பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற பிறகு ரஷ்யா புறப்பட்டார் அதிபர் புதின்
Read at The Hindu TamilPolitics · 1 outlet covered this
பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற பிறகு ரஷ்யா புறப்பட்டார் அதிபர் புதின்
How outlets told it

புதுடெல்லி: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்றதைத் தொடர்ந்து, புதின் தனது 3 நாள் இந்தியப் பயணத்தை நிறைவு செய்துவிட்டு நேற்று ரஷ்யா புறப்பட்டார்.
பிரிக்ஸ் கூட்டமைப்பின் 18-வது உச்சி மாநாடு, டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில் பங்கேற்பதற்காக, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தனி விமானம் மூலம் கடந்த 11-ம் தேதி டெல்லி வந்தடைந்தார்.
2-வது நாளாக நேற்று நடைபெற்ற மாநாட்டில் புதின் உரையாற்றினார். அப்போது, வர்த்தக மற்றும் தூதரக அழுத்தங்களை அரசு மட்டத்தில் தலையிடுவதற்கான கருவிகளாகப் பயன்படுத்துவதற்கு மேற்கத்திய நாடுகளை கடுமையாக விமர்சித்தார். மேலும், ரஷ்யா மீது 30,000-க்கும் மேற்பட்ட தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும், இது உலகின் மற்ற அனைத்து நாடுகள் மீதும் விதிக்கப்பட்ட மொத்தத் தடைகளின் எண்ணிக்கையை விட 2 மடங்குக்கும் அதிகம் என்றும் அவர் கூறினார்.
மாநாட்டின் இடையே ரஷ்ய அதிபர் புதினும், பிரதமர் மோடியும் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர். 2030 பொருளாதார ஒத்துழைப்பு திட்டத்தைச் செயல்படுத்துவது உள்ளிட்ட நெருங்கிய வர்த்தக உறவுகள் குறித்து இருவரும் ஆழமாக விவாதித்தனர். மேலும், உள்கட்டமைப்பு, எரிசக்தி, தொழில்நுட்பம், பாதுகாப்பு மற்றும் கலாச்சாரம் ஆகிய துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை ஆய்வு செய்தனர்.
இது தொடர்பாக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில்,‘‘பிரதமர் மோடியும் புதினும் மேற்கு ஆசியா மற்றும் கருங்கடல் பிராந்தியத்தில் நிலவும் மோதல்கள் உள்ளிட்ட முக்கிய பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்தும் கருத்துகளை பரிமாறிக்கொண்டனர். இந்த மோதல்கள் கடல்வழி வர்த்தகத்தைப் பாதித்துள்ளதோடு, இந்திய மாலுமிகளின் பாதுகாப்பு குறித்தும் கவலைகளை எழுப்பியுள்ளன. மோதல்களைத் தீர்ப்பதற்குப் பேச்சுவார்த்தை மட்டுமே ஒரே வழி என்று பிரதமர் மோடி மீண்டும் வலியுறுத்தியதோடு, அமைதி முயற்சிகளுக்கு உதவ இந்தியா தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்” என கூறப்பட்டு உள்ளது.
முன்னதாக ஆகஸ்ட் 31-ம் தேதி கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக்கில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டின் இடையே மோடியும், புதினும் சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், புதின் தனது 3 நாள் இந்தியப் பயணத்தை நிறைவு செய்துவிட்டு நேற்று மதியம் ரஷ்யா புறப்பட்டார். அவர் டெல்லியில் இருந்து ரஷ்ய அதிபருக்கான பிரத்யேக விமானமான ‘டