Politics
“கார் கதவை திறந்து ஒரு வார்த்தை கேட்டிருக்க கூடாதா சி.எம் சார்..?”
என் மகன் சாகும்போது சொன்ன கடைசி வார்த்தை என் காதைவிட்டு இன்னும் போகலைங்க... ‘அம்மா, என்னை ரொம்ப அடிச்சாங்கம்மா... `வலி தாங்க முடியலை.

“சி.எம் சார்... நில்லுங்க. நீதி வேண்டும்... ஆகாஷ் டெலிசன் மரணத்துக்கு நீதி வேண்டும்!” - செப்டம்பர் 3-ம் தேதி சென்னை தலைமைச் செயலக வாசலில் முதலமைச்சர் விஜய்யின் கான்வாய் நுழையவிருந்த நேரத்தில் இந்தக் கதறல் ஒலித்தது. அடுத்த சில விநாடிகளில், பாதுகாப்புத் தடுப்புகளைத் தாண்டி எட்டுப் பேர் முதலமைச்சரின் காரை நோக்கி ஓடினார்கள். கான்வாய் பிரேக் அடிக்கப்பட்டு நின்றது. பாதுகாப்புப் படையினரும் போலீஸாரும் விரைந்து அவர்களைத் தடுத்து அப்புறப்படுத்தினர். எட்டுப் பேரும் கைதுசெய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டனர். “நீதி வேண்டும்” என்று கதறியவர்கள் யார்?
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையைச் சேர்ந்த 26 வயது பட்டியல் சமூக இளைஞரான ஆகாஷ் டெலிசன், கடந்த மார்ச் மாதம் காவல்துறை விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார். இந்த வழக்கில் ஆறு காவலர்கள்மீது கொலை வழக்கு மற்றும் எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் சி.பி.சி.ஐ.டி வழக்கு பதிவுசெய்திருக்கிறது. ஆனாலும், குற்றம்சாட்டப்பட்ட ஆறு பேரும் கைதுசெய்யப்படவில்லை என்று கூறி குடும்பத்தினர் போராடிவருகின்றனர். பலமுறை முயன்றும் முதலமைச்சரைச் சந்திக்க முடியாததால், ஆகாஷின் தாய் ஆனந்தி, தந்தை ராஜேஷ் கண்ணன் உள்ளிட்ட எட்டுப் பேர் கோட்டை வாசலில் மனு கொடுக்க ஓடிவந்தனர்.
“கார் கதவைக்கூடத் திறக்கலையே...!”
தனது கண்ணீர் வார்த்தைகளை நம்மிடம் கொட்டித் தீர்த்தார் ஆகாஷின் தாய் ஆனந்தி. “தேர்தல் சமயத்துல பிரசார மேடையில ஏறி, ‘நான் உங்க குடும்பத்துல ஒருத்தன்... நான் உங்க அண்ணன், தம்பி, புள்ளையா இருக்குற இந்த விஜய்க்கு ஒரே ஒரு வாய்ப்பு குடுங்க’ன்னு பேசினாரே நம்ம விஜய் சார்... அந்த வார்த்தையை உண்மைன்னு நம்பித்தானே நாங்களும் ஓட்டுப்போட்டு அவரை ஜெயிக்க வெச்சோம்... ஆனா ஆட்சிக்கு வந்த அப்புறம், பெத்த பிள்ளையை இழந்துட்டு நீதி கேட்டு வர்ற குடும்பத்தைப் பார்த்து ஒரு வார்த்தைகூட விசாரிக்காம, கார் கதவைக்கூடத் திறக்காமப் போயிட்டாரே!
நாங்க நேர்ல வந்து மனு குடுக்க எத்தனையோ தடவை முயற்சி பண்ணினோம். அமைச்சர்கள் நிர்மல் குமார், வன்னியரசு ரெண்டு பேரையும் சந்திச்சு மனு குடுத்தோம். ‘முதல்வரைச் சந்திக்க ஒரு அஞ்சு நிமிஷம் வாய்ப்பு குடுங்க’ன்னு கைகூப்பி அழுது கேட்டோம். ஆனா, கூட்டிட்டுப் போறோம்னு சொன்னாங்களே தவிர, செய்யவே இல்லை. மனு மேல மனுவா அனுப்பினோம்; பிரயோஜனமில்லை.
