Arts, culture, entertainment and media
மறைந்த சாலமன் பாப்பையா உடலுக்கு இறுதிசடங்கு எங்கு? எப்போது?

பட்டிமன்றப் பேச்சாளர் சாலமன் பாப்பையா (90) வயது மூப்பால் காலமானார். அவரது உடல் மதுரை தத்தனேரி மின் மயானத்தில் தகனம் செய்யப்படும். முதல்வர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.
பட்டிமன்றப் பேச்சாளரும், பேராசிரியருமான சாலமன் பாப்பையா வயது (90) மூப்பால் காலமானார். சாலமன் பாப்பையா மறைவிற்கு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலர் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சாத்தங்குடியில் எளிய குடும்பத்தில் பிறந்த சாலமன் பாப்பையா, மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறைப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். பட்டிமன்ற நடுவராக பட்டிதொட்டியெங்கும் புகழ்பெற்ற சாலமன் பாப்பையா, சிரிக்க வைப்பதுடன் சிந்திக்கவும் வைக்கும் பட்டிமன்றங்களால் மக்களின் பேரன்பைப் பெற்றார். 2021ஆம் ஆண்டு மத்திய அரசின் பத்மஸ்ரீ உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றிருந்தார்.
எழுத்தாளர், பட்டிமன்றப் பேச்சாளர், நடுவர், பதிப்பாசிரியர், நடிகர் எனப் பன்முகம் கொண்டவராக சாலமன் பாப்பையா திகழ்ந்தார். மதுரை ஞானஒளிவுபுரத்தில் வசித்து வந்த சாலமன் பாப்பையா, வயது மூப்பால் ஏற்பட்ட உடல்நலக்குறைவால், தனது 90-ஆவது வயதில் காலமானார். தமிழ்ப்புலமையால் உலகத் தமிழர்களின் உள்ளம் கவர்ந்த சாலமன் பாப்பையாவின் மறைவு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே மறைந்த சாலமன் பாப்பையாவின் உடலுக்கு இறுதிச்சடங்கு எங்கு? எப்போது? நடைபெறும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. மதுரை ஆரப்பாளையம் பகுதியிலுள்ள ஞானஒளிவுபுரம் பகுதியில் பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா வசித்த இல்லத்தில் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட உள்ளது.
நாளை காலை 10 மணி முதல் 12 மணிக்குள் மறைந்த சாலமன் பாப்பையா உடல் மதுரை தத்தனேரி மின் மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளதாக உறவினர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். தனது உடலை தகனம் செய்ய வேண்டும் என சாலமன் பாப்பையா உறவினர்களிடம் ஏற்கனவே கூறியுள்ளதாகவும், அவர் சொன்னபடியே உறவினர்கள் செய்யவுள்ளனர்.
சாலமன் பாப்பையா மறைவு குறித்து முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள இரங்கலில், தமிழின் பெருமையையும், தமிழர்களின் வாழ்வியலையும் பட்டிமன்ற மேடைகள் வழியாக உலகறியச் செய்த தமிழறிஞர் பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகுந்த துயரமும், வேதனையும் அடைந்தேன்.
தமது நகைச்சுவை கலந்த பேச்சாலும், ஆழ்ந்த தமிழ்ப் புலமையாலும், சமூகச் சிந்தனைகளை எளிய முறையில் மக்களிடம் கொண்டு சேர்த்ததோடு, பட்டிமன்றங்களை வெறும் பொழுதுபோக்கு நிகழ்வுகளாக அல்லாமல், சிந்தனையைத் தூண்டும் அறிவுத் தளங்களாக மாற்றியதில் பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்களின் பங்கு மகத்தானது. அவரது மறைவு தமிழ்கூறு நல்லுலகிற்கு ஈடுசெய்ய இயலாத பேரிழப்பாகும். அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், தமிழ் ஆர்வலர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றுள்ளார்.
