Economy, business and finance
ஓய்வு பெற்ற விஞ்ஞானி வீட்டில் நகை, பணம் திருடியவர் கைது
சென்னை: கல்பாக்கம் அணுமின் நிலையத்தின் ஓய்வு பெற்ற விஞ்ஞானி வீட்டில், 17 சவரன் நகை, 2.40 லட்சம் ரூபாய் திருடிய கிஷோர்குமார், 29, என்பவரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை, அபிராமபும் பசுமை வழிச்சாலையை சேர்ந்தவர் ஸ்ரீதர், 72; கல்பாக்கம் அணுமின் நிலைய ஓய்வு பெற்ற விஞ்ஞானி. இவர், மனைவியுடன், கடந்த ஆக., 25ம் தேதி வடமாநிலங்களுக்கு சுற்றுலா சென்று, 31ம் தேதி வீடு திரும்பினார்.
அப்போது, வீட்டில் இருந்த பீரோவின் சாவி காணாமல் போயிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, மாற்று சாவி மூலம் பீரோவை திறந்த போது, 17 சவரன் நகை, 2.40 லட்சம் ரூபாய் திருடு போனது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின்படி, அபிராமபுரம் போலீசார், ஆயிரம்விளக்கு, சுதந்திரா நகரைச் சேர்ந்த கிஷோர்குமார், 29, என்பவரை கைது செய்து விசாரித்தனர்.
அதில், ஸ்ரீதர் வீட்டின் பால்கனி வழியாக வீட்டிற்குள் நுழைந்து, பீரோ சாவியை எடுத்து, நகை, பணம் திருடியது தெரியவந்தது. அவரிடமிருந்து, 17 சவரன் நகை, 2.40 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.