நேரா போனாலும் பார்க்கவிட மாட்டாங்கன்னு தெரிஞ்சு தான், வேற வழி தெரியாம வழியில ஓடிப்போய் மனு குடுக்க முயற்சி செஞ்சோம். ‘அண்ணே நில்லுங்கண்ணே, பேசிட்டுப் போங்கண்ணே’ன்னு உரிமையோட அழுது கத்தினேன். வண்டி நின்னதும் சி.எம் சார் இறங்கி கூப்பிட்டுப் பேசுவாருன்னு எதிர்பார்த்தோம். ஆனா, எங்களைப் பார்க்காம போயிட்டாங்க.
“நீதி கேட்டு வந்த எங்களை கைதிங்க மாதிரி அடைச்சுவெச்சாங்க!”
என் மகன் சாகும்போது சொன்ன கடைசி வார்த்தை என் காதைவிட்டு இன்னும் போகலைங்க... ‘அம்மா, என்னை ரொம்ப அடிச்சாங்கம்மா... `வலி தாங்க முடியலை. அடிக்காதீங்க’ன்னு கெஞ்சியும் கேட்காம காலை அடிச்சு உடைச்சுட்டாங்கம்மா’ன்னு சொல்லி கதறினான். முதல்ல ‘பாலத்துல இருந்து குதிச்சதாலதான் கால் உடைஞ்சது’ன்னு போலீஸ்காரங்க பச்சைப்பொய் சொன்னாங்க. ஆனா, காட்டுப் பகுதிக்குத் தூக்கிட்டுப் போய் இரும்புக் கம்பியால கொடூரமா அடிச்சு எலும்பையே உடைச்சதாலதான் இறந்திருக்கான்னு இப்போ சி.பி.சி.ஐ.டி குற்றப் பத்திரிகையிலேயே உண்மை அம்பலமாகியிருக்கு.
1,200 பக்கங்கள்கொண்ட அறிக்கையில வெறும் 12 பக்கத்தை வாங்குறதுக்கே 68 நாள் போராட்டமும், எங்களோட ரத்தக் கண்ணீரும் தேவைப்பட்டுச்சு. அதுவும் ஜூ.வி-யில செய்தி வந்த பின்னாடிதான் 12 பக்கத்தையும் கொடுத்தாங்க. நாங்க 16 பேர் மேல புகார் குடுத்தா, வெறும் 6 பேர் மேல மட்டும்தான் கேஸ் போட்டிருக்காங்க. என் மகனைக் கொன்னு ஆறு மாசமாச்சு. 6 போலீஸ்காரங்க மேல கொலை வழக்கு பதிவுசெஞ்சும், அந்த 6 பேரும் இன்னும் கம்பி எண்ணாம கம்பீரமா ஊருல சுத்திக்கிட்டு இருக்காங்க. இதுதான் நீதியா?
எங்களை மண்டபத்துக்குக் கூட்டிட்டுப்போய், கைதிங்க மாதிரி அடைச்சு வெச்சப்போகூட, ‘சாயந்தரம் சி.எம்-ஐ சந்திக்கக் கூட்டிட்டு போறோம்’னு சொன்னாங்க. மனுவைக் குடுத்துடலாம்னு நைட் ஏழரை வரைக்கும் நம்பிக்கையோட காத்திருந்தோம். ஆனா, கடைசியில ‘சி.எம் மதியமே வீட்டுக்குப் போயிட்டாரு’ன்னு சொல்லிட்டாங்க.
சி.எம் சார்... என் மகனோட மரணத்துக்கு நீதி வேணும் சார்... அந்த ஆறு பேரையும் உடனே அரெஸ்ட் பண்ணுங்க சார்...” என்று குலுங்கிக் குலுங்கி அழுதார் ஆனந்தி.
