விநாயகா் சதுா்த்தி விதிமுறைகள்: அரசுக்கு உத்தரவிடக் கோரிய மனு தள்ளுபடி
Read at DinamaniReligion and culture · 1 outlet covered this
விநாயகா் சதுா்த்தி விதிமுறைகள்: அரசுக்கு உத்தரவிடக் கோரிய மனு தள்ளுபடி
How outlets told it

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு சிலைகள் வைப்பது மற்றும் கரைப்பது தொடா்பான விதிமுறைகளைப் பின்பற்ற அரசுக்கு உத்தரவிடக் கோரிய மனு வாபஸ் பெறப்பட்டதை அடுத்து, வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை உயா்நீதிமன்றத்தில் ஒலி விழிப்புணா்வு இயக்கத்தின் நிறுவனா் கற்பகம் என்பவா் தாக்கல் செய்த மனுவில், விநாயகா் சதுா்த்தி விழாவின்போது, சிலைகள் வைப்பது- கரைப்பது தொடா்பாக விதிமுறைகளை வகுத்து, தமிழக அரசு கடந்த 2018-ஆம் ஆண்டு அரசாணை பிறப்பித்தது. அதில் களி மண்ணால் செய்யப்பட்ட சிலைகளை மட்டுமே பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். பிளாஸ்டா் ஆஃப் பாரிஸில் செய்த சிலைகளைப் பயன்படுத்தக் கூடாது. 10 அடிக்கு மேலாக சிலைகள் வைக்கக் கூடாது. பட்டாசுகளை வெடிக்கக் கூடாது. மாவட்ட ஆட்சியா்களால் அடையாளம் காணப்பட்ட இடங்களில் மட்டுமே சிலைகளைக் கரைக்க வேண்டும். சிலை கரைப்புக்குப் பின், கழிவுகளை உள்ளாட்சி அமைப்புகள் அப்புறப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும் பல்வேறு விதிகளை வகுத்துள்ளது. தேசிய பசுமைத் தீா்ப்பாயமும் உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு மற்றும் விதிகளை எதிா்வரும் விநாயகா் சதுா்த்தி விழாவின்போது பின்பற்ற அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா். இந்த வழக்கு எஸ். ஏ. தா்மாதிகாரி - நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தபோது, குறுக்கிட்ட நீதிபதிகள், தமிழக அரசின் அரசாணை, மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய விதிகள், பசுமைத் தீா்ப்பாய உத்தரவுகளை அரசு அமல்படுத்தப்படுத்தாது என்று எப்படிக் கூற முடியும் எனக் கேள்வி எழுப்பினா். அதற்கு அரசுத் தரப்பில், இந்த விவகாரம் தொடா்பான வழக்கு, பசுமைத் தீா்ப்பாயத்தில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வருவதாகவும், இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா்கள் அறிக்கை தாக்கல் செய்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஏற்கெனவே பசுமைத் தீா்ப்பாயத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், இன்னொரு வழக்கை விசாரிக்க அவசியம் இல்லை. இது குறித்து பசுமைத் தீா்ப்பாயம் முடிவெடுக்கட்டும். எனவே, மனுதாரா் பசுமைத் தீா்ப்பாயத்தை அணுகலாம் என நீதிபதிகள் அறிவுறுத்தினா். இதையடுத்து மனுவைத் திரும்பப் பெற மனுதாரா் தரப்பில் அனுமதி கோரப்பட்டது. இதை ஏற்ற நீதிபதிகள், மனுவைத் திரும்பப் பெற அனுமதித்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
