Lifestyle and human interest
கனமழையால் வெள்ளப்பெருக்கு உ.பி.,யில் 3.54 லட்சம் பேர் பாதிப்பு
லக்னோ:உத்தர பிரதேசத்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 3.54 லட்சம் பேர்
உத்தர பிரதேசத்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 3.54 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 26 மாவட்டங்களில் இருந்து 17,500 பேர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
உ.பி.,யில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். சித்ரகூட் மாவட்டத்தில் பாயும் மந்தாகினி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கரையோர மக்கள் வெளியேற்றப்பட்டனர். மந்தாகினி ஆற்றில் 443 அடி வெள்ளம் பாய்ந்த நிலையில் தற்போது நீர்மட்டம் 420 அடியாக குறைந்துள்ளது.
கனமழையால் அம்ரோஹா, அயோத்தி, ஆசம்கர், பதாயூன், பல்லியா, பாராபங்கி, பஸ்தி, சந்தோலி, பரூக்காபாத், காசிப்பூர், கோண்டா, கோரக்பூர், ஹர்தோய், காஸ்கஞ்ச், கான்பூர், லக்கிம்பூர் கேரி, மிர்சாபூர், முரதாபாத், பிலிபித், பிரயாக்ராஜ், ரேபரேலி, ராம்பூர், சந்த் கபீர் நகர், ஷாஜகான்பூர், உன்னாவ் மற்றும் வாரணாசி ஆகிய 26 மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி 3.53 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
வெள்ளத்தில் சிக்கியவர்களுக்கு உதவவும், மீட்கும் பணியிலும் 30 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புப்படை மற்றும் மாநில பேரிடர் மீட்புபடையை சேர்ந்த இரு குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
வெள்ளம் சூழ்ந்ததால் 653 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன. வீடுகளை இழந்த 17,544 பேர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 4,847 பேர் அரசு அமைத்துள்ள நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர். வெள்ளம் பாதித்த பகுதிகளில் 1,697 படகுகள் மூலம் மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்; வெள்ளத்தால் தொற்று பரவுவதை தடுக்க 1,068 மருத்துவ குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளன.
எனினும் உயிரிழப்புகள் எதுவும் ஏற்பட்டதாக தகவல் இல்லை. ஆனால் 45 ஆயிரம் விலங்குகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டவர்களை தங்க வைக்க மாநிலம் முழுதும் 1,312 முகாம்கள் தயார் நிலையில் உள்ளன.
பாதிக்கப்பட்ட 188 பயனாளிகளுக்கு அவர்களது வங்கிக் கணக்குகள் மூலம் ரூ. 7.52 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.