Lifestyle and human interest
பொது தி.நகரில் ரூ.11 லட்சம் வழிப்பறி: 4 பேர் கைது
பாண்டிபஜார்: தி.நகரில் வங்கி ஊழியரிடம் 11 லட்சம் ரூபாய் வழிப்பறி செய்த, நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து, 2.38 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
குன்றத்துார், பூபாலன் நகரைச் சேர்ந்தவர் கார்த்திகேயன், 33. இவர், எழும்பூரில் உள்ள ஐ.டி.எப்.சி., வங்கியில் பணிபுரிகிறார்.
மலேஷியாவில் உள்ள அவரது உறவினர் கூறியதன்படி, கடந்த 15ம் தேதி ஒருவரிடம் இருந்து, 11 லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டு, பைக்கில் வீடு திரும்பினார்.
தி.நகர் அடுத்த ஜி.என்.செட்டி சாலை மேம்பாலத்தில் சென்றபோது, பைக்கில் வந்த மர்ம கும்பல், கார்த்திகேயனை தாக்கி 11 லட்சம் ரூபாய் மற்றும் மடிக்கணினியை பறித்து தப்பினர்.
இது குறித்து விசாரித்த பாண்டிபஜார் போலீசார், வழிப்பறியில் ஈடுபட்ட சேலையூர் ஆனந்த செல்வன், 39, சூளைமேடு பப்லு, 35, ராமாபுரம் அருண்குமார், 29, வேளச்சேரி முகமது பைசில், 39, ஆகிய நான்கு பேரை, நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 2.38 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில், கார்த்திகேயனிடம் பணம் கொடுத்த நபரே, ஒரு கும்பலை ஏவி வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள, மேலும் மூன்று பேரை போலீசார் தேடி வருகின்றனர்.