Politics
மிசா, சர்க்காரியா கமிஷன்! த.வெ.க. அவதூறு! ஆதாரத்துடன் தி.மு.க. பதிலடி!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் காவல்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதங்களுக்கு செப்டம்பர் 7ஆம் தேதி திங்களன்று முதல்வர் விஜய் பதிலளிக்கும்போது, கேள்விகளுக்கு பதிலளிப்பதை விட்டுவிட்டு, வழக்கம்போல் தி.மு.க. மீது சேற்றைவாரியிறைக்கும் வேலையில் இறங்கினார். கத்திக்கத்திப் பேசியவர், "நம்ம நண்பர்கள் எது பேசினாலும், நாங்க மிசா பார்த்த வங்க... மிசா பார்த்தவங்க...ன்னு சொல்றாங்க... அந்த மிசாவை பத்தின ஹிஸ்டரி எனக்கு நல்லா தெரியும்.'' என்று கூறியவர், தனது கீழ்த்தாடையை பிடித்துக்காட்டி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு மிசா சிறைச்சாலையில் போலீசாரால் நடத்தப்பட்ட தாக்குதலை சைகையால் கிண்ட லடித்தார். அதேபோல், அவைக்கு தொடர்பில்லா மல் சர்க்காரியா கமிசன் குறித்தும் முதல்வர் விஜய் பேசியிருந்தார். மறுநாள் சட்டமன்றத்தில் பேசிய அமைச்சர் நிர்மல்குமார், மு.க.ஸ்டாலின் மிசா காலத்தில் கைதாகவில்லை என்றும், பெண்களைப் பற்றி அவதூறாகப் பேசியதற்கான வழக்கில்தான் அவர் கைது செய்யப்பட்டதாகவும் சட்டமன்றத்தில் தெரிவித்தார்.
இருவரின் பேச்சுக்கும் தி.மு.க. தரப்பில் சட்டமன்றத்தில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மிசாவில் கைதானவர்களை கொச்சைப்படுத்தி முதல்வர் விஜய் மற்றும் நிர்மல்குமார் பேசியதற்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் தங்கள் கண்டனத்தை தெரிவித்தனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செய லாளர் சண்முகம் செய்தியாளர் களிடம் பேசியபோது, "தமிழ் நாட்டில் சென்னை சிறைச்சாலை களில் மிசா காலத்தில் நடைபெற்ற கொடுமைகள், வன்முறைகள் சம்பந்தமாக இஸ்மாயில் என்பவர் தலைமையில் ஒரு கமிஷன் போடப்பட்டு, அவரது விசாரணை அறிக்கை இதே தமிழ்நாடு சட்டமன்றத்தில் வைக்கப்பட்டது. இதையெல்லாம் த.வெ.க.வினர் படிக்க வேண்டும். மிசாவில் கைதானவர்களை எல்லாம் சமூக விரோதிகள் என்பதாக நிர்மல் குமார் சொல்லியிருப்பது சிறுபிள்ளைத்தனமானது. இந்தியா முழுவதும் பல்லாயிரக்கணக்கான மார்க்சிஸ்டுகள் கைது செய்யப்பட்டு சிறையிலே இருந்தார்கள். கடுமையான சித்ரவதைகளுக்கு உள்ளாகியிருக்கிறார்கள். ஆகவே வரலாறு தெரியாமல், தி.மு.க. மீது இருக்கிற கோபத்தில் சகட்டுமேனிக்கு சேற்றை வாரி வீசுவது போல் அமைச்சர்கள் பேசுவது வன்மையான கண்டனத்துக் குரியது'' என்று கூறியுள்ளார்.
