Politics
இடைத்தேர்தலில் அ.தி.மு.க.,வுக்கு வெற்றி கிடைக்கும்: பழனிசாமி

சென்னை: 'இடைத்தேர்தலில் அ.தி.மு.க., மிகப்பெரிய வெற்றியை பெறும்' என அக்கட்சியின் பொதுச் செயலர் பழனிசாமி கூறினார்.
அ.தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில், பழனிசாமி தலைமையில், நேற்று நடந்தது. துணை பொதுச்செயலர்கள் வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் பங்கேற்கவில்லை.
பழனிசாமி பேசியது குறித்து, கட்சி நிர்வாகிகள் கூறியதாவது: பொய்களை 'ரீல்ஸ்' வழியே வாரி இறைத்து, தேர்தலில் த.வெ.க., வென்று விட்டது. இந்த ஆட்சி நீடிக்காது. இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஆறு தொகுதிகளும், அ.தி.மு.க., வெற்றி பெற்றவை.
பணத்துக்கு ஆசைப்பட்டு, பதவியை ராஜினாமா செய்து விட்டு, த.வெ.க.,வுக்கு ஓடியவர்களை மக்கள் மன்னிக்க மாட்டார்கள். எனவே, இடைத்தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை அ.தி.மு.க., பெறும். விரைவில் நடக்க உள்ள, உள்ளாட்சி தேர்தலுக்கு, கட்சியை தயார் செய்ய வேண்டும்.
அதற்காக, ஆர்ப்பாட்டம், தெருமுனை கூட்டங்கள் என, மக்கள் சந்திப்பை அதிகப்படுத்துங்கள். கட்சியினரை, புதிய மாவட்ட செயலர்கள் அனுசரித்து போகவேண்டும்.
இளைஞர்களை ஒருங்கிணைத்து பணியாற்றுங்கள். நல்ல பிரதிநிதிகளை, வேட்பாளராக பரிந்துரை செய்யுங்கள். பெரிய அளவிலான வெற்றியை, நிச்சயமாக பெறுவோம். விரைவில், செயற்குழு அறிவிப்பு வெளியாகும். அதில், முக்கிய முடிவு எடுப்போம். இவ்வாறு, பழனிசாமி பேசியதாக கூறினர்.
கூட்டத்தில் பங்கேற்ற துணை பொதுச்செயலர் முனுசாமி, 'விஜயை, பிரதமர் வேட்பாளர் என கூறுவது, இந்த ஆண்டின் சிறந்த நகைச்சுவை' என தெரிவித்தார்.