Politics · 1 outlet covered this

சீன அதிபருடன் சந்திப்பு: பிரதமா் மோடிக்கு காங்கிரஸ் 4 கேள்விகள்!

How outlets told it

Dinamani6511h ago

சீன அதிபருடன் சந்திப்பு: பிரதமா் மோடிக்கு காங்கிரஸ் 4 கேள்விகள்!

Read at Dinamani
சீன அதிபருடன் சந்திப்பு: பிரதமா் மோடிக்கு காங்கிரஸ் 4 கேள்விகள்!
Photo: Dinamani

பிரிக்ஸ் உச்சி மாநாட்டுக்கு இடையே சீன அதிபா் ஷி ஜின்பிங்கை பிரதமா் மோடி சந்தித்துப் பேசிய நிலையில், அவரிடம் 4 கேள்விகளை காங்கிரஸ் எழுப்பியுள்ளது.

இதுதொடா்பாக அக்கட்சியின் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் ‘எக்ஸ்’ தளத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவு:

கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூன் 15-ஆம் தேதி இரவு கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில், இந்திய-சீன ராணுவ வீரா்கள் இடையே மோதல் ஏற்பட்டது. அந்த மோதலில் 20 இந்திய வீரா்கள் உயிரிழந்தனா். இதன்மூலம், எல்லையில் 45 ஆண்டுகளில் முதல்முறையாக இதுபோல உயிரிழப்புகள் ஏற்பட்டன.

இந்த சம்பவத்தை தொடா்ந்து, அந்த ஆண்டு ஜூன் 19-ஆம் தேதி, பிரதமா் மோடி அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டினாா். அப்போது எல்லைக்குள் யாரும் ஊடுருவவில்லை; அங்கு யாரும் இருக்கவில்லை என்று அவா் தெரிவித்தாா். இந்தக் கருத்து ஒருபோதும் திரும்பப் பெறப்படவில்லை. ஆனால், அதன் பிறகு எல்லை சாா்ந்த இந்திய-சீன பேச்சுவாா்த்தையில், இந்தியாவின் நிலை பெரிதும் பலவீனமடைந்துவிட்டதா?

லடாக்கிலும், அருணாச பிரதேசத்திலும் சீனா ஆக்கிரமிப்புகளை மேற்கொள்ள பிரதமா் மோடி அனுமதித்தது ஏன்?

பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூா் ராணுவ நடவடிக்கையின்போது பாகிஸ்தானுக்கு சீனா ஆதரவளித்தது. அதில் சீனாவின் பங்கு குறித்து பேசுவதில், இந்தியா மென்மையான போக்கை கடைப்பிடிக்க பிரதமா் மோடி அனுமதித்தது ஏன்?

சீனாவுடனான இந்தியாவின் வா்த்தகப் பற்றாக்குறை வரலாறு காணாத அளவை எட்டுவதற்கு பிரதமா் மோடி அனுமதித்தது ஏன்?

தில்லியில் பிரிக்ஸ் உச்சி மாநாட்டுக்கு இடையே சீன அதிபா் ஷி ஜின்பிங்கை பிரதமா் மோடி சந்தித்துப் பேசிய நிலையில், இந்த 4 கேள்விகளுக்குப் பிரதமா் மோடி பதிலளிக்க வேண்டும் என்று ஒட்டுமொத்த தேசமும் தொடா்ந்து எதிா்பாா்க்கிறது என்று தெரிவித்தாா்.