முதல்வரின் உருவ கேலி குறித்து வி.சி.க. தலைவர் திருமா வளவன் தனது அறிக்கையில், "இதுபோன்ற 'உடல்மொழிகள்' கண்ணியமான அணுகுமுறை இல்லை என்பதையும் மனித மாண்புகளுக்கு எதிரானது என்பதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சுட்டிக்காட்டு கிறோம். அகவையில் மூத்தோரை மதிப்பது மனித மாண்புகளில் மிகவும் உயர்ந்ததாகும். எனவே, மாண்பு நிறைந்த ஒரு மகத்தான பொறுப்பிலுள்ள முதலமைச்சர் தனது உடல்மொழியில் மிகுந்த கவனமுடன் இருக்கவேண்டும். முதல்வரின் உரையில் சில பகுதிகளை அவைக்குறிப்பிலிருந்து நீக்கக்கோரும் விவாதத்தின்போது சட்டத்துறை அமைச்சர் கூறிய கருத்து வரலாற்றுப்பிழையாகும். மிசா காலத்து அரச பயங்கரவாதம் எத்தகையது என்பது நாடறிந்த ஒன்றாகும். அந்த கொடிய ஒடுக்குமுறைக்குள்ளான தி.மு.க. தலைவர் குறித்து முற்றிலும் தவறான கருத்தினைப் பதிவு செய்தது கண்டனத்துக்குரியதாகும். அமைச்சர் அதனை திரும்பப் பெறுவதாக அறிவிக்க வேண்டுமென வலியுறுத்துகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. "பழைய கதைகளை பேசிவிட்டு, 50 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான, தற்போது சட்டரீதியாக பயன் படுத்த முடியாது என்று கூறப் படும், கமிஷன் அறிக்கைகளை, உலகத்தின் உண்மை போல் முதலமைச்சர் பேசுகிறார். மிசா குறித்து கொச்சையாக பேசுகிறார். ஜனநாயகத்திற்காக நாடு முழுவதும், குறிப்பாக தமிழ்நாட்டில், எத்தனை பேர் போராடி சிறை சென்றார்கள்? எவ்வளவு கஷ்டங்களை அனுபவித்தார்கள்? என்பது குறித்த வரலாற்றை தெரிந்துகொண்டு, முதலமைச்சர் பேச வேண்டும்.'' என்று தெரிவித்துள்ளார்.
சென்னை அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த தி.மு.க. சட்டத்துறை இணைச் செயலாளர் இ.பரந்தாமன், "தமிழ்நாட்டின் அரசியல் வரலாற் றில் ஒரு சட்டமன்றத்தைத் திரைப்பட அரங்கமாக மாற்றிய பெருமை இந்த த.வெ.க. அரசாங்கத்திற்கு ஏற்பட்டிருக்கிறது. எதிர்க்கட்சி தலைவர் எழுப்பிய 15 கேள்விகளில் ஒரு கேள்விக்கு கூட பதில் சொல்ல முடியாமல் தொடை நடுங்கி முதலமைச்சர் விஜய் சட்டமன்றத்தை விட்டு
ஓடிவிட்டார். மிசாவை பற்றி பேச விஜய்க்கு என்ன தகுதி உள்ளது? ஒரு உடல் மொழி வேற காட்டுறார். மிசா கைதியாக இருந்து தாக்குதலுக்கு ஆளானதை விசாரிப் பதற்காக உயர் நீதிமன்ற நீதிபதி இஸ்மாயில் கமிஷன் கொடுத்த ரிப்போர்ட்டில் மிசாவில் குற்றவாளிகளாக யாரெல்லாம் கைது செய்யப் பட்டுள்ளார்கள் என்பதை தெளிவாகக் கொடுத் துள்ளார்கள். இந்திரா காந்தி எமர்ஜென்சி டிக்ளேர் பண்ணும்போது மிசாவில் எல்லா அரசியல் தலை வர்களும் கைது செய்யப்பட் டார்கள். அதை எவ்வளவு கொச்சையாக பேசுகிறார். ஆற்காடு வீராசாமி, மு.க.ஸ்டாலின், முரசொலி மாறன், என்.வி.என்.சோமு உள்ளிட்ட பலரும் கைது செய்யப்பட்டிருப்பதாக சொல்லப் பட்டிருக்கு. ஓராண்டு காலம் மு.க.ஸ்டாலின் மிசா கைதியாக சிறைச்சாலையில் இருந்தார். ஒரு முதலமைச்சருடைய பையனான அவருக்கு சல்யூட் அடிச்ச போலீஸ்காரங்க, பூட்ஸ் காலால் எட்டி உதைத்தனர். சிறையில் பல கொடுமைகளை அனுபவித்தார். அதனால் ஏற்பட்ட காயங்கள் இன்று தழும்பாக அவரது உடலில் உள்ளது. இந்த வரலாறு யாருக்காவது உள்ளதா? சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமாருக்கு மிசா வேறு, குண்டாஸ் என்பது வேறு என்றே தெரியவில்லை. உண்மையிலேயே அவர் சட்டம் படித்துத்தான் வந்தாரா?'' என்று காட்டமாக கேள்வி யெழுப்பினார்.
