விவசாயிகளிடம் மாமூல் கேட்டதாக புகார் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., இடமாற்றம்: கடலுார் எஸ்.பி., அதிரடி
சிதம்பரம்: சிதம்பரம் தாலுகா இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டரை ஆயுதபடைக்கு இடமாற்றம் செய்து எஸ்.பி., உத்தரவிட்டார்.
கடலுார் மாவட்டம், சிதம்பரம் மற்றும் சுற்றியுள்ள பகுதி விவசாயிகள் பொன்னேரியில் கடந்த 2ம் தேதி, வண்டல் மண்ணை சிதம்பரம்- சீர்காழி புறவழிச்சாலை வழியாக டிராக்டரில் கொண்டு சென்றனர்.
அப்போது, சிதம்பரம் தாலுகா இன்ஸ்பெக்டர் இளவரசன், சப் இன்ஸ்பெக்டர் திரிபுரசுந்தரி ஆகியோர், அனுமதியின்றி வண்டல் மண் கொண்டு சென்றதாக கூறி வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
அனுமதி பெற்று வண்டல் கொண்டு வருவதாக விவசாயிகள் கூறியும் போலீசார் அதனை ஏற்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் அன்றிரவு புவனகிரி - கடலுார் சாலையான லால்புரம் புறவழிச்சாலை மேம்பாலம் அருகில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது, வண்டல் மண் கொண்டு செல்ல போலீசார் மாமூல் கேட்பதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக எஸ்.பி., விவேகானந்தா சுக்லா, துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிட்டார்.
விசாரணையில், இன்ஸ்பெக்டர் இளவரசன், தாலுகா சப் இன்ஸ்பெக்டர் திரிபுரசுந்தரி ஆகியோர் விவசாயிகளிடம் லஞ்சம் கேட்டது ஊர்ஜிதமானது. இதையடுத்து அவர்களை ஆயுதபடைக்கு இடமாற்றம் செய்து, எஸ்.பி., நேற்று உத்தரவிட்டார்.