கேபியின் கலைப்பயணம் -19 புஷ்பா கந்தசுவாமி

என் அப்பா வெற்றிக்கு பின்னால் என் அம்மா!
"நல்ல மனைவி நல்ல குழந்தை நல்ல குடும்பம் தெய்வீகம்!'' அப்பாவுக்கு இறைவனின் கொடை! அப்பா கே.பி.யை பற்றி எழுதும் தொடரில் அவருடைய கலைப் பயணத்திற்கு உற்ற துணையாக இருந்த ஒரு ஆத்மாவை பற்றி எழுத வேண்டியது மிக அவசியம். அவர் வேறு யாருமல்ல, அப்பாவின் வெற்றிக்கு பின்னால் இருந்த பெண்மணி சீதா லட்சுமி என்கின்ற ராஜம்... எனது அம்மா.
ஒரு கலைஞனுக்கு இல்லற வாழ்வு அமைதியாகவும் திருப்தியாகவும் அமைந்தால்தான் கலைப் படைப்புகளை முனைப்புடனும், தீவிரத்துடனும் தொடர்ச்சியாக படைத்துக் கொண்டிருக்க முடியும். வீட்டில் எப்பொழுதும் பிரச்சனை என்றால் அந்த படைப்பாளி திணறித் திண்டாடிப் போய்விடுவார். பல பேருக்கு இதுபோன்ற சூழல் அமைந்துவிடுகிறது.
ஆனால் அப்பாவுக்கு அது ஒரு கொடுப்பினை என்றுதான் சொல்லவேண்டும். கேரள பாலக்காட்டில் இருந்து வந்த பெண். நம் பக்கத்து தமிழ் முற்றும் புரியாத, பேசாத சூழல் இருந்தும், தம் பொறுப்புகளை செவ்வனே செய்தார் என் தாய்.
ஒரு புது மனைவி என்னவெல்லாம் எதிர்பார்ப்பாள்.
புது ஊரில் கடை, கண்ணி, நாடகம், சினிமா, சென்னை கடற்கரையில் பட்டாணி சுண்டல் எதுவும் கிடைக்காது. எப்போதும் அலுவலகம் விட்டால் நாடக ஒத்திகை, என்று ஓடிக் கொண்டிருப்பார் அப்பா. போதாக்குறைக்கு கணவனை இழந்து அடைக்கலம் தேடி இரு குழந்தைகளுடன் வந்திருக்கும் கணவரின் தங்கை. வசிக்கும் வீடோ ஒண்டிக் குடித்தனம்.
கூடப் பிறந்தவர்கள் யாரும் இல்லா ஒற்றைக் குழந்தை. புகுந்த வீட்டில் பஞ்சமில்லா உறவுகள். எல்லோருக்கும் குறைவில்லா எதிர்பார்ப்புகள் தான் திருமணமாகி வந்த சில நாட்களிலேயே வீட்டுப் பெண் விதவையான துர்பாக்கியம். நாத்தனார் பெண் குழந்தைகளுக்கும் ஆதரவு அளிக்க வேண்டிய நிர்ப்பந்தம். தான் இனிமேல் குழந்தைகளை பெற்று குடும்பத்தை வளர்க்க வேண்டும்.
சூழ்நிலையைப் புரிந்துகொண்டு அப்பாவுடன் வாழத் தொடங்கினாள்.
எல்லா குடும்பங்கள் போல் சண்டை சச்சரவுகள் கோபதாபங்கள் எல்லாம் உண்டு. ஆனால் அகங்காரம் ஈகோவுக்கு இடம் கொடுக்காமல் இருவரும் இருந்தனர். அப்பாவின் கற்பனைத் திறனையும் திரையுலக போட்டி பொறாமைகளை சமாளிக்கும் தைரியத்தையும் கெடாமல் அம்மா பார்த்துக்கொண்டாள்.
இன்னொரு முக்கியமான விஷயம் சொல்கிறேன். இப்போதெல்லாம் மினிமலிசம் என்று ஒரு கான்செப்ட் சொல்கிறார்கள். அதாவது தேவைக்கு அதிகமாக வைத்துக் கொள்ளாததை குறிக்கிறது. எனக்குத் தெரிந்து அம்மா அப்படித்தான் இருந்தாள். சராசரி பெண்ணின் ஆசை எதுவும் இருந்ததாக தெரியவில்லை.
தங்க வளையலோ, பட்டுப்புடவையோ, வைர அட்டிகையோ எதுவும் அவளுக்கு பெரிய விஷயமாகப் பட்டதில்லை. எனக்கு நினைவு தெரிந்து தாலி செயின் தவிர வேறு எதையும் அணிந்து நான் பார்த்ததில்லை.
எதற்காக இதை சொல்கிறேன் என்றால்... இந்த குணத்தால்தான் அப்பா பணத்துக்காக எந்த சமரசமும் செய்து கொள்ளாமல் தன் மனதுக்குப் பிடித்த படங்களை இயக்க முடிந்தது. இறுதி வரை தன்னுடைய கொள்கையிலேயே உறுதியாக நிற்க முடிந்தது.
அம்மா, அப்பாவின் மேல் காட்டிய அன்பில் ஒருவித பயம் கலந்த உரிமை தெரியும்.