சென்னை மத்திய சிறையில் மிசா கைதிகள் மீது நடத்தப்பட்ட வன்முறைகள் மற்றும் கொடுமைகளை விசாரிக்க நீதிபதி முகமது இஸ்மாயில் தலைமையில் அமைக்கப்பட்ட கமிஷன் ஆணையத்திற்கு உதவியாக பாதிக்கப்பட்ட சிறைக்கைதிகளிடம் சாட்சியங்களைச் சேகரிக்கும் பணியிலும், கைதிகளுக்காக வழக்காடும் வழக்கறிஞ ராகவும் நீதியரசர் சந்துரு அப் போது செயல்பட்டுள்ளார். அதுகுறித்து அவர் கூறுகையில், "எமெர்ஜென்சி காலகட்டத்தில் தி.மு.க. சார்பில் தமிழகம் முழு வதும் கிட்டத்தட்ட 450 பேர் கைது செய்யப்பட்டனர். முரசொலி மாறன், சிட்டி பாபு, ஆற்காடு வீராசாமி மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் கைது செய்யப்பட்டவர்களில் முக்கியமானவர்கள். தி.மு.க.வை அச்சுறுத்துவதற் கும், கலைஞருக்கு மனஉளைச்சல் கொடுப்பதற் காகவும் ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். ஸ்டாலின் உள்ளிட்டோர் போலீசாரால் தாக்கப்பட்டனர்.'' என்று கூறியுள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் வீரபாண்டியன், "கூச்சல்
மிகுந்த வாத முறையால் சட்ட மன்றத்தின் நேரம் வீணடிக்கப் படுகிறது. சட்டமன்ற மரபையும், ஜனநாயகத்தையும் காப்பதில் ஆளுங்கட்சிக்கு பொறுப்புள்ளது. சபாநாயகர் நடுநிலைத்தன்மையோடு செயல்பட வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.
தி.மு.க. ஆட்சிக்கலைப்பும் மிசாவும்!
1972ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். தி.மு.க.வை விட்டு விலகி, அ.தி.மு.க.வை தொடங்கிய பிறகு, அப்போதைய கவர்னர் கே.கே.ஷாவை சந்தித்து புகார்ப்பட்டியலை கொடுத்தார். அதில் மொத்தம் 28 புகார்கள் இருந்தன. அப்பட்டியலை கவர்னர், மத்தியிலுள்ள இந்திரா காந்தியின் அரசுக்கு அனுப்புகிறார். பிரதமர் இந்திரா காந்தி தமிழ்நாடு அரசிடம் விளக்கம் கேட்கவும், கலைஞர் விளக்கம் கொடுக்கிறார். இவையனைத்தும் 1972-73 காலகட்டத்தில் நடந்தவை.
இந்நிலையில், 1975ஆம் ஆண்டு, ஜூன் 25ஆம் தேதி நள்ளிரவில் இந்திரா காந்தியின் ஒன்றிய அரசு எமர்ஜென்ஸி எனப்படும் நெருக்கடி நிலை சட்டத்தை நாடு முழுக்க அமல்படுத்தியது. இதனை கலைஞர் தலைமையிலான தமிழ்நாடு அரசு கடுமையாக எதிர்த்தது. 1975, ஜூன் 27ஆம் தேதி நடைபெற்ற தி.மு.க. செயற்குழுவில் எமர் ஜென்சிக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. அடுத்து, 1975, ஜூலை 21ஆம் தேதி, மக்களவையிலும், மாநிலங்களவையிலும் தி.மு.க. எம்.பி.க்கள் எமர்ஜென்ஸிக்கு எதிராகக் கண்டனக் குரலெழுப்பினர். அதனை இந்திரா காந்தி கடுமையாக எச்சரித்தார். 1975, ஆகஸ்ட் 9, 10 தேதிகளில் நடந்த தி.மு.க. மாநாட்டில் எமர் ஜென்ஸிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. இதெல்லாம் இந்திரா காந்தியை கொதிப்படையச் செய்தது. தொடர்ச்சியாக, எமர் ஜென்ஸிக்கு எதிராகக் களமாடிய தி.மு.க. அரசை, 1976, ஜனவரி 31ஆம் தேதி இரவு கலைத்தார்.
தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சியை கலைத்ததுமே பிப்ரவரி 1ஆம் தேதி மு.க.ஸ்டாலின் கைது செய் யப்பட்டார். இதுகுறித்து கலைஞர் தனது "நெஞ்சுக்கு நீதி' நூலில் எழுதியிருக்கிறார். அதில், தி.மு.க. ஆட்சியை கலைத்த செய்தி கிடைத்த அன்றிரவே மு.க.ஸ்டாலினை மிசாவில் கைது செய்வதற்காக வீட்டிற்கு போலீசார் வர, ஸ்டாலின் வெளியூரிலிருக்கும் செய்தியை கலைஞர் சொல்லவும், நம்பாத காவலர்கள், கலைஞரின் வீட்டை சோதனையிட்ட பின் திரும்பிச்சென்றனர். மறுநாளில், வீடு திரும்பிய ஸ்டாலினை கலைஞரே போலீஸ் வேனில் வழியனுப்பிவைக்கிறார். தி.மு.க. செயலாளர்களான ஆற்காடு வீராசாமி, நீலநாராயணன், சிட்டிபாபு, செ.கந்தப்பன் மற்றும் முரசொலி மாறனையும் கைது செய்கிறார்கள். மாநிலம் முழுக்க தி.மு.க. நிர்வாகிகள் கைது செய்யப்படுகிறார்கள்.
சென்னை மத்திய சிறையில் தான் மிசா கைதிகள் மிகக்கடுமையாக போலீசாரின் தாக்குத லுக்கு ஆளானார்கள். சென்னை மேயராக இருந்த சிட்டிபாபு, சிறையில் போலீசாரின் கடுமையான தாக்குதலுக்கு ஆளாகி, அதனால் உடல் நலக்குறை வாகி உயிரிழந்தார். சிட்டிபாபு தனக்கும், தி.மு.க. வினருக்கும் சிறையில் நடந்த கொடுமைகளை டைரியில் எழுதிவந்தார். அந்த டைரி குறிப்புகளை, "ஆயுள் தண்டனையின் அனுபவங்கள்' என்ற தலைப்பில் முரசொலியில் தொடராக வெளியிட் டார் முரசொலி மாறன்.
அதில், "சிறைச்சாலையில் சிறுநீர் கழிப்பதற்கும், குடிநீர் அருந்துவதற்குமான இரண்டு பானைகள் அருகருகே வைக்கப்பட்டிருக்கும். சிறுநீர் நிரம்பியிருக்கும். அதையெல்லாம் சகித்துக் கொண்டு தான் குடிநீர் அருந்த வேண்டியிருந்தது. மு.க.ஸ்டாலினும், சிட்டி பாபுவும் சிறைப்பட்டிருந்த அறைக்குள் வந்த சுருளிராஜன் என்ற சிறைக்காவலர், பூட்ஸால் ஸ்டாலினின் அழகிய முகத்தை உதைத்தார்.' இன்னொருவரோ கோலால் அவரது தோள்ப்பட்டையில் அடித்திருக்கிறார். இன்னொரு போலீஸ்காரர் ஸ்டாலினின் கன்னத்தில் அறைந்திருக்கிறார். அந்த அறையிலிருந்த மற்ற தி.மு.க.வினர் ஏற்கனவே அடிபட்டு வீழ்ந்து கிடந்த தால், ஸ்டாலினை காப்பாற்ற இவரே குறுக்கே புக, இவரது கழுத்திலும் அடி விழுந்திருக்கிறது... இப்படியாக அங்கு நடந்த கொடுமைகளை விவரித்திருக் கிறார். இந்த சித்ரவதை களால் தான் மு.க.ஸ்டாலினுக்கு முகத்தின் கீழ்த்தாடையில் அடிபட்டது. முரசொலி மாறன் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. அதன் பாதிப்பால் தான் அவருக்கு மைக்ரேன் தலைவலி அடிக்கடி ஏற்படும். ஆற்காடு வீராசாமி மீது போலீசார் தாக்குதல் நடத்தியதில் அவரது காது கேட்புத்திறனில் பாதிப்பு ஏற்பட்டது. அதேபோல், திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணிக்கு புருவத்துக்கு மேல் ஓர் தழும்பு இருக்கும். இதையெல்லாம் முதல்வர் விஜய் கேலி செய்கிறாரென்றால் அது எப்பேர்ப்பட்ட வன்ம மாக இருக்கும்? மிசா காலத்தில், தமிழ் நாட்டை பொருத்தவரை, தி.மு.க., தி.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் காமராஜ ரின் ஸ்தாபன காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் கைது செய்யப்பட்டு, சிறை கொட்டடியில் கடுமையான சித்ரவதைகளை அனுபவித்தனர். இந்த வரலாறெல் லாம் முதல்வர் விஜய்க்கு தெரியுமா என்ன?
