Politics
லஞ்ச ஒழிப்பு துறை கைவிரிப்பால் தப்பி ய கட்டிங் அதிகாரி!

“மீனவர் சமுதாயத்துக்கு பதவி வழங்க முடிவு பண்ணியிருக்கா ஓய்...” என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் குப்பண்ணா.
“எந்த கட்சியில பா...” என பட்டென கேட்டார் அன்வர்பாய்.
“சென்னை, திருவொற்றியூர் த.வெ.க., - எம்.எல்.ஏ., செந்தில்குமார், மீனவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்... இவரை எதிர்த்து அரசியல் செய்ய, தி.மு. க., - அ.தி.மு.க., வில் சரியான தலைமை இல்லாம, தொண்டர்கள் திண்டாடிண்டு இருக்கா ஓய்...
“த.வெ.க., - எம்.எல்.ஏ.,வை சமாளிக்க, அதே மீனவர் சமுதாயத்தைச் சேர்ந்தவாளையே, மாவட்டச் செயலர்களா நியமிக்கணும்னு ரெண்டு கட்சி தொண்டர்களும் கேக்கறா... அந்த வகையில, 'தி.மு.க.,வில் முன்னாள் எம்.எல்.ஏ.,வான கே.பி.சங்கரும், அ.தி.மு.க.,வில் முன்னாள் எம்.எல்.ஏ., குப்பனின் மகன் கார்த்திக்கும், அவாவா கட்சிகளுக்கு மாவட்டச் செயலர்களா நியமிக்கப்படலாம்'னு, தொண்டர்கள் சொல்றா ஓய்...” என்றார் குப்பண்ணா.
“அரசு வக்கீலை ரெண்டு முறை மாத்திட்டாங்க...” என்றார் அந்தோணிசாமி.
“எந்த ஊருல வே...” என கேட்டார் பெரியசாமி அண்ணாச்சி.
“தமிழகம் முழுக்கவே, சமீபத்துல அரசு வக்கீல்கள் நியமனம் நடந்துச்சே... இந்த பதவி கள்ல பெரும்பா லும், ஆளுங்கட்சியினர் மற்றும் அவங்க கூட்டணி கட்சியினர் தான் நியமிக்கப்படுவாங்க...
“திருச்சி மாவட்டம், மணப்பாறை நீதிமன்றத்தின் அரசு வக்கீலா, பாண்டி என்பவரை நியமிச்சாங்க... ஆனா, அவர் மீது ஒரு வழக்கு நிலுவையில இருக்குன்னு தெரியவரவே, நாலே நாள்ல அந்த பதவியில் இருந்து அவரை நீக்கிட்டாங்க...
“அப்புறம் என்ன நடந்துச்சுன்னு தெரியல... 20 நாட்களுக்கு பிறகு, மறுபடியும் பாண்டியே அரசு வக்கீலா நியமிக்கப்பட்டாரு... அதுவும் ஒரு வாரம் தான்... மறுபடியும் பாண்டியை துாக்கிட்டு, அ.தி.மு.க., வில் இருந்து சமீபத்துல த.வெ.க.,வில் சேர்ந்த, வடிவேல் என்பவருக்கு அந்த பதவியை குடுத்துட்டாங்க...
“பாண்டிக்கு ரெண்டு முறை பதவி குடுத்துட்டு நீக்கியதை விட, மாற்று கட்சியில் இருந்து வந்தவருக்கு, அரசு வக்கீல் பதவி குடுத்தது, ஆளுங்கட்சியினரை அதிருப்தியில தள்ளியிருக்குதுங்க...” என்றார் அந்தோணிசாமி.
“லஞ்சம் வாங்கியவர் தப்பிச்சிட்டாரு பா...” என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்...
“கோவை மாவட்டம், சூலுார் தாலுகா, சுல்தான்பேட்டையைச் சேர்ந்த விவசாயி அருணாசலம்... இவர், தன் விவசாய தோட்டத்துல, மின் கம்பிகளை மாற்றி அமைக்க கேட்டு, மின்வாரியத்துல விண்ணப்பிச்சிருந்தாரு பா...
“இதன்படி, மின் கம்பிகளை மாற்றி அமைச்சாங்க... அப்புறமா, அவரது வீட்டுக்கு வந்த மின்வாரிய அதிகாரி ஒருத்தர், 'மின் கம்பிகளை மாத்தி அமைச்சதுக்கான செலவு'ன்னு சொல்லி, 5,000 ரூபாயை கேட்டு வாங்கிட்டு போனாரு பா...
“இதை ரகசிய வீடியோவா பதிவு செஞ்ச அருணாசலம், லஞ்ச ஒழிப்பு துறையில புகார் குடுத்தாரு... ஆனா, 'இந்த ஆதாரங்களை வச்சுக்கிட்டு எல்லாம் நடவடிக்கை எடுக்க முடியாது... லஞ்சம் வாங்குறப்ப நாங்க கையும், களவுமா பிடிச்சா தான் நடவடிக்கை எடுக்க முடியும்'னு, லஞ்ச ஒழிப்பு போலீசார் கையை விரிச்சிட்டாங்க... இதை கேள்விப்பட்டு, மின் அதிகாரி நிம்மதியா இருக்காரு பா...'' என முடித்தார் அன்வர்பாய்.
“மாரிமுத்து, இங்கன உட்காரும்...” என்றபடியே பெரியசாமி அண்ணாச்சி எழ, மற்றவர்களும் கிளம்பினர்.