Politics
“முதல்வர் விஜய் லண்டனுக்கு இன்பச்சுற்றுலா சென்றாரா?” - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

மதுரையில் முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி இன்று (17-09-26) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் பேசியதாவது, “தமிழக முதல்வர் தொழில் முதலீட்டை ஈர்க்க லண்டன் சென்றிருந்தார். தொழில் முதலீட்டு ஈர்ப்பதற்காக சென்ற முதலமைச்சர், துறையினுடைய அமைச்சரை அழைத்துச் செல்லவில்லை, தொழில்துறை செயலாளரையும் அழைத்துச் செல்லவில்லை. அவர் தொழில் முதலீட்டை ஈர்க்க வேண்டும் என்ற அடிப்படையில் சென்றிருந்தால். அந்த துறையினுடைய அமைச்சர், அதனுடைய துறையினுடைய செயலாளர் அழைத்துச் சென்றிருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும். ஆனால் சம்பந்தமில்லாத அதிகாரிகள் எல்லாம் அழைத்துச் சென்று தொழில் முதலீட்டு ஈர்த்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் சுமார் 32 இடங்களில் மதர்சன் நிறுவனம் உள்ளது. சென்னையில் அதற்கு அலுவலகம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அப்படி இருக்கின்ற பொழுது முதலமைச்சர் லண்டனில் மதர்சன் நிறுவனத்தோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டதாக பத்திரிக்கையில் செய்தி வந்துள்ளது. தமிழகத்தில் கிளை நிறுவனம் இருக்கின்றது. அப்படி இருக்கின்ற பொழுது இங்கேயே புரிந்து ஒப்பந்தம் போட்டிருக்கலாம். இதற்காக லண்டன் சென்று அங்கே அந்த மதர்சன் நிறுவனத்தோடு புரிந்த ஒப்பந்தம் போட்டதன் நோக்கம் என்ன என்று தெளிவுபடுத்த வேண்டும். அவர் தொழில் முதலீட்டை ஈர்க்க போயிருக்கிறாரா அல்லது, இன்பச் சுற்றுலா போயிருக்கிறாரா என்று மக்கள் கேட்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது கடுமையான மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. ஆனால் அமைச்சரை கேட்டால் தமிழகத்தில் மின்வெட்டு இல்லை என்று சொல்கிறார். அவருடைய கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொள்கின்ற கூட்டம், நிகழ்ச்சிகள், திருமாவளவன் கலந்து கொண்ட நிகழ்ச்சி, கம்யூனிஸ்ட் கட்சியினுடைய செயலாளர் சண்முகம் கலந்து கொள்கின்ற நிகழ்ச்சி, வருவாய் துறை அமைச்சர் பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கும்போது திடீரென்று மின்வெட்டு ஏற்பட்டுவிட்டது. இதுவெல்லாம் மின்வெட்டுக்கு சாட்சிகள். இப்படி இருக்கின்ற போது, தமிழகத்தில் மின்வெட்டு இல்லை என்ற கருத்தை அமைச்சர் சொல்கின்றார். ஆக்கப்பூர்வமான பணிகளை செய்து மக்களுக்கு தடையில்லா மின்சாரத்தை வழங்கப்பட வேண்டும்.
மின்வெட்டு இல்லை என்று சொல்லிக்கொண்டே மின்சாரத்துறை அமைச்சர், தமிழகத்தில் மின்சார பற்றாக்குறை இருப்பதாகவும் அதற்கு ஈடு செய்ய 2000 மெகாவாட் மின்சாரம் வெளியில் இருந்து வாங்கப்படும் என்று குறிப்பிட்டிருக்கின்றார். அப்படி மின்வெட்டு இல்லையென்றால் எதற்கு வெளிச் சந்தையிலிருந்து 2000 மெகாவாட் மின்சாரத்தை வாங்க வேண்டிய நிலை ஏன்? எதார்த்தமான நிலை, தமிழகத்தில் கடுமையான மின்வெட்டு இருக்கிறது. இரவில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதால் மக்களுடைய தூக்கத்தை தொலைத்த அரசு தமிழக வெற்றிக்கழக அரசாங்கம். ஆகவே இந்த அரசு இனிமேலாவது விழித்துக்கொண்டு மக்களுக்கு தடையெல்லாம் மின்சாரத்தை வழங்கப்பட வேண்டும்” என்று கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)




