Politics
பஞ்சமி நிலம் குறித்து பேச வி.சி.க.,வுக்கு தகுதி இல்லை பா.ஜ., தேசிய செயலர் கருத்து
சென்னை: பா.ஜ., தேசிய செயலராக பொறுப்பேற்றுள்ள வெங்கடேசனுக்கு, சென்னை, தி.நகரில் உள்ள பா.ஜ., தமிழக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நேற்று பாராட்டு விழா நடந்தது.
பஞ்சமி நிலம் விவகாரத்தில், பா.ஜ., உட்பட அனைவரும் அரசியல் செய்வதாக, வி.சி.க.,வைச் சேர்ந்த தமிழக அமைச்சர் வன்னி அரசு கூறுவதில் உண்மை இல்லை.
பஞ்சமி நிலம் குறித்து பேச, வி.சி.க.,வுக்கு தகுதியில்லை. திண்டிவனம் அருகே, தி.மு.க.,வைச் சேர்ந்த ஒருவர், கல்லுாரி கட்டும் இடம், பஞ்சமி நிலம் என போராடிய வி.சி.க., நிர்வாகிகளை, அக்கட்சி தலைவர் திருமாவளவன் நீக்கினார்.
தேர்தலில் போட்டி யிட்ட அம்பேத்கரை, காங்., மற்றும் கம்யூ., கட்சிகளே தோற்கடித்தன. எனவே, இந்த கட்சிகள், அம்பேத்கர் பெயரை உச்சரிக்கவே தகுதியற்றவை. ஆனால், அம்பேத்கருக்கு ஆர்.எஸ்.எஸ்., ஓட்டு சேகரித்த வரலாறு உண்டு.
தமிழகத்தில், ஏழாம் வகுப்பு தமிழ் பாட புத்தகத்தில், காயிதே மில்லத் வாழ்க்கை பாடத்தில், 'தமிழ் தேசிய மொழியாக வேண்டும்' என அவர் கூறியதாக இருப்பது தவறான தகவல்.
சட்டசபையில் அவர் பேசியது குறித்து ஆய்வு செய்ததில், 'உருது மற்றும் தேவநாகரி எழுத்துரு கொண்ட இந்துஸ்தானியே தேசிய மொழியாக வர வேண்டும்' என கூறி இருக்கிறார்.
தவறான தகவல்களை, மாணவர்களிடம், தமிழக அரசு விதைக்கக் கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.