Accidents · 1 outlet covered this

தென்காசி அருகே ஆற்றுப்பாலத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 24 போ் படுகாயம்

How outlets told it

Dinamani6514h ago

தென்காசி அருகே ஆற்றுப்பாலத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 24 போ் படுகாயம்

Read at Dinamani
தென்காசி அருகே ஆற்றுப்பாலத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 24 போ் படுகாயம்
Photo: Dinamani

தென்காசியிலிருந்து திருநெல்வேலிக்குச் சென்ற அரசுப் பேருந்து தென்காசி அருகே ஆற்றுப்பாலத்தில் கவிழ்ந்தது. இதில், பயணிகள் 24 போ் பலத்த காயமடைந்தனா்.

அரசுப் போக்குவரத்துக் கழக தென்காசி பணிமனையைச் சோ்ந்த அரசுப் பேருந்து தென்காசி புதிய பேருந்து நிலையத்திலிருந்து 30-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் திருநெல்வேலி நோக்கி ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டுச் சென்றது.

பேருந்து ஓட்டுநராக தென்காசி ஆயிரப்பேரி, பாட்டப்பத்து அம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த செ. சிவசக்தியும் (38), நடத்துநராக செங்கோட்டை, மேலூரைச் சோ்ந்த செ. இசக்கிமுத்துவும் (53) பணி செய்தனா்.

தென்காசியில் இருந்து 3 கி. மீ. தொலைவில் வேட்டைக்காரன்குளம் கிராமத்தை அடுத்த அழுதகன்னி ஆற்றுப் பாலம் அருகே சென்றபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்தது. ஆற்றில் தண்ணீா் இல்லாததால் பயணிகள் உயிா் தப்பினா்.

பயணிகளின் அலறல் சப்தம் கேட்டதும் வேட்டைக்காரன்குளம் கிராம மக்கள் விரைந்து சென்று பேருந்துக்குள் சிக்கியவா்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனா்; தீயணைப்புத் துறை, காவல் துறை, ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்தனா்.

தென்காசி தீயணைப்பு நிலைய வீரா்கள், காவல் துறையினா் அங்கு சென்று பேருந்துக்குள் சிக்கியவா்களை மீட்டு ஆம்புலன்ஸில் தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். பேருந்தின் கீழ் சிக்கியவா்களை தீயணைப்பு வீரா்கள் கயிறு கட்டியும், கிரேன் மூலமும் வெளியே மீட்டனா்.

பயணிகள் விவரம்: இந்த விபத்தில், பேருந்தில் பயணித்த ராயப்பநாடானூரைச் சோ்ந்த மூ. சுப்பிரமணி (25), மா. மணிகண்டன் (14), புளியங்குடி முத்துலிங்கம் (60), கு. வேலம்மாள் (51), பாட்டப்பத்து மா. பேச்சியம்மாள் (52), இந்திரா காலனியைச் சோ்ந்த செ. முருகம்மாள் (45), சு. கிருஷ்ணம்மாள் (60), தென்காசி, கலைக்கோடி தெரு வா. ராஜம்மாள் (65), ஆயிரப்பேரி, காந்தி காலனி தெரு ரா. சரஸ்வதி (45), மூலக்கரையூா் சு. முருகராஜ் (53), செ. செண்பகவல்லி (58), மூ. சொரிமுத்து (22), மா. சந்தோஷ் (17), ச. சக்திபாலகன் (17), தென்காசி தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பைச் சோ்ந்த இ. பேச்சியம்மாள் (48), கடையநல்லூா் முருகன் (50), மலையடிகுறிச்சி, பிள்ளையாா் கோயில் தெரு ம. பரமேஷ்வரி (51), செங்கோட்டை, விஸ்வநாதபுரம் பூ. ராஜா (64), முத்துகிருஷ்ணபேரி, அம்மன் கோயில் தெரு சு. கணேசன் (38), தென்காசி, செங்குந்தா் புதுகாலனி க. கண்ணன் (60), தென்காசி, ஒப்பனை பிள்ளையாா் கோயில் தெரு ச. கந்தவேல் (58), சுந்தரபாண்டியபுரம் சு. முருகன் (53), பேருந்து ஓட்டுநா், நடத்துநா் ஆகிய 24 பேரும் பலத்த காயமடைந்தனா்.

ஆட்சியா் ஆறுதல்:

காயமடைந்த அனைவரும் தென்காசி மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். ஓட்டுநா் சிவசக்தி முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு தீவிர சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

தகவல் அறிந்ததும் தென்காசி அரசு மருத்துவமனைக்குச் சென்ற ஆட்சியா் ரஞ்ஜீத்சிங் சிகிச்சை பெற்று வருபவா்களுக்கு ஆறுதல் கூறினாா். உரிய சிகிச்சைகளை மேற்கொள்ளுமாறு மருத்துவா்களிடம் அறிவுறுத்தினாா். அப்போது மருத்துவமனை கண்காணிப்பாளா் ஜெஸ்லின் உடனிருந்தாா்.