Arts, culture, entertainment and media
“டெல்டா பகுதியில் மணல் குவாரிகளுக்கு அனுமதி இல்லை!”
டெல்டா பகுதி விவசாயிகள் மற்றும் பொது மக்கள் மிகுந்த மகிழ்ச்சியும் மனநிம்மதியும் அடையும் வகையில் இந்தத் தீர்ப்பு அமைந்துள்ளது.

நீதிமன்றத் தீர்ப்பால் நிம்மதி அடைந்த விவசாயிகள்!
`டெல்டா பகுதியில் மணல் குவாரிகளுக்கு இனி அனுமதி வழங்கக் கூடாது' என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், ராய முண்டான்பட்டியைச் சேர்ந்த விவசாயிகள் நலச் செயற்பாட்டாளர் வெ.ஜீவக்குமார், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், ``பாது காக்கப்பட்ட வேளாண் மண்டலமாக டெல்டா பகுதி அறிவிக்கப்பட்டுள்ளது. இது, தமிழ்நாட்டின் நெற் களஞ்சியமாகவும் விளங்கு கிறது. இந்த நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மணல் குவாரிகள் அமைக்கப்பட்டு தமிழ்நாட்டின் பிற பகுதி களுக்கு மணல் அனுப்பப்பட்டு வருகிறது. திருவையாறு தாலுகாவில் உள்ள அச்சனூர், மருவூர், கடுவெளி, மணத் திட்டை, பூதலூர் தாலுகாவில் உள்ள மாரனேரி, புத்தூர், புதுக்கரி வாரம்பாடை, கழமங்கலம், ஒரத்தூர், விண்ணமங்கலம், கல்வடி, பெரும்புலியூர் உள்ளிட்ட கிராமங்களின் ஆறுகளில் பல சட்டவிரோத மணல் குவாரிகள் இயங்கி வருகின்றன. இதனால், இந்தப் பகுதியில் இயற்கை வளங்கள் கொள்ளை போகின்றன. இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதோடு மட்டுமல்லாமல், ஆற்றுநீரின் போக்கும் பாதிக்கப்பட்டு விவசாயிகளுக்கு மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. எனவே, டெல்டா பகுதியில் எந்தவொரு மணல் குவாரி நடவடிக்கையும் மேற் கொள்ளக் கூடாது என உத்தர விட வேண்டும்’ எனக் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், சக்திவேல் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில் தாக்கல் செய்த அறிக்கையில், `இந்தப் பகுதியில் 4 லட்சத்து 40 ஆயிரத்து 335 கன மீட்டர் அளவுக்கு மணல் அள்ள அனுமதி வழங்கப்பட்டிருந் தது. கொரோனா தொற்று காரணமாக குவாரி பணிகள் நிறுத்தப்பட்டிருந்தன. கடந்த 2016 முதல் 2020-ம் ஆண்டு வரையிலும், 2021-ம் ஆண்டில் சில மாதங்கள் வரையிலும் மாட்டு வண்டிகள் மூலம் 857.2 கன மீட்டரும், லாரிகள் மூலம் 1 லட்சத்து 52 ஆயிரத்து 724 கன மீட்டர் மணலும் அள்ளப்பட்டுள்ளது. கடந்த 2023-ம் ஆண்டுக்குப் பிறகு குவாரி பணிகள் நிறுத்தப்பட்டன. அனுமதிக்கப்பட்ட மொத்த அளவான 4 லட்சத்து 40 ஆயிரத்து 335 கன மீட்டர் மணல் முழுமையாக அள்ளப்படவில்லை’ எனத் தெரிவிக்கப் பட்டிருந்தது.
அதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், ``இந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள கிராமங்களில் குவாரிகள் மூடப்பட்டு விட்டன என அரசுத் தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்தப் பகுதியில் இனி மணல் குவாரி நடத்தாமல் இருப்பதுதான் நல்லது. இந்தக் கிராமங்களில் குவாரிப் பணிகளை மேற்கொள்ள அனுமதி கோரும் எந்தவொரு விண்ணப்பத்தையும் மாவட்ட ஆட்சியர் பரிசீலிக்கக் கூடாது. இந்தப் பகுதிகளில் குவாரிகளுக்கு இனி அனுமதி வழங்கக் கூடாது’’ என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
இதுகுறித்து ஜீவக்குமாரிடம் பேசியபோது, ``டெல்டா பகுதி விவசாயிகள் மற்றும் பொது மக்கள் மிகுந்த மகிழ்ச்சியும் மனநிம்மதியும் அடையும் வகையில் இந்தத் தீர்ப்பு அமைந்துள்ளது. மணல் குவாரிகளால் விவசாயம் மற்றும் கூட்டுக் குடிநீர்த் திட்டங்களுக்குப் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டன.
தற்போது உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள இந்தத் தீர்ப்பை முன்மாதிரியாகக் கொண்டு, இனி காவிரி டெல்டா மாவட்டங்களின் எந்த ஒரு பகுதியிலும் மணல் குவாரி அமைவதைச் சட்டபூர்வமாகத் தடுக்க முடியும்’’ என்றார்.
தற்போது உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள இந்தத் தீர்ப்பை முன்மாதிரியாகக் கொண்டு, இனி காவிரி டெல்டா மாவட்டங்களின் எந்த ஒரு பகுதியிலும் மணல் குவாரி அமைவதைச் சட்டபூர்வமாகத் தடுக்க முடியும்.
