ஓடும் ரயிலில் ரூ.3 கோடி நகைகள் கொள்ளை தலைமறைவான மேலும் மூவர் அதிரடி கைது
விருத்தாசலம்: அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயிலில் 3 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம், வைர நகைகளை திருடிய வழக்கில், தலைமறைவான மேலும் மூவரை ரயில்வே போலீசார் கைது செய்தனர்.
சென்னை வேப்பேரியை சேர்ந்தவர் தீபக், 47. நகை வியாபாரி. கடந்த ஜூலை 23ல், மதுரையில் உள்ள பிரபல நகைக்கடையில் தான் எடுத்துச் சென்ற 3 கோடி ரூபாய் மதிப்பிலான அரை கிலோ தங்கம் மற்றும் வைர நகைகள் அடங்கிய மாதிரிகளை காண்பித்து ஆர்டர் பெற்றார்.
பின்னர், அங்கிருந்து அனந்தபுரி – சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலில், சென்னைக்கு புறப்பட்டார். மறுநாள் காலை (24ம் தேதி), திருச்சியை கடந்து ரயில் வந்தபோது, கைப்பை மற்றும் நகைப்பையை வைத்துவிட்டு தீபக் கழிவறைக்கு சென்றார்.
திரும்பி வந்து பார்த்தபோது, மொபைல் போன் மற்றும் நகைப்பை மாயமாகியது. இது குறித்த புகாரின் பேரில், தாம்பரம் ரயில்வே போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். மேலும், திருச்சி அடுத்த கல்லகத்தில் தண்டவாள பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் இருவர், கீழே கிடந்த ஒரு பையை எடுத்து, திருச்சி ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர். அது தீபக் நகைப்பை என்பது உறுதி செய்யப்பட்டது. ஆனால், அதில் தீபக்கின் 2 மோதிரங்கள், மொபைல் போன் மட்டுமே இருந்தது.
இதையடுத்து, விருத்தாசலம் ரயில்வே போலீசாருக்கு வழக்கு மாற்றப்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம் இருப்புப்பாதை ரயில்வே போலீசார் இணைந்து விசாரணையில் களமிறங்கினர். அதில், கிடைத்த ரகசிய தகவலின்பேரில், கொல்கத்தாவை சேர்ந்த அமர்நாத் ஜெய்ஸ், 60, பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்த ராஜன்குமார், 30, ஆகியோரை கைது செய்தனர். அவர்களை கஸ்டடி எடுத்து விசாரித்த ரயில்வே போலீசார், நகைகளுடன் மேலும் மூவர் தலைமறைவானதை உறுதி செய்தனர்.
திருச்சி ரயில்வே எஸ்.பி., ஆதார்ஷ் பச்சோரா உத்தரவின்படி, திருச்சி டி.எஸ்.பி., சக்கரவர்த்தி தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் மதுரை சுரேஷ் , விழுப்புரம் முருகன் அடங்கிய இரண்டு தனிப்படை போலீசார், ராஜஸ்தான் மாநிலம், ஜெயப்பூருக்கு புறப்பட்டனர்.
அங்கு பதுங்கியிருந்த பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்த அசோக்குமார்,35; சுனில் குமார், 40, கொல்கத்தாவை சேர்ந்த அபிநவ் ஜெய்ஸ்வால், 57, ஆகிய மூவரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து தங்கம், வைர நகைகளை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து, அமர்நாத் ஜெய்ஸ் உட்பட ஐந்து பேரையும், திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அங்குள்ள மத்திய சிறையில் அடைத்தனர்.