Politics
ரூ.1.8 கோடியில் கட்டப்பட்டு, 19 வருடங்களாகப் பூட்டிக்கிடக்கிறது!

இப்போது ரூ.2.22 கோடியில் சீரமைப்பு... கோவில்பட்டி பஸ் ஸ்டாண்ட் ‘கதை’!
பஸ் இல்லாத ஸ்டாண்ட்... பயணிகள் இல்லாத நடைமேடை... ஆனால், செலவுக்கு மட்டும் பஞ்சமில்லை. 2007-ல் திறக்கப்பட்ட கோவில்பட்டி புதிய பேருந்து நிலையம், 20 நாள்களிலேயே மூடப்பட்டு, 19 ஆண்டுகளாகக் காட்சிப்பொருளாகக் கிடக்கிறது. ரூ.1.8 கோடியில் கட்டப்பட்ட கட்டடத்துக்கு, இப்போது ரூ.2.22 கோடியில் சீரமைப்புப் பணிகள் முடிந்திருக்கின்றன. ``ஓடாத பேருந்து நிலையத்துக்கு எதற்காக இந்த ‘மேக்கப்’?’’ என்று மக்கள் கேட்க, அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் சொல்லும் பதில்கள் புதுப் புதுக் கேள்விகளை எழுப்புகின்றன!
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ஊரின் மையப்பகுதியில் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம் இயங்கிவருகிறது. இந்தப் பேருந்து நிலையத்திலிருந்து 2 கி.மீ தொலைவில் கோவில்பட்டி – மதுரை பைபாஸ் சாலையில் நகராட்சி நிர்வாகம் சார்பில், 2006-ம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டு, 3.97 ஏக்கர் பரப்பளவில் ரூ.1.8 கோடி மதிப்பீட்டில் புதிய கூடுதல் பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டு, 16.07.2007 அன்று தி.மு.க ஆட்சியில் அப்போதைய துணை முதல்வர் ஸ்டாலினால் திறந்துவைக்கப்பட்டது.
நெல்லை, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர், கோவை, திருச்சி, சென்னை என புறநகர்களுக்குச் செல்லும் பேருந்துகள் இங்கிருந்து புறப்படும் வகையில், மொத்தம் 52 பேருந்துகள் நிறுத்தப்படும் வகையில் கட்டப்பட்டிருக்கிறது. 20 நாள்கள் மட்டுமே இயங்கிய அந்தப் பேருந்து நிலையம், 19 ஆண்டுகளாகியும் தற்போது வரை செயல்படாமல் வெறும் காட்சிப்பொருளாக மட்டுமே இருக்கிறது.
இது குறித்து கோவில்பட்டியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரர் ஜெயப்பிரகாஷ் நாராயணசாமியிடம் பேசினோம். “தூத்துக்குடிக்கு அடுத்தபடியாக பெரிய ஊர் கோவில்பட்டி. தனி மாவட்டமாக அறிவிக்கப்படும் அளவுக்கு எல்லா வகையிலும் தன்னிறைவும் தகுதியும் பெற்றது. இந்தப் புதிய பேருந்து நிலையக் கட்டடம் இருப்பது, கோவில்பட்டி நகராட்சிக்குச் சொந்தமான இடத்தில் என்றாலும், இனாம் மணியாச்சி ஊராட்சிக்கு உட்பட்டது. தேர்தலில் ஓட்டுக்காக மக்களிடம் கொடுத்த வாக்குறுதிப்படி, அவசரகதியில் கட்டி முடிக்கப்பட்டு பஸ் ஸ்டாண்ட் திறக்கப்பட்டது. ஆனால், நகராட்சி நிர்வாகம் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் முறையாக அனுமதியே பெறவில்லை.
