Politics
'ஊழலை ஒழிப்பது மிகச் சாதாரணம் இல்லை...'-முன்னாள் ஐஏஎஸ் சகாயம் பேட்டி

கோயம்புத்தூரில் நடைபெற்ற ஊழல் எதிர்ப்பு அமைப்பின் முக்கியக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம், தமிழ்நாட்டில் புதிதாகப் பதவியேற்றுள்ள தவெக அரசு மற்றும் முதலமைச்சர் விஜய்யின் ஊழல் ஒழிப்பு நிலைப்பாடு குறித்து கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.
அவர் பேசுகையில், "தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சரே நேரடியாக முன்வந்து, 'நான் ஊழலை ஒழிப்பேன்; பொதுச் சொத்துக்களைத் தொடமாட்டேன், மற்றவர்களையும் தொட விடமாட்டேன்' என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருப்பது மிக மிக வலிமையான ஒரு சொற்றொடராகும். ஒரு மாநிலத்தின் முதலமைச்சரிடமிருந்து சட்டமன்றத்திலேயோ அல்லது அதற்கு வெளியிலேயோ இத்தகைய ஒரு பகிரங்கமான அறிவிப்பை நாம் கேட்பது என்பது மிகவும் வித்தியாசமான மற்றும் வரவேற்கத்தக்க ஒரு நிகழ்வாகும்.
இந்த அறிவிப்பானது தற்போதைய அரசு நிர்வாக அமைப்பில், குறிப்பாகப் பதிவுத் துறை மற்றும் வருவாய்த் துறை போன்ற பாமர மக்கள் நேரடியாக அணுகும் கீழ்மட்ட அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அதிகாரிகள் மத்தியில் ஒரு வகையான அச்சத்தை உருவாக்கியுள்ளது என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அந்த வகையில் முதலமைச்சரின் இந்த அறிவிப்பை நாம் தாராளமாக வரவேற்கலாம். இருப்பினும், இந்த ஒரு அறிவிப்பாலேயே தமிழ்நாட்டில் ஊழல் முற்றிலும் ஒழிந்துவிட்டது என்று சொல்லிவிட முடியாது. எதிர்காலத்தில் இந்த அறிவிப்பைத் தற்போதைய தமிழக அரசு எந்த அளவிற்குச் செயல்பாட்டிற்குக் கொண்டு வரப்போகிறது என்பதை நாம் போகப் போகத்தான் பார்க்க வேண்டும். ஊழலை ஒழிப்பது மிகச் சாதாரணம் இல்லை.
இன்றைய உலகமயமாக்கல் மற்றும் தனியார்மயமாக்கல் சூழலில், ஊழல் என்பது கார்ப்பரேட் மயமாக்கப்பட்டுச் சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் மிக ஆழமாக மண்டிப் போயிருக்கிறது என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். லஞ்சம் வாங்கும் இந்த அரசியல்வாதிகளோ அல்லது அதிகாரிகளோ அனைவரும் இந்தச் சமூகத்திலிருந்துதான் வருகிறார்கள். எனவே, சமூகம் எப்படி இருக்கிறதோ அப்படித்தான் அங்குள்ள அதிகாரமும், அரசு நிர்வாகமும் இருக்கும். நிர்வாகத்தைச் சமூகத்திலிருந்து பிரித்துப் பார்க்க முடியாது. அரசுத் தளத்தில் ஊழல் அதிகமாக இருக்கிறது என்றால், நம்முடைய சமூகத்திலேயே ஊழல் எண்ணம் மலிந்து போயிருக்கிறது என்பதை நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.
தவறுகளை ஒப்புக்கொள்வதே முன்னேற்றத்திற்கான முதல் படியாகும். 'அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்' என்று சிலப்பதிகாரத்தில் முழங்கிய சமூகம் நமது தமிழ் சமூகம். 'அறத்தான் வருவதே இன்பம்' என்று உலகிற்குப் போதித்த நேர்மை, அறம், வாய்மை மிகுந்த தமிழ்க்குடியின் அடிப்படைப் பண்புகள் இன்றைக்கு இந்த ஊழல் சிந்தனையால் மங்கிப் போயிருப்பது வேதனையானது. எனவே, ஊழலை முற்றிலுமாக ஒழிக்க வேண்டுமானால், அந்த மாற்றம் முதலில் சமூகத்தில் உள்ள ஒவ்வொரு தனிமனிதனிடமிருந்தும், குடிமகனிடமிருந்தும் தொடங்கப்பட வேண்டும்'' என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)