பட்டாபிராமில் திடீர் மழையால் 2 மணி நேரம் மின்வெட்டு
ஆவடி: பட்டாபிராம் வடக்கு பகுதியில் நேற்று இரண்டு மணி நேரம் மின்வெட்டு ஏற்பட்டு பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
அக்னி நட்சத்திரம் முடிந்து மூன்று மாதங்கள் ஆகியும் கோடை வெயிலின் வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த இரு தினங்களாக ஆவடி அருகேயுள்ள இந்து கல்லுாரி பகுதியில் உள்ள சி.டி.எச்., ‘பீடர்’ எனும் மின் ஊட்டியில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக பட்டாபிராம் வடக்கு பகுதியில் தொடர் மின்வெட்டு ஏற்பட்டது.
நேற்று முன்தினம் மாலை, ஆவடி, திருநின்றவூர், திருவேற்காடு, பூந்தமல்லி சுற்றுவட்டாரத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.
கடும் வெயிலால் அவதியடைந்த பொதுமக்கள் சற்று ஆறுதல் அடைந்தனர். மழையால் பட்டாபிராம் பகுதியில் பல இடங்களில் உயரழுத்த மின்சார வயரில் கோளாறு ஏற்பட்டது.
இதனால், சி.டி.எச்., சாலை, பாரதியார் நகர், சத்திரம், வெங்கடேஸ்வரா நகர், எம்.ஜி., சாலை, காமராஜபுரம், சார்லஸ் நகர், திரு.வி.க., நகர், நேரு நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் இரவு 9:00 மணியளவில் மின் வெட்டு ஏற்பட்டது. பொதுமக்கள் புகாரை அடுத்து, இரண்டு மணி நேரம் கழித்து இரவு 11:15 மணியளவில் மின் வினியோகம் சீரானது.
மின்வாரியத்தில் ஆட்கள் பற்றாக்குறையால், மின்வெட்டு பிரச்சனையை உடனுக்குடன் சரி செய்ய முடியவில்லை. திடீர் மழையால் ஆங்காங்கே உயரழுத்த மின் வடங்களில் ஏற்பட்ட கோளாறால் மின்வெட்டு ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இனி வருவது மழைக்காலம் என்பதால் மின் சேவை பாதிக்கப்படாமல் இருக்க மின்வாரியத்தில் போதுமான ஊழியர்களை பணியமர்த்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.