இலக்கை எட்டியதா உளவாளியின் பயணம்? சர்தார் 2 திரைவிமர்சனம்
Read at DinamaniCinema and entertainment · 1 outlet covered this
இலக்கை எட்டியதா உளவாளியின் பயணம்? சர்தார் 2 திரைவிமர்சனம்
How outlets told it

உளவாளிகளான தந்தையின் முடித்து வைக்க விரும்பிய பிரச்னை மகனின் கைக்கு வந்து என்ன ஆனது என்பதை விறுவிறுப்பும், அதிரடியுடனும் கலந்து வெளிவந்திருக்கிறது சர்தார் 2. இயக்குநர் பி. எஸ். மித்ரன் இயக்கத்தில் நடிகர்கள் கார்த்தி, மாளவிகா மோகனன், எஸ். ஜே. சூர்யா, ஆசிகா ரங்கநாத் ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கிறது சர்தார் 2. இந்தப் படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஐ. வி. ஒய் எண்டர்டெயின்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளன. சாம் சி எஸ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். இயக்குநர் பி. எஸ். மித்ரனுடன் இணைந்து நம்பி திரைக்கதை எழுதியுள்ளார். ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவும், விஜய் வேலுகுட்டி படத்தொகுப்பும் செய்துள்ளனர். சர்தார்-1 இல் தண்ணீரையும், அதனை சுற்றிய வியாபாரத்தையும் உளவுக் கதையுடன் கொடுத்த இயக்குநர் இதில் பயோ ஆயுதத்தை கதைக்களமாகக் கொண்டு படைத்திருக்கிறார். 1980களில் ஜப்பான் நாடானது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் பயோ ஆயுதம் ஒன்றைத் தயாரிக்கிறது. அதை வேறு பகுதிக்கு மாற்றும்போது இந்தியாவில் விழுகிறது. இதை அறிந்த இந்திய உளவு அமைப்பான “ரா” அதை எப்படியாவது செயலிழக்கச் செய்ய முயற்சிக்கிறது. அதற்கான வேலை உளவாளியான சர்தார் மற்றும் அவரது குழுவிற்கு வருகிறது. மிகுந்த போராட்டத்திற்குப் பிறகு அதை அவர்கள் செய்து முடிக்க அதில் ஒரு சிக்கல் ஏற்பட்டு விடுகிறது. இந்நிலையில் சில ஆண்டுகளுக்குப் பிறகு அந்த பயோ ஆயுதத்தைத் தேடி வில்லன் யோகி (எஸ். ஜே. சூர்யா) தலைமையிலான சர்வதேச கூலிப்படை இந்தியா வருகிறது. ஏன் வில்லன் அதைத் தேடி வருகிறார்? அவரைத் தடுக்க முயற்சிக்கும் சர்தாரின் மகனான உளவாளி விஜய்யின் (கார்த்தி) முயற்சி வெற்றி பெற்றதா என்பதுதான் சர்தார் 2 திரைப்படத்தின் கதை. இரட்டை வேடத்தில், அதுவும் உளவாளி தந்தை, மகனாக நடித்துள்ளார் கார்த்தி. தந்தைக்கும், மகனுக்கும் இடையேயான வேறுபாட்டைக் காட்ட மெனக்கெட வேண்டிய பொறுப்பை உணர்ந்து நடித்திருக்கிறார் அவர். எப்படியாவது ஒன்றுக்கும் உதவாத குழுவில் இருந்து பெரிய, முக்கியமான உளவுப்பிரிவில் சேர்ந்துவிட முயற்சிக்கும் மகன் கார்த்தியின் தேடல் அவரது தந்தையிடம் அவரைக் கொண்டு சேர்க்கிறது. சண்டைக் காட்சிகள், விறுவிறுப்பைக் கூட்டும் சர்தார் கதாபாத்திரம் என காட்சிக்கு வலுசேர்க்க