அப்பா, அம்மாவிடம் காட்டிய அன்பில் குழந்தையிடம் காட்டும் பாசம் தெரியும். ராஜத்துக்கு எதுவும் தெரியாது என்ற ரீதியில்தான் அவருடைய அன்பு இருக்கும்.
அப்பாவுக்கு உடல்நலமில்லாத சமயங்களில் அம்மாவின் கவனிப்பு பிரமாதமாக இருக்கும்.
1972ல் அப்பாவுக்கு அதிக வேலைப் பளுவினாலும், இடைவிடாத புகைபிடிக்கும் பழக்கத்தினாலும் ஹார்ட் அட்டாக் வந்தபோது அம்மாவின் தைரியமும் கவனிப்பும் பசுமையாக நினைவிருக்கிறது.
அப்பா பிழைத்ததே பூர்வ ஜென்ம புண்ணியம் என்று கடவுளுக்குக் காணிக்கையாக அம்மா தன் தாலியை உண்டியலில் சேர்த்தது இதை எழுதும் சமயம் நினைவுக்கு வருகிறது.
பிறகு வந்த நாட்களில் எல்லா வெளிப்புற படப்பிடிப்புகளுக்கும் அப்பாவுக்கு துணையாக அம்மா செல்வார்கள். பள்ளி கல்லூரி விடுப்பு சமயம் நான் சென்றிருக்கிறேன்.
படங்களில் ரொமான்ஸ் விஷயங்களை வைக்கும் அப்பா வீட்டில் எப்படி என்று சிலர் கேட்பது உண்டு.
47 நாட்கள், என்று ஒரு படம். சிவசங்கரி கதை, தேவையான லொகேஷன்களை தேர்வு செய்ய பாரீஸ் சென்றபோது... அப்பா அம்மாவுக்கு தினம் போஸ்ட் கார்டு எழுதி அனுப்பத் தவறியதில்லை. அப்பா வெளியூர் செல்லும் சமயங்களில் தினம் தவறாமல் இருவரும் குட்மார்னிங் சொல்லிக்கொள்வதைக் கேட்டிருக்கிறேன்.
சண்டைகளே போட்டுக்கொள்ளாத ஆதர்ச தம்பதியாக இல்லாவிட்டாலும், இருவரும் ஒருவரையொருவர் கச்சிதமாகப் புரிந்துகொண்டு கடைசி வரை வாழ்ந்தார்கள்.
இரண்டு தம்பிகள், நான் ஆகிய மூவருக்கும் மகிழ்ச்சியான குழந்தைப் பருவத்தைத் தந்தார்கள். அப்பாவைப் பற்றி அம்மா சொன்ன சில விஷயங்கள்...
"இரவு எவ்வளவு நேரம் ஆனாலும் சரி காலையில் ஆறு மணிக்கு மேல் தூங்க மாட்டார். எழுந்ததும் பல் தேய்த்து ஒரு கப் காபி குடித்தவுடன் மற்ற வேலைகளை கவனிப்பார்.
அவர் வீட்டில் பகல் நேரத்தில் அதிக நேரம் இருப்பதில்லை. பட வேலைகளை கவனிக்க வேண்டி சென்று விடுவார். அவருக்கு ஒரு நாளைக்கு 24 மணி நேரம் என்பது போதாது. தம்முடைய உழைப்பிற்கு நேரம் போதவில்லையே என்பது அவருடைய குறை. ஒரு வினாடியையும் வீணாகக் கழிப்பதை விரும்ப மாட்டார்.
முன்பெல்லாம் அதிகமாக முன்கோபம் வரும். அப்போது யாரும் அவர் எதிரில் போக மாட்டோம். வந்த வேகத்திலேயே அது மறைந்து போய்விடும். இப்போதெல்லாம் வீட்டில் கோபம் வந்து பார்ப்பது ரொம்ப அபூர்வம்.
வீட்டில் அவருடைய புத்தகங்கள், பேனா, பேப்பர் போன்ற பொருள்கள் வைத்த இடத்தில் இருக்க வேண்டும். அவர் தேடும்போது இடம் மாறிவிட்டால் பிடிக்காது.
பலருடைய பாடல்களைப் பதிவு செய்து வைத்திருக்கிறார். எப்போதாவது அபூர்வமாக பொழுது போகாமல் இருக்கும்போது பிடித்த பாடல்களை போட்டு கேட்பார்.
வீட்டில் உட்கார்ந்து எழுதும் பழக்கம் அவருக்கு கிடையாது. அந்த நாட்களில் நாடகம் எழுத திருவல்லிக்கேணி சரஸ்வதி கான நிலையத்திற்குச் சென்று எழுதுவார். இப்ப ஆபீஸ் சென்று எழுதுவார். என்றைக்காவது அன்றைய படப்பிடிப்பிற்கு தேவையான வசனத்தை வீட்டில் எழுதிக்கொண்டு போவார். அதுவும் மிக அவசரமாக எழுத வேண்டிய சந்தர்ப்பம் ஏற்படும் போது... இப்படிச் சொல்ல அம்மாவிடம் நிறைய இருக்கு.
அம்மாவின் அப்பா எங்கள் வீட்டில் இருந்தார். அப்பா மானேஜர் மாதிரி.
அதென்ன மாதிரி?
-(சொல்கிறேன்)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)