`பேருந்து நிலையம் அமைக்க, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் அனுமதி பெறப்படவில்லை. புதிய பேருந்து நிலையம் சம்பந்தப்பட்ட ஆவணங்கள் எதுவும் நகராட்சி நிர்வாகக் கோப்பில் இல்லை’ என்பதை நகராட்சி நிர்வாகமே எனக்கு ஆர்.டி.ஐ-யில் பதில் கூறியிருக்கிறது. `மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்ட பேருந்து நிலையம் தொடர்பான நிர்வாகக் கோளாறுகளைச் சரிசெய்து, மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும்’ என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கும் தொடுத்தேன். ஆனால், எந்தப் பலனுமில்லை. இரவு நேரங்களில் மது அருந்தும் இடமாகவும், விரும்பத்தகாத செயல்கள் நடக்கும் இடமாகவும் இது இருக்கிறது.
கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்து விற்பனையும் படு ஜோராக இங்கே நடக்கிறது. அ.தி.மு.க ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டு, தி.மு.க ஆட்சியில் திறக்கப்பட்டதால், பேருந்து நிலையம் செயல்படாமல் மூடப்பட்டது என அரசியல்ரீதியாகக் கருத்துகள் கூறப்பட்டாலும், மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டதுதான் மிச்சம். இதைக் கண்டித்து, போராட்டம் நடத்திவந்தோம். இந்த நிலையில், நகராட்சிக் கூட்டத்தில் அவர்களாகவே தீர்மானம் நிறைவேற்றி, செயல்படாத பேருந்து நிலையத்துக்குக் கடந்த ஆண்டு ரூ.2.22 கோடி மதிப்பீட்டில் டெண்டர் விடப்பட்டு சீரமைப்புப் பணிகள் நடந்திருக்கின்றன. பேருந்துகளோ, பயணிகளோ பயன்படுத்தாத பேருந்து நிலையத்தில் நடைமேடை, கழிப்பறைகள், மின்விளக்குகள், பெயின்ட் அடித்தல், இருக்கைகள் உள்ளிட்டவை சீரமைக்கப்பட்டதாகக் கணக்கு காட்டுகிறார்கள்” என்றார்.
கோவில்பட்டி நகராட்சி ஆணையர் பணியிடம் காலியாக இருப்பதால், கோவில்பட்டி நகராட்சித் தலைவர் (பொறுப்பு) ரமேஷிடம் பேசினோம். ‘`நான் பொறுப்பு தலைவராகி ஒரு மாதம்தான் ஆகிறது. புதிய பேருந்து நிலையம் ஏன் இத்தனை ஆண்டுக்காலம் செயல்படவில்லை என்பது பற்றி எனக்குத் தெரியாது. நகராட்சி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி நடைமுறைச் சிக்கல்கள் என்னென்ன... அனுமதி பெறப்படவில்லை என்றால், எந்தெந்தத் துறைகளிடம் அனுமதி பெற வேண்டும் என்பது குறித்து ஆய்வுசெய்து, பேருந்து நிலையத்தை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
இது குறித்து கோவில்பட்டி தொகுதி எம்.எல்.ஏ-வும், முன்னாள் நகராட்சி தலைவருமான கருணாநிதியிடம் பேசினோம். “நான் கோவில்பட்டி நகராட்சித் தலைவராகப் பொறுப்பேற்ற பிறகுதான் புதிய பேருந்து நிலையத்தை இயக்குவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளத் தொடங்கினேன். பேருந்து நிலையக் கட்டடம் தற்போது முழுமையாகச் சீரமைக்கப்பட்டுவிட்டது. பேருந்துகள் இயக்கப்படுவதற்கு போக்குவரத்துத்துறை இயக்குநரை அணுகி, பேசியிருக்கிறேன். இது குறித்து சட்டமன்றத்திலும் கோரிக்கையை முன்வைக்கவிருக்கிறேன். விரைவில் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
19 வருஷமா பஸ் வரலை... 19 வருஷத்துக்குப் பிறகு செலவு மட்டும் வருது!
