளங்கள் வாயிலாக விற்பனை செய்து நிறைவான லாபம் ஈட்டும், தேனி மாவட்டம், அணைக்கரைப்பட்டியைச் சேர்ந்த பிரியா:
எனக்கு ஒன்பதாம் வகுப்பிற்கு மேல் படிப்பு வரவில்லை. ஏதாவது வேலைக்கு செல்லலாம் என்று, சிறிது நாட்கள் கிடைத்த வேலைக்கு சென்று வந்தேன். 18 வயதில் திருமணம் செய்து வைத்தனர். கணவர், டீக்கடையில் காசாளராக இருக்கிறார். அவர் வருமானத்தில் குடும்பத்தை நடத்த முடியாமல், நான்கு ஆண்டுகள் கஷ்டப்பட்டேன். கொரோனா ஊரடங்கில் எங்கள் நிலை மோசமானது.
'ஏதாவது சுயதொழில் செய்யலாமா?' என கேட்டதற்கு, 'தொழில் செய்யும் அளவிற்கு நம்மிடம் பணம் இல்லை; அப்படியே ஆரம்பித்தாலும், நஷ்டமடைந்தால் என்ன செய்ய...? அதெல்லாம் வேண்டாம்' என்று கணவர் கூறி விட்டார். இதனால், மகளிர் குழுவில் 25,000 ரூபாய் கடன் வாங்கி, 'கேக்' செய்ய கற்றுக் கொண்டேன்.
முதன் முதலில் முட்டை மிட்டாய் தயார் செய்து, வீட்டில் உள்ளவர்களுக்கு கொடுத்தேன்; பிள்ளைகளும், அம்மாவும், 'நன்றாக இருக்கிறது' என்றனர். மீதமிருந்த மிட்டாய்களை குழந்தைகளின் பள்ளி நண்பர்களுக்கு கொடுத்ததில், அவர்களும் நன்றாக இருப்பதாக கூறினர்.
அதை நம்பிக்கையாக வைத்து, முட்டை மிட்டாய்கள் தயார் செய்து, அருகில் உள்ள, 'பேக்கரி'களுக்கு கொடுத்தேன். ஆரம்பத்தில் பலரும் வாங்க தயங்கினர்; சிலர் எனக்கான காசை கொடுக்காமல் ஏமாற்றினர்.
அப்போது, முட்டை மிட்டாய் செய்வதை காணொளி எடுத்து, சமூக வலைதளங்களில் பதிவிடுவதன் வாயிலாக விற்பனை செய்யலாம் என்று தோன்றவே, நானே பேசி, காணொளி எடுத்து பதிவிட்டேன். முதலில், 'பட்டிக்காடு, படிக்காதவள்' என்று கேலி செய்தனர்; நான் கண்டுகொள்ளவில்லை.
காணொளியில் என் பேச்சு பிடித்து போய், உசிலம்பட்டியில் உள்ள ஒரு பெண், முதல், 'ஆர்டர்' கொடுத்தார். அந்த முதல் ஆர்டரை காணொளி எடுத்து பதிவிட்டேன். மறுநாள் முதல் ஆர்டர்கள் குவிந்தன. எனக்கு சந்தோஷம் தாங்கவில்லை.
என் மகள் பிறந்த நாளுக்கு, வீட்டிலேயே கேக் செய்து, அவளது பள்ளி நண்பர்களுக்கு கொடுத்திருந்தேன்; அதையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டேன். முட்டை மிட்டாய் வாங்கிய வாடிக்கையாளர்களே, கேக் ஆர்டரும் கொடுத்தனர்.
தினமும் வரும் ஆர்டர்களை உடனே தயாரித்து, கணவருடன் சென்று வினியோகம் செய்கிறேன். ஒரு காலத்தில், 'பட்டிக்காடு' என்று விமர்சனம் செய்த மக்கள், இன்று அவர்கள் குடும்பத்தில் ஒருத்தியாக என்னை பார்க்கின்றனர். மாதம் 3 லட்சம் ரூபாய் வருமானம் வருகிறது; பாதிக்கு பாதி லாபம் கிடைக்கிறது. கடும் உழைப்பு தான், என்னை இந்த உயரத்திற்கு அழைத்து வந்துள்ளது.