ரயிலின் கழிவறையில் குழந்தை பெற்றெடுத்த பெண் - பத்திரமாக மீட்ட ஆர்பிஎஃப் போலீஸாருக்கு பாராட்டு
Read at The Hindu Tamil1 outlet covered this
ரயிலின் கழிவறையில் குழந்தை பெற்றெடுத்த பெண் - பத்திரமாக மீட்ட ஆர்பிஎஃப் போலீஸாருக்கு பாராட்டு
How outlets told it

Updated on: 12 Sep 2026, 2:55 pm1 min readசென்னை: திருவொற்றியூரில் ரயிலின் கழிவறையில் பிரசவித்த பெண்ணையும், அவரது பச்சிளம் குழந்தையையும் ஆர்பிஎஃப் போலீஸார் துரிதமாக மீட்டு மருத்துவமனையில் சேர்க்க உதவினர். இவர்களின் நடவடிக்கையை பயணிகள் வெகுவாக பாராட்டினர். பெங்களூருவில் இருந்து அசாம் மாநிலம் காமாக்யா நோக்கி புறப்பட்ட விரைவு ரயில் சனிக்கிழமை மாலை 3:48 மணியளவில் ஓட்டுநர் மற்றும் பணியாளர்கள் மாற்றத்துக்காக, திருவொற்றியூர் ரயில் நிலையத்தின் 3-வது நடைமேடையில் நிறுத்தப்பட்டது. பணியாளர்கள் மாற்றம் முடிந்து, மாலை 3:53 மணிக்கு நிலையத்திலிருந்து ரயில் புறப்பட்டது. ரயில் நகர்ந்த அடுத்த சில நொடிகளிலேயே, ரயிலின் பி-6 பெட்டியிலிருந்து யாரோ அவசரச் சங்கிலியை இழுத்ததால், அவசரமாக நிறுத்தப்பட்டது. இது குறித்து, தகவல் கிடைத்ததும், அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த தண்டையார்பேட்டை ஆர். பி. எஃப் தலைமை காவலர் ரிங்கு குமார் மீனா மற்றும் பெண் காவலர் ஜிஷா ஆகியோர் உடனடியாக சங்கிலி இழுக்கப்பட்ட பி-6 பெட்டிக்கு விரைந்தனர். அங்கு ரயிலின் கழிவறையில் ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டு, அங்கேயே அவர் ஒரு குழந்தையை பெற்றெடுத்தது தெரியவந்தது. போதிய மருத்துவ உதவியின்றி, தாயும் பச்சிளம் குழந்தையும் உடனடியாக மீட்கப்பட வேண்டிய இக்கட்டான சூழலில் இருந்தனர். நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த ஆர். பி. எஃப் காவலர்கள் இருவரும், சக பயணிகளின் உதவியுடன் கழிவறைக்குள் இருந்த தாய்க்கும் பச்சிளம் குழந்தைக்கும் முதலுதவிகளைச் செய்தனர். பின்னர், ரயில் நிலையத்திலிருந்து சக்கர நாற்காலி வரவழைக்கப்பட்டு, தாயையும் அவரது ஆண் குழந்தையையும், பதற்றத்தில் இருந்த அவரது கணவருடன் பத்திரமாக, அவசர ஆம்புலன்ஸில் ஏற்றி, ராயபுரத்தில் உள்ள அரசு மகப்பேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தாயும் குழந்தையும் நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த அவசர மருத்துவக் காரணங்களுக்காக, காமாக்யா விரைவு ரயில் திருவொற்றியூர் நிலையத்தில் சுமார் 26 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. தவிர்க்க முடியாத அவசர மருத்துவக் காரணம் என்பதால், அபராதம் விதிக்கக்கூடிய அவசரச் சங்கிலி சட்டப்பிரிவுகளின் கீழ் ரயில்வே நிர்வாகம் எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை. மேலும், ஆர். பி. எஃப் போலீஸாரின் துரித நடவடிக்கையை பயணிகள் வெகுவாக பாராட்டினர்.
