Arts, culture, entertainment and media
பெண் போலீசிடம் வாக்குவாதம் :த.வெ.க., நிர்வாகி மீது வழக்கு
அயனாவரம்: பெண் காவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட, த.வெ.க., நிர்வாகி உட்பட மூவர் மீது, போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
அயனாவரம் மகளிர் காவல் நிலையத்தில் போலீசாக பணியாற்றுபவர் காயத்ரி. இம்மாதம், 13ம் தேதி அயனாவரம், கொன்னுார் நெடுஞ்சாலையில், திருக்குடை ஊர்வல பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.
ஊர்வலம் முடிந்த நிலையில், சாலையோரம் மது அருந்திக் கொண்டிருந்த மூவரை, வீட்டிற்கு செல்லுமாறு காயத்ரி அறிவுறுத்தினார்.
அப்போது, மூவரும் காயத்ரியை தகாத வார்த்தைகளால் திட்டி, ரகளை செய்ததாக கூறப்படுகிறது.
விசாரணையில், அயனாவரத்தைச் சேர்ந்த சட்டக்கல்லுாரி மாணவர் முகமது சஹாபுதீன், 33, வழக்கறிஞர் ஸ்ரீதர்ராஜ், 33, ஜிம் மாஸ்டரும், வில்லிவாக்கம் பகுதி த.வெ.க., நிர்வாகியுமான மதன்ராஜ், 33, ஆகிய மூவரும், ரகளை செய்தது தெரிந்தது.
இதையடுத்து, ஆபாசமாக பேசுதல், பணி செய்யவிடாமல் தடுத்தல், மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ், போலீசார் வழக்கு பதிந்து மேலும் விசாரித்து வருகின்றனர்.