சர்க்காரியா கமிசன்!
தி.மு.க. 1976 ஜனவரி 31ஆம் தேதி கலைக்கப் பட்ட பின்னர் தான் பிப்ரவரி மாதத்தில், தி.மு.க. மீதான புகார்களை விசாரணை செய்வதற்காக சர்க் காரியா கமிஷன் கொண்டுவரப்பட்டது. அன்றைய காலகட்டத்தில் தி.மு.க. மீது மட்டுமல்லாது, தங்க ளுக்கு குடைச்சலாக இருந்த பஞ்சாப் முதல்வரான பிரகாஷ் சிங் பாதல் மீதும் காங்கிரஸ் கட்சி விசாரணை கமிஷன் வைத்தது. சர்க்காரியா கமிஷன் விசாரணையை தி.மு.க. எதிர்கொண்டது. தற்போ தைய பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனின் தந்தை சாந்தி பூஷன் தி.மு.க.வுக்காக வாதாடினார்.
சர்க்காரியா கமிஷன், வீராணம் திட்டம், சர்க்கரை ஆலை திட்டம், சமயநல்லூர் அனல் மின் நிலைய ஒப்பந்தம், விமானம் மூலம் பூச்சிமருந்து தெளிப்பது, பூச்சிக்கொல்லி மருந்து மற்றும் நெல் கொள்முதல் உள்ளிட்டவை உட்பட 28 குற்றச் சாட்டுகளை விசாரணை செய்ததில், எந்த குற்றச் சாட்டிலும், கலைஞருக்கு நேரடித் தொடர்பு இருப் பதற்கான முகாந்திரம் இல்லையென்று தெரிவித்தது.
தி.மு.க.வுக்கு பின்னர் ஆட்சிக்கு வந்த எம்.ஜி.ஆர்., அட்வகேட் ஜெனரல் வி.பி.ராம னிடம், சர்க்காரியா கமிஷன் அறிக்கை மீது நட வடிக்கை எடுக்கலாமாவென்று கேட்கிறார். அவ ரோ, இதை வைத்தெல்லாம் யார் மீதும் நட வடிக்கை எடுக்கமுடியாதென்றே தெரிவித்துவிட் டார். இதே சர்க்காரியா கமிஷனால் குற்றச்சாட்டு வைக்கப்பட்ட ப.உ.சண்முகம், எம்.ஜி,ஆரின் அமைச்சரவையில் இடம்பிடித்த சம்பவமும் நடந்தது. அதேபோல் திரும்பத்திரும்ப சொல்லப் படும் விஞ்ஞான ஊழல் என்ற வார்த்தைப்பயன் பாடு சர்க்காரியா கமிஷன் அறிக்கையில் இல்லவே யில்லை. ஆக, சட்டமன்றத்தில் காவல்துறை மானியக்கோரிக்கை குறித்த விவாதத்தில் ஆக்கப் பூர்வமாக பதிலளிக்காமல், மிசா குறித்து இழித்தும் பழித்தும் பேசிய விஜய்க்கு தி.மு.க., தக்க ஆதாரங்களோடு பதிலடி கொடுத்துள்ளது!
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)