Religion
கேதார்நாத் உருவான கதை: மகாபாரதம் சொல்லும் நரநாராயணர் அவதாரம்!

மகாபாரதத்தின் முக்கிய கதாபாத்திரங்களான கிருஷ்ண பரமாத்மாவும் அர்ஜுனனும் நரநாராயணர்களே என்கின்றன புராணங்கள். மகாவிஷ்ணுவின் அம்சஸாவதாரங்களில் நரநாராயண அவதாரம் குறிப்பிடத்தக்கது என்கின்றன ஞானநூல்கள்.
நரநாராயண அவதாரச் சிறப்பை நாம் அறிவது அவசியம். நர நாராயணர் என்பவர்கள் பகவான் விஷ்ணு எடுத்த இரட்டை அவதாரம். நரன் என்பது மனிதத் தன்மையையும், நாராயணா என்பது தெய்வத் தன்மையையும் விளக்குவது.
‘நர நாராயணன்’ என்பது மனிதனும் தெய்வமும் இணைந்த சக்தியைக் குறிப்பிடுவதாகும். நாராயணன் என்கிற தெய்வத்திடமிருந்து எந்நாளும் பிரிக்கமுடியாத மனித சக்தியைக் குறிப்பதே நரநாராயண அம்சம் என்பார்கள் பெரியோர்கள்.
தெய்விக உணர்வோடு, இறைவனை அறிந்து பூரண ஞானம் பெற்ற மனிதன்தான் நரர்களில் நாராயணன். தன்னலமில்லாமல் மனிதநேயத்துடன் வாழ்ந்து தர்மத்தைக் காக்கின்றவனே நரநாராயணன் என்றும் சிலாகித்துச் சொல்வார்கள்.
சரி, இவர்களைப் பற்றி புராணங்கள் சொல்லும் திருக்கதைகள் என்ன என்று தெரிந்துகொள்வோமா?
விஷ்ணு புராணத்திலும் சிவபுராணத்திலும், வாமன புராணத் திலும், ராமாயண- மகாபாரத காவியத்திலும் இந்த நரநாராயண அவதாரத்தின் பெருமை விளக்கப் படுகிறது.
சிருஷ்டி காலத்தில் பிரம்மதேவன் தனது மார்பிலிருந்து தர்ம தேவனை சிருஷ்டித்தான். தர்மங்களையும் நியாயங்களையும் காப்பாற்றும் பொறுப்பு அந்தத் தேவனுக்குத் தரப்பட்டது. தர்மதேவன் தட்சப்பிரஜாபதியின் பத்து புத்திரிகளை மணந்து, அற்புதமான புதல்வர்களைப் பெற்றான்.
அவர்களில் ஹரி, கிருஷ்ணா, நரன், நாராயணன் ஆகியோர் குறிப்பிடத் தக்கவர்கள். ஹரியும் கிருஷ்ணனும் பிரம்ம ஞானம் பெற்ற யோகிகளாகி, உலகம் உய்ய தவம் இயற்றலாயினர். நர நாராயணர்கள் முற்றும் துறந்த முனிவர்களாகி, இமயத்தில் அமைந்த பத்ரிகாஸ்ரமத்தில் தவம் மேற்கொண்டனர். பத்ரிகாஸ்ரம் என்பதே இன்றைய பத்ரிநாத் க்ஷேத்திரம். மனித இனத்துக்கு அமைதியும் சாந்தியும் ஏற்பட பன்னெடுங்காலம் நர நாராயணர்கள் இங்கே தவம் செய்தனர்.
அவர்களின் தவவலிமை எல்லா உலகங்களிலும் பிரதிபலித்தது. தேவர்களின் தலைவனான தேவேந்திரனை இது பாதித்தது. தனது இந்திர பதவியை அடைய யாரோ அசுரர்கள் கோர தவம் செய்வ தாக அவன் எண்ணினான். தனது பதவியையும் தேவலோகத்தையும் காப்பாற்ற நினைத்த தேவந்திரன், நர நாராயணர்களின் தவத்தைக் கலைக்க முயற்சி செய்தான்.
