சப்–கலெக்டர் அலுவலக த்தை புதுப்பிக்க திட்டம்! பாரம்பரியம் மாறாமல் புதுப்பொலிவு பெறும்

பொள்ளாச்சி: பாரம்பரிய கட்டடமான பொள்ளாச்சி சப் – கலெக்டர் அலுவலகத்தில், பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக பழைய தாலுகா அலுவலகத்துக்கு, சப் – கலெக்டர் அலுவலகத்தை மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
‘தென்னை நகரம்’ என்றழைக்கப்படும் பொள்ளாச்சி, ஆங்கிலயேர் காலத்தில், 1857ல் சப் – கலெக்டர் தலைமையில் இயங்கும் வருவாய் கோட்டமாக அறிவிக்கப்பட்டது. இக்கோட்டத்தில், திருப்பூர், உடுமலை, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தாலுகாக்கள் இருந்தன. கடந்த, 2008ல் புதியதாக உருவான திருப்பூர் மாவட்டத்தில், உடுமலை தாலுகா இணைக்கப்பட்டது.
பொள்ளாச்சி சப் – கலெக்டர் கட்டுப்பாட்டில் உள்ள பொள்ளாச்சி தாலுகாவில் இருந்து, கிணத்துக்கடவு மற்றும் ஆனைமலை தாலுகா பிரிக்கப்பட்டது.
தற்போது, நான்கு தாலுகாக்களை உள்ளடக்கிய பொள்ளாச்சி வருவாய் கோட்டம் மொத்தம், 1,344.31 சதுர கி.மீ., பரப்பளவு மற்றும் கடந்த, 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 6,37,091 மக்கள் தொகை கொண்ட பெரிய வருவாய் கோட்டமாக உள்ளது. தற்போது மக்கள் தொகை வளர்ச்சி, குடியிருப்புகள் அதிகரிப்பு காரணமாக, பத்து லட்சம் மக்கள் தொகை இருக்கலாம்.
பழமை வாய்ந்த சப் – கலெக்டர் அலுவலக கட்டடம், 150 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட கட்டடம், கடந்த தி.மு.க., ஆட்சியில், பாரம்பரிய கட்டடமாக அறிவிக்கப்பட்டு, பராமரிக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதன்படி, 3.26 கோடி ரூபாய் மதிப்பீட்டில், பொள்ளாச்சி சப் – கலெக்டர் அலுவலகம் புதுப்பிக்கப்பட உள்ளது. பழமை மாறாமல் அப்படியே மாற்றம் செய்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. பொதுப்பணித்துறை வாயிலாக இப்பணிகள் நடைபெறுகிறது.
இடம் மாறுது பொள்ளாச்சி சப் – கலெக்டர் அலுவலகம், பராமரிப்பு பணிகளுக்காக பழைய தாலுகா அலுவலகத்துக்கு தற்காலிகமாக மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக பழைய தாலுகா அலுவலகத்தில் வசதிகள் குறித்து, சப்–கலெக்டர் ராமகிருஷ்ணசாமி ஆய்வு செய்தார். அதிகாரிகள் வாயிலாக, மின் இணைப்பு மற்றும் வசதிகளை மேம்படுத்த உரிய அறிவுரைகளை வழங்கினார்.
பழைய தாலுகா அலுவலகத்தில் செயல்பட்ட கோர்ட் இடமாற்றம் செய்யப்பட்டு, தற்போது வருவாய்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்த கட்டடத்தில் வசதிகள் மேம்படுத்தப்பட்ட பின், விரைவில், அங்கு அலுவலகம் மாற்றப்படுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும், என, சப் – கலெக்டர் தெரிவித்தார்.