Lifestyle and human interest
இரவில் அடிக்கடி மின்தடை நுகர்வோர்கள் சரமாரி புகார்
திருத்தணி: ‘இரவு நேரத்தில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால், தூக்கமின்றி சிரமப்பட்டு வருகிறோம்’ என, மின் குறைதீர் கூட்டத்தில், நுகர்வோர்கள் புகார் தெரிவித்தனர்.
திருத்தணி மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில், மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் செயற்பொறியாளர் சங்கர் தலைமையில் நேற்று நடந்தது. இதில், திருவள்ளூர் மின்வாரிய பொறுப்பு மேற்பார்வை பொறியாளர் ஜெயந்தி பங்கேற்று, நுகர்வோர்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்.
பின், ‘சில நாட்களாக இரவு நேரத்தில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதனால், மக்கள் நிம்மதியாக துாங்க முடியவில்லை. விவசாய மின் மோட்டார்களுக்கு சீரான மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும். புதிய மின் இணைப்புகள் உடனே வழங்க வேண்டும்’ உள்ளிட்ட பல்வேறு புகார்களை நுகர்வோர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து, மின்வாரிய பொறியாளர்கள், இளநிலை பொறியாளர்களிடம், சீரான மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மேற்பார்வை பொறியாளர் அறிவுறுத்தினார்.