முயற்சித்திருக்கிறார் கார்த்தி. தன்னால் நடந்த தவறுக்கு வருந்தும் இடங்களில் ஸ்கோர் செய்கிறார். அவருடன் இணைந்து மாளவிகா மோகனன், ஆசிகா ரங்கநாத், ரஜிசா விஜயன் ஆகியோர் நடித்துள்ளனர். முதல்பாதியில் வரும் விமான சண்டைக் காட்சியில் கார்த்தியுடன் சேர்ந்து உளவாளியாக சிறப்பாக நடித்துள்ளார் மாளவிகா. முக்கியமான வேலை சொதப்பியதற்காக கார்த்தியை வசைபாடும் இடங்களில் அவரின் நடிப்பு ஆர்வம் கூட்டுகிறது. படம் முழுக்க வருகிறார் ஆசிகா ரங்கநாத். பெரிய அளவு அவரது கதாபாத்திரத்திற்கான எழுத்து இல்லை என்பதால் அவருடைய நடிப்பின் எல்லைக்குள் நின்றிருக்கிறார். வில்லனுக்குண்டான மிரட்டலைக் கொடுத்திருக்கிறார் எஸ். ஜே. சூர்யா. எந்த நேரத்தில் என்ன தொல்லை கொடுப்பார் என எண்ணும் அளவிற்கு திரைக்கதை விறுவிறுப்பிற்கு பலம் கொடுத்திருக்கிறார். இவர்களுடன் நடிகர்கள் யோகிபாபு, நிழல்கள் ரவி, முனிஸ்காந்த், நாசர், பாலஜி சக்திவேல் என பலர் நடித்துள்ளனர். முதல் பாதி முழுக்க விறுவிறுப்பான தேடலுடன் செல்கிறது. விமான சண்டைக்காட்சியும், சர்தார் வெளிவரும் இடங்களிலும் காட்சிகளின் சுவாரஸ்யம் குறையாமல் கொடுத்திருக்கிறார் இயக்குநர். அதனுடன் ஒப்பிடும்போது இரண்டாம் பாதியின் நீளம் ஒருவித அசெளகரியத்தை பார்வையாளர்களுக்குக் கொடுக்கிறது. வில்லனுக்குண்டான பின்கதை பலமாக இருக்கும் அதேவேளையில் அவரின் பழிவாங்கும் படலத்திற்காக அவர் சொல்லும் ஆண்டிபயாடிக் காரணம் ஒட்டவில்லை. மிகப்பெரிய உளவு அமைப்பு ”ரா” என சொல்லிவிட்டு எல்லாம் முடிந்து வரும் தமிழ்நாட்டு திரைப்பட காவல்துறை போல அவர்களை கிளைமாக்ஸ் காட்சிகளுக்கு கொண்டு வருவது தலையை சொறிய வைக்கின்றன. இரண்டாம் பாதியில் நீளும் காட்சிகளைக் குறைத்திருக்கலாம். உளவாளிகள் மேற்கொள்ளும் உளவு நடவடிக்கைகள், அவர்களின் மர்மமான தேடுதல் வேட்டை, அதற்கான பயணங்கள் என விறுவிறுப்பையும், சுவாரஸ்யத்தையும் கொடுத்திருப்பது ஆறுதலான விசயம். பின்னணி இசையின் மூலம் தனக்கு பலமான ஏரியாவை அடித்துத் துவைத்திருக்கிறார் இசையமைப்பாளர் சாம் சி எஸ். சர்தார் 2 மூலம் 100வது திரைப்படம் கடந்திருக்கும் அவரின் இசை படத்தைத் தூக்கி நிறுத்தியிருக்கும் பக்கபலம். தொழில்நுட்பரீதியாக ஒளிப்பதிவு கைகொடுத்திருக்கிறது. படத்தொகுப்பாளர் சற்று கருணை காட்டாமல் காட்சிகளை வெட்டியிருக்கலாம். சண்டைக்காட்சிகள் அதிரடிக்கு பஞ்சம் வைக்காத உழைப்பு. உளவுக்கதையம்சம் கொண்ட திரைப்படங்களை விரும்பிப் பார்ப்பவர்களுக்கு சர்தார் 2 ஏமாற்றம் கொடுக்காத உளவாளி.SummarySardar 2 unfolds with a blend of thrill and high-octane action, revealing what happens when a mission—left unfinished by a spy father—falls into the hands of his son.
