தண்ணீர் திறக்காவிட்டால்... விவசாயிகளுக்கு நிவாரணம் அறிவிக்கணும்: மதுரை மாவட்ட விவசாயிகள் எதிர்பார்ப்பு

மதுரை: ''மாவட்டத்தில் ஓராண்டாக ஒருபோக, இருபோக நெல் சாகுபடிக்கு தண்ணீரில்லை. செப்டம்பரில் தண்ணீர் திறக்காவிட்டால் வறட்சி மாவட்டமாக அறிவித்து நிவாரணம் வழங்க வேண்டும்'' என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
2017 ம் ஆண்டுக்கு பின் மதுரை மாவட்டம் மீண்டும் வறட்சியை சந்தித்துள்ளது. பேரணை முதல் கள்ளந்திரி வரையான 45ஆயிரம் ஏக்கர் இருபோகத்திற்கு ஆண்டுதோறும் ஜூன் 1, செப். 15 ல் வைகை அணையில் இருந்து பாசனத்தண்ணீர் திறக்கப்படும். அணையில் 4000 மில்லியன் கனஅடி தண்ணீர் இருந்தால் தொடர்ந்து 45 நாட்களுக்கும், அதன்பின் ஐந்து நாட்கள் திறப்பு, ஐந்து நாட்கள் அடைப்பு என 120 நாட்களுக்கு முறைப்பாசனம் வைத்தும் தண்ணீர் திறக்கப்படும்.
மேலுாரில் 85 ஆயிரம் ஏக்கர், திருமங்கலத்தில் 19 ஆயிரத்து 500 ஏக்கருக்கான ஒருபோக பாசனத் தண்ணீர் செப். 15ல் திறக்கப்படும். ஒருபோக சாகுபடிக்கு அணையில் 6000 மில்லியன் கனஅடி தண்ணீர் இருந்தால் தான் தண்ணீர் திறக்கப்படும்.
2026 ஜூன் 1 ல் இருபோக பகுதிக்கான முதல்போகத்திற்கு 4000 மில்லியன் கனஅடி தண்ணீர் இல்லாததால் தண்ணீர் திறக்கவில்லை. கிணறு வசதியுள்ள விவசாயிகள் சிலர் மட்டும் சொற்ப அளவில் நெல் சாகுபடி செய்தனர். இரண்டாம் போகத்திற்கான தண்ணீரை எதிர்பார்த்த நிலையில் தற்போது வரை தண்ணீர் திறக்கப்படவில்லை.
இதுகுறித்து நீர்வளத்துறை செயற்பொறியாளர் பிரபாகரன் கூறுகையில், ''மதுரையில் மழை பெய்கிறது. அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையின்றி நீர்வரத்து வினாடிக்கு 180 கனஅடிதான் வருகிறது. அணையில் நீர் இருப்பு 3,700 மில்லியன் கனஅடியைத் தாண்டவில்லை. இந்த அளவைக் கொண்டு 12 நாட்களுக்கு மட்டுமே தண்ணீரை திறக்க முடியும். 45 நாட்களுக்கு தண்ணீர் தொடர்ந்து கிடைக்காவிடில் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படும்'' என்றார்.
தென்கரை நீரினைப்பயன்படுத்துவோர் சங்கத் தலைவர் முருகன் கூறியதாவது: முதல்போகம் ஏமாற்றியது, இரண்டாம் போகத்தை எதிர்பார்க்கிறோம். அணையில் தண்ணீர் குறைந்து கொண்டே வருவது வேதனையாக உள்ளது. அக்டோபர் முதல் வாரத்தில் தண்ணீர் திறந்தால் கூட நெல் சாகுபடி செய்ய தயாராக உள்ளோம்.
தண்ணீர் திறக்காவிட்டால் வேளாண் துறை மூலம் மதுரை மாவட்டத்தை வறட்சி பகுதியாக மாவட்ட நிர்வாகம் அறிவிக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகளின் மானியமாக விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வீதம் நிவாரணத்தொகை வழங்க வேண்டும் என்றார்.