மெட்ரோ ரயிலை காஞ்சி வரை நீட்டிக்க நுகர்வோர் சங்கம் முதல்வருக்கு மனு
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரை மெட்ரோ ரயில் நீட்டிக்க கோரி, நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு சங்க, காஞ்சிபுரம் மாவட்ட செயலர் வழக்கறிஞர் பெர்ரி, தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார்.
ஆன்மிக மற்றும் சுற்றுலா நகரமான காஞ்சிபுரத்திற்கு தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணியர் வந்து செல்கின்றனர். மேலும், காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதுார், ஒரகடம், மாங்கால், சுங்குவார்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான தொழிற்சாலைகள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.
இங்கு பணிபுரியும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு தினமும் சென்று வருகின்றனர்.
காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த இளைஞர்கள், சென்னை ஓ.எம்.ஆர்., சிறுசேரி, சோழிங்கநல்லுார் உள்ளிட்ட தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அமைந்துள்ள பகுதிகளுக்கும் வேலைக்காக சென்று வருகின்றனர்.
போதுமான நேரடி பொது போக்குவரத்து வசதி இல்லாததால், அவர்கள் நீண்ட நேரம் சாலை போக்குவரத்தில் பயணிக்க வேண்டியுள்ளது.
இந்நிலையில், பரந்துார் விமான நிலைய திட்டத்தை கருத்தில் கொண்டு, பூந்தமல்லியில் இருந்து ஸ்ரீபெரும்புதுார், சுங்குவாரச்சத்திரம் வழியாக பரந்துார் வரை மெட்ரோ ரயில் திட்டம் முன் வைக்கப்பட்டது.
தற்போது சுங்குவார்சத்திரம் வரை மட்டுமே திட்டமிடப்பட்டுள்ளதாகவும், சுங்குவாரச்சத்திரம் – பரந்துார் வழித்தடம் கைவிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
எனவே, பூந்தமல்லி – ஸ்ரீபெரும்புதுார் – சுங்குவார்சத்திரம் மெட்ரோ ரயில் வழித்தடத்தை பிள்ளைச்சத்திரம், சின்னையன்சத்திரம், ராஜகுளம், பொன்னேரிக்கரை வழியாக காஞ்சிபுரம் ரயில் நிலையம் வரை நீட்டிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.