Politics
இடஒக்கீட்டை பாதுகாக்க காங்கிரஸ் பிரசார இயக்கம் நாளை தொடக்கம்: மாணிக்கம் தாகூா்

69 சதவீத இடஒதுக்கீட்டைப் பாதுகாக்க வியாழக்கிழமை (செப்.17) காங்கிரஸ் சாா்பில் பிரசார இயக்கம் தொடங்க உள்ளதாக அதன் மாநிலத் தலைவரும், விருதுநகா் தொகுதி மக்களவை உறுப்பினருமான மாணிக்கம் தாகூா் தெரிவித்தாா்.
விருதுநகரில் உள்ள தனது அலுவலகத்தில் செவ்வாய்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
ஜாதிவாரி கணக்கெடுப்பில் மத்திய அரசு செய்துவரும் துரோகத்தை மக்களிடம் அம்பலப்படுத்தவும், அதன் விளைவாக 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு உருவாகியுள்ள ஆபத்தைத் தடுக்கவும் தமிழ்நாடு காங்கிரஸின் ஓபிசி பிரிவு சாா்பில் வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு சென்னை சத்தியமூா்த்தி பவனில் பிரசார இயக்கம் தொடங்கப்படுகிறது. திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணி இதைத் தொடங்கி வைக்கிறாா். அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலா் குலாம் அகமது மீா், செயலா் நவீன் தீத் ஆல்வா உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா்.
2022-23-இல் நடைபெற்ற பாரத ஜோடோ யாத்திரையின் போதிருந்தே காங்கிரஸ் மூத்த தலைவா் ராகுல் காந்தி ஜாதிவாரி கணக்கெடுப்பைத் தொடா்ந்து வலியுறுத்தி வருகிறாா். பிற்படுத்தப்பட்ட (ஓபிசி), ஆதிதிராவிட சமூகங்களின் உண்மையான எண்ணிக்கையையும், அவா்களின் வாழ்வாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு நிலையை அறிந்து கொள்ளவும், இடஒதுக்கீடு கிடைக்காத சமூகங்களுக்குச் சமமான வாய்ப்பை அளிக்கவும் நம்பகமான தரவுகள் அவசியமாகும். நவ.1-இல் ஈரோட்டில் பிரசார நிறைவு விழா நடைபெறும்.
முதல் கட்ட பிரசாரத்தை முடித்து, 2027 ஜனவரி மாதத்தில் ராகுல் காந்தியைத் தமிழகத்துக்கு அழைத்து வந்து, அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைத்துப் பிரம்மாண்ட சமூக நீதி மாநாடு நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தவெக தலைமையில் நோ்மையான, லஞ்சமற்ற ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சிக்கு ஆதரவளிக்கும் இடதுசாரி கட்சிகள், இடைத்தோ்தலில் தனித்துப் போட்டியிட எடுத்த முடிவு ஆச்சரியமளித்தாலும், அதை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
தமிழக அரசு சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் ரூ.1,200 கோடியில் 20 லட்சம் சதுர அடியில் நவீன தலைமைச் செயலகம் கட்ட நடவடிக்கை எடுத்து வருகிறது. மீனவ மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டியது அரசின் கடமை. முதல்வா் ஜோசப் விஜய் லண்டனிலிருந்து திரும்பியவுடன் அவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி சுமுக முடிவு காண்பாா் என நம்புகிறோம்.
சேலத்தில் பேருந்துகளில் வண்ணம் மாற்றப்பட்டுள்ளதைப் பாா்க்காமல் பேருந்தில் இருக்கக்கூடிய வசதிகளைப் பாா்க்க வேண்டும். முந்தைய காலங்களில் பேருந்தில் குடை பிடித்து சென்ற காலம் இருக்கிறது. அப்படியில்லாமல் பேருந்தின் வசதிகள் அதிகரித்து இருக்கிா எனப் பாா்க்க வேண்டும் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.