முதலில் தேவேந்திரன் காமதேவனை அனுப்பி, நர நாராயணர்கள் மனத்தில் ஆசையை உருவாக்க முயற்சி செய்தான். காமதேவனுக்குத் துணையாக சில அப்ஸர கன்னிகளையும் அனுப்பி னான். ஆனால், நர நாராயணர்களை எந்தவிதத்திலும் அவர்களால் அணுக முடியவில்லை. ஒரு குறிப்பிட்ட தருணத்தில், தவத்திலிருந்த நாராயணர் தனது துடையைக் கையால் ஓங்கி அடித்தார். அதிலிருந்து சௌந்தர்யமும் தேஜஸும் மிக்க ஓர் அப்ஸரப் பெண் தேவதை தோன்றினாள். அவளது அழகிய தோற்றத்தைக் கண்டு இந்திரனும், காமனும், மற்ற தேவதேவியர்களும் திகைத்து நின்றனர். துடையிலிருந்து தோன்றிய அந்தத் தேவதைக்கு ‘ஊர்வசி’ என்று பெயரிட்டு அழைத்தார் நாராயணர். ‘ஊரு’ என்றால் துடை என்று பொருள்.
தங்கள் தவத்தின் நோக்கத்தை நர நாராயணர்கள் தேவேந்திரனி டம் எடுத்துக்கூற, அவன் தன் தவற்றுக்கு வருந்தி, அவர்களின் ஆசி கோரினான். அப்போது கலைத்திறமை அனைத்தும் கொண்ட ஊர்வசியை தேவேந்திரனிடம் ஒப்படைத்தார் நாராயணன். அவள் தேவலோகத்தின் இசை நடனக் கலைஞராகி, தேவர்களுக்குச் சேவை செய்ய ஆரம்பித்தாள்.
நர நாராயணர்களை வணங்கிய தேவேந்திரன், தேவலோகத் திலிருந்த அமிர்த கலசத்தை அவர்களிடம் ஒப்படைத்து, பாதுகாப்பாக வைத்திருந்து, தேவர்களும் தர்மவான்களும் அதனால் பயனடைய வழிசெய்யுமாறு வேண்டினான். அவர்களும் அதற்கு ஒப்புக்கொண்டு, தேவர்களை ஆசீர்வதித்துத் தங்கள் தவத்தைத் தொடர்ந்தனர்.
பிறகு, மற்றொரு சம்பவம் நிகழ்ந்தது. அது, நரநாராயணர்களை சிவபெருமானோடு இணைத்த சம்பவம்.
சிவபெருமானை ஒதுக்கிவைத்துவிட்டு தட்சன் பெரும் யாகத் தைத் தொடங்கினான். சிவபெருமானின் பத்தினியும், தட்சனின் மகளுமான தாட்சாயினி அந்த யாகத்துக்குச் சென்று, தன் தந்தை செய்யும் தவற்றைச் சுட்டிக்காட்டி வாதிட்டாள்.
கோபம் அடைந்த தட்சன், மகளென்றும் பாராமல் அவளை நிந்தித்தான். தாட்சாயினி ‘தட்ச யாகம் அழியட்டும்’ என்று சாபமிட்டு, யாகசாலையில் பிராணத் தியாகம் செய்தாள். இதனால் கோபமடைந்த சிவபெருமான், வீரபத்திரர் வடிவில் தோன்றி யாக சாலையை அழித்த திருக்கதையை நாமறிவோம்.
அப்போது அவர் கையிலிருந்து புறப்பட்ட திரிசூலம் தீயைக் கக்கிக்கொண்டு விண்ணில் கிளம்பியது. நேராக அது பத்ரிகாஸ்ரமம் அடைந்து, அங்கே ஆழ்ந்த தவத்திலிருந்த நாராயணர் மார்பில் தாக்கியது. ஆனால், நர நாராயணர்களைச் சுற்றியிருந்த தவ மண்டலத்தின் சக்தியால் திரிசூலம் திசை திரும்பி சிவபெருமானையே தாக்கியது. அப்போது சிவபெருமான் தலை முடிக்கற்றை திரிசூலத்தின் வெப்பத்தால் கருகியது.
அதனால், அது காய்ந்த வைக்கோல் போல ஆனது. இதனால் சிவனுக்கு ‘முஞ்சகேசன்’ என்ற பெயர் ஏற்பட்டது. ‘முஞ்ச’ என்றால் காய்ந்த புல் என்று பொருள். இந்த நிலையில் தேவர்கள் சிவபெருமானைச் சாந்தப்படுத்த முனைந்தனர்.
அப்போது சிவபெருமான், ‘’நர நாராயணர்களின் தவவலிமையை உலகுக்கு எடுத்துக்காட்டவே நான் இந்தத் திருவிளையாடல் புரிந்தேன். நர நாராயணர் களின் தவம் என்னைச் சாந்தப் படுத்தி விட்டது. பத்ரிகாஸ்ரமம் அருகிலேயே நானும் அமர்ந்து, என் பக்தர்களுக்கு அருள்பாலிப் பேன். நான் அமர்ந்த இடம் ‘கேதார்நாத்’ என்று பெயர் பெறும். பத்ரிகாஸ்ரமத்தில் எனது திரிசூலம் விழுந்த இடத்தில் வெந்நீர் ஊற்றுகள் தோன்றி, காலம் காலமாக இங்கு வரும் பக்தர்களின் நோய் தீர்க்கும் தீர்த்தமாகச் செயல்படும். தேவர்களும் மனிதர்களும் வழிபடும் விஷ்ணு- சிவ ஸ்தலங்களாக பத்ரிநாத்தும் கேதார்நாத்தும் திகழும்’’ என்று கூறி அருளினார். நர நாராயணர்களின் தவம் தொடர்ந்தது.
இந்த நர நாராயணர்களே துவாபர யுகத்தில் அர்ஜுனனாகவும் கிருஷ்ணனாகவும் தோன்றினார்கள் என்கிற விவரம் மகாபாரதத்தில் உள்ளது. கிருஷ்ணனின் அனுக்கிரஹத்தால் அர்ஜுனன் உயர்வு பெற்றான் என்பதை நாமறிவோம். அர்ஜுனன் பற்றிய ஒரு சம்பவம் நம்மை வியக்கவைக்கும்!
ஒருமுறை, அர்ஜுனனின் பெருமையை அறிந்த இந்திரன், தேவலோகம் வரும்படி மாதவியின் மூலம் அவனுக்கு அழைப்பு விடுத்தான். அர்ஜுனனும் தேவலோகம் சென்றான். அங்கே... ஊர்வசியைச் சந்தித்தான். அவள், அர்ஜுனனை விரும்பி னாள்! ஆனால் அர்ஜுனன், அவளை ஏற்கவில்லை.
‘`குந்தி, மாத்ரி, இந்திராணி ஆகியோர் என் தாயார்கள். நீங்களும் என் தாய்தான். புரு வம்சத்தில் உதித்த மன்னன் புரூரவாவின் மனைவி நீங்கள். என் தாயும் அதே வம்சத்தில் தோன்றியவள்தான். ஆக, தங்களைத் தாயாகக் கருதி நான் போற்ற வேண்டும். தனயனாகிய எனக்கு நீங்கள் அருள் பாலிக்க வேண்டும்!’’ என்று தன் நிலையை விளக்கினான்.
ஆனால், ஊர்வசி கோபமுற்றாள். ‘ஓராண்டு காலம் ஆண்தன்மை இழந்து, அல்லல்படுவாய்’ என்று அர்ஜுனனை சபித்தாள். அர்ஜுனன் கலங்கவில்லை. உவப்போடு ஏற்றுக்கொண்டான். அதைப் பெறும் பேறாகவே கருதினான். பிறப்பில் - நிலையில் எந்தவித பேதமும் தாழ்ச்சியும் கிடையாது என்பது அவனடு நிலைப்பாடாக இருந்தது.
பிற்காலத்தில்... பாண்டவர்கள் வனவாசத்துக்குப் பிறகு ஒரு வருட காலம் அஞ்ஞாதவாசம் புரியும் நிலை ஏற்பட்டது. எவரும் அடையாளம் காணமுடியாத உருவில் உலவ வேண்டிய சூழல். விராடதேசத்துக்குச் சென்றார்கள். விராட மன்னனின் அரண்மனை யில் கங்க பட்டர் எனும் ராஜகுருவாக, மன்னனுக்கு ஆலோசனை தரும் பணியில் இருந்தார் தருமர். பீமன் பலாயனன் எனும் பெயரில் சமையற்காரனாகப் பணி புரிந்தான்.
நகுலன் தாமகிரந்தி என்ற பெயரில் குதிரைப் பராமரிப்பாளனா கவும், சகாதேவன் தந்திரிபாலன் என்ற பெயரில் பசுப் பராமரிப்பாளனாகவும் பணி புரிந்தனர். பாஞ்சாலியோ, சைரந்திரி எனும் பெயரில் விராட அரசியின் தோழியாய் இருந்தாள். இந்தத் தருணத்தில்தான் அர்ஜுனன், ஊர்வசியின் வாக்கைப் பலிக்கச் செய்தான். தனது சுய உருவைத் தொலைத்து, பிருஹன்னளை என்ற பெயரில் திருநங்கையாக மாறி மிளிர்ந்தான்.
அவர்கள் அங்கிருந்த காலத்தில்தான் விராட தேசத்தின் மீது படையெடுத்து வந்தன அஸ்தினாபுரத்தின் பெரும் சேனை. விராட இளவரசனோடு பிரஹன்னளையாக ரதம் ஓட்டிச் சென்ற அர்ஜுனன், பெரும் வெற்றியைத் தேடித் தந்தான் என்கிறது மகாபாரதம்!
