வீராணம் ஏரியில் தண்ணீர் இருப்பு: சென்னைக்கு குடிநீர் அளவு குறைப்பு

காட்டுமன்னார்கோவில்: வீராணம் ஏரியில் கிடுகிடுவென தண்ணீர் அளவு சரிந்து வருவதால் சென்னைக்கு குடிநீர் குறைத்து அனுப்பப்படுகிறது.
கடலுார் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அடுத்த வீராணம் ஏரியில் 1.5 டி.எம்.சி (1465 மில்லியன் கன அடி) தண்ணீர் கொள்ளளவு கொண்டது. விவசாயம் டெல்டா பாசனத்திற்கு மட்டுமின்றி சென்னை குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்து வருகிறது.
கடந்த மார்ச் மாதம் ஏரியில் தண்ணீர் அளவு குறைந்து சென்னைக்கு குடிநீர் அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டது. அதனால் சென்னை குடிநீருக்காக ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் மேட்டூர் அணையில் இருந்து குடிநீருக்காக கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டு, கீழணைக்கு வந்தடைந்த தண்ணீரை வடவாற்றில் திறக்கப்பட்டு வீராணம் ஏரியில் 46.91 அடி (1,322 மில்லியன் கன அடி) தண்ணீர் சேமிக்கப்பட்டது.
இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை போதிய அளவு இல்லாததால் சில மாதங்களாக வெப்பம் அளவு அதிகரித்துள்ளது.
இதனால் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்தது. சென்னை குடிநீருக்காக வீராணம் ஏரியில் இருந்து தினமும் 73 கன அடி வீதம் தண்ணீர் அனுப்பபட்டு வந்தது. தற்போது ஏரியில் தண்ணீர் மளமளவென சரிந்து வறண்டு வருவதால் சென்னைக்கு குடிநீர் அனுப்பும் அளவும் குறைந்தது.
கடந்த 2 நாட்களாக சென்னை குடிநீருக்கு 56 கன அடி தண்ணீர் அளவில் மட்டுமே அனுப்பப்படுகிறது.
நேற்று முன்தினம் முதல் சென்னை குடிநீருக்காக கீழணையில் தேக்கி வைக்கப்பட்டிருந்த தண்ணீரை 250 கன அடி அளவில் வடவாற்றில் திறக்கப்பட்டு, வீராணம் ஏரிக்கு அனுப்பப்பட்டது.
அந்த தண்ணீர் நேற்று மாலை வீராணம் ஏரிக்கு 150 கன அடி வீதம் வந்தடைந்தது. கடும் வெப்பம் காரணமாக ஏரிக்கு வரும் தண்ணீர் போதுமானதாக இல்லை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
நேற்றைய நிலவரப்படி வீராணம் ஏரி 40.70 அடி 153.50 மில்லியன் கன அடி தண்ணீர் மட்டுமே உள்ளது.
இதனால் ஏரியில் ஒரு சில இடங்களில் மட்டுமே தண்ணீர் தேங்கி காணப்படுகிறது. ஏரியில் 95 சதவீதம் தண்ணீர் குறைந்ததால் தற்போது சென்னைக்கு அனுப்பப்படும் 56 கன அடி நீரும் வரும் நாட்களில் அனுப்ப முடியாத சூழல் ஏற்படும்.