Weather
பருவமழை பெய்யாததால் கவாத்து பணிகள் தீவிரம்

வால்பாறை: வால்பாறையில் பருவமழை பெய்யாததால், தேயிலை செடிகளுக்கு கவாத்து பணி தீவிரமாக நடக்கிறது.
வால்பாறையில் பல்வேறு எஸ்டேட்களில், 25 ஆயிரம் ெஹக்டேர் நிலப்பரப்பில் தேயிலை பயிரிடப்பட்டுள்ளது. இது தவிர சிறிய அளவில் காபி, ஏலம், மிளகு போன்ற பயிர்களும் பயிரிடப்பட்டுள்ளன.
இங்குள்ள எஸ்டேட்களில் தயாரிக்கப்படும் தேயிலை துாள் கோவை, கொச்சி, குன்னுார் ஏல மையத்திற்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் தென்மேற்கு பருவ மழை துவங்கியது. பருவமழை போதிய அளவு பெய்யாத நிலையில் தேயிலை செடிகள் மீண்டும் துளிர்விடத்துவங்கியுள்ளன. இதனால் பல்வேறு எஸ்டேட்களில் தேயிலை செடிகளுக்கு காவாத்து பணி நடக்கிறது.
தோட்ட அதிகாரிகள் கூறுகையில், ‘வால்பாறையில் இந்த ஆண்டு முன் கூட்டியே பருவமழை துவங்கினாலும், இடையிடையே மழை பெய்யாததால், சீதோஷ்ணநிலை மாறி, தேயிலை செடிகள் துளிர்விட்டு உற்பத்தியும் அதிகரித்துள்ளது.
சில எஸ்டேட்களில் தேயிலை செடிகளுக்கு புத்துணர்ச்சியூட்டும் வகையில், நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை இயந்திரம் வாயிலாக கவாத்து பணி நடக்கிறது. இந்த பணி நிறைவடைந்த நிலையில், 90 நாட்களுக்கு பின் தேயிலை செடிகள் மீண்டும் துளிர்விடத்துவங்கும்,’ என்றனர்.