சில வரி செய்திகள்...
குழந்தைகளை பாதுகாக்க ‘ஆன்லைன்’ தடுப்பு சுவர் சமூக ஊடகங்கள் மற்றும் ‘டிஜிட்டல்’ தளங்களில், பாலியல்
சமூக ஊடகங்கள் மற்றும் ‘டிஜிட்டல்’ தளங்களில், பாலியல் சுரண்டல் மற்றும் ஆபத்தான உள்ளடக்கங்களில் இருந்து குழந்தைகள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.
தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வு இம்மனுவை நேற்று விசாரித்து பிறப்பித்த உத்தரவில், ‘தற்போதைய டிஜிட்டல் உலகில், குழந்தைகள் பாதுகாப்பாக செயல்பட தேவையான தடுப்புச் சுவர்கள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் உருவாக்கப்பட வேண்டியது அவசியம். இது தொடர்பாக மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் ஒழுங்குமுறை அதிகார அமைப்புகள் பதில் அளிக்க வேண்டும்’ என, உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
டில்லி ஐகோர்ட் ‘குட்டு’
பா.ஜ., மூத்த தலைவரும், உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞருமான கவுரவ் பாத்தியாவுக்கு எதிராக சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்ட அவதுாறான பதிவுகளை அகற்ற கரப்பான்பூச்சி கட்சிக்கு டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், ‘மனுதாரரின் நற்பெயருக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பதிவிடப்பட்ட அவதுாறு பதிவுகளை 24 மணி நேரத்திற்குள் கரப்பான் பூச்சி கட்சியினரும், சம்பந்தப்பட்ட சமூக வலைதள நிறுவனங்களும் நீக்க வேண்டும். கருத்து சுதந்திரம் என்ற பெயரில் தனிப்பட்ட நபரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது’ என உத்தரவிட்டது.
கருப்பை வாய் புற்றுநோயை தடுக்க சிறுமிகளுக்கு செலுத்தப்படும், ‘ஹெச்பிவி’ தடுப்பூசிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. ‘தேசத்தின் கோடிக்கணக்கான பெண்களின் ஆரோக்கியம் சார்ந்த இந்த முக்கிய திட்டத்தை முடக்க முயற்சிக்க வேண்டாம்’ என, மனுதாரருக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. அதே சமயம் தடுப்பூசி செலுத்திய பின் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் வழக்கமான இழப்பீட்டு விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி வழக்கை முடித்து வைத்தது.
‘நாடு முழுதும் காலியாக உள்ள, ‘சூப்பர் ஸ்பெஷாலிட்டி’ எனப்படும், உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களை நிரப்பும் வகையில், ‘கட் ஆப்’ மதிப்பெண் சதவீதத்தைக் குறைப்பது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்’ என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் தொடரப்பட்ட இவ்வழக்கை நேற்று விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘தமிழகத்தில் உள்ள 40 இடங்கள் உட்பட, நாடு முழுதும் நிரப்பப்படாமல் உள்ள 1,800 காலியான இடங்கள் வீணாகி விடக் கூடாது’ என, சுட்டிக்காட்டியது. இது தொடர்பாக மத்திய அரசின் முடிவை அறியும் வகையில், வழக்கு விசாரணை வரும் 15-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.