Politics
அமைதி முயற்சிக்கு உதவ இந்தியா தயார்: புடினிடம் பிரதமர் மோடி உறுதி

புதுடில்லி: பேச்சுவார்த்தை மற்றும் தூதரக முயற்சிகள் வாயிலாகவே மோதல்களுக்கு தீர்வு காணப்பட வேண்டும். அமைதி முயற்சிகளுக்கு இந்தியா உதவ தயார் என ரஷ்ய அதிபர் புடினிடம் பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.
டில்லியில் பிரிக்ஸ் மாநாடு நாளையும்( செப்.,12) , நாளை மறுநாளும் நடக்கிறது. இம்மாநாட்டில் பங்கேற்க ரஷ்ய அதிபர் புடின், 3 நாள் பயணமாக இன்று( செப்.,11) டில்லி வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பாரத மண்டபத்தில் பிரதமர் மோடியை, அதிபர் புடின் சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பின் போது வர்த்தகம், முதலீடு, எரிசக்தி ஒத்துழைப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். ரஷ்யா சார்பில் மூத்த அதிகாரிகள் உடன் இருந்தனர். இந்தியா சார்பில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல் மற்றும் உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
புடின், கடந்த ஆண்டு இந்தியா - ரஷ்யா இடையிலான உச்சி மாநாட்டில் பங்கேற்க டில்லி வந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த மாதம் பிஸ்கெக் நகரில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டின் இடையே புடினும், பிரதமர் மோடியும் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர்.
இந்த சந்திப்பு தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
இச்சந்திப்பு தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இரு தலைவர்களும், அரசியல் ரீதியிலான ஒத்துழைப்பு, பொருளாதாரம், பாதுகாப்பு , எரிசக்தி, விண்வெளி மற்றும் மக்களுக்கு இடையிலான உறவுகளில் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்து விவாதித்தனர். ரஷ்யாவின் சர்வதேச தொழில்துறை கண்காட்சியான '' INNOPROM India'' முதல்முறையாக இந்தியாவில் நடப்பதற்கு இருவரும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இருவரும் அக்கண்காட்சியை பார்வையிட்டனர்.
பல முனைகளில் இந்தியா - ரஷ்யா தொடர்புகள் குறித்து கருத்துகளை பரிமாறிக் கொண்டனர். மேற்காசியா போர் மற்றும் கருங்கடலில் நடக்கும் தாக்குதல் உள்ளிட்ட சர்வதேச மற்றும் பிராந்திய பிரச்னைகளில் பரஸ்பர நலன் அடிப்படையில் கருத்துகள் பரிமாற்றம் நடந்தது.
அப்போது பேச்சுவார்த்தை மற்றும் தூதரக முயற்சிகள் வாயிலாகவே மோதல்களுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தினார். அமைதி முயற்சிகளுக்கு இந்தியா உதவ தயார் எனவும் தெரிவித்துள்ளார். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேச்சுவார்த்தைக்கு பிறகு பாரத மண்டபத்தில் நடக்கும் INNOPROM( இது வழக்கமாக ரஷ்யாவில் நடத்தப்படும் சர்வதேச தொழில்துறை மற்றும் வர்த்தக கண்காட்சி ஆகும்) கண்காட்சியை இரு தலைவர்களும் நேரில் பார்வையிட்டனர். இதற்காக இரு தலைவர்களும் ஒரே காரில் பயணம் செய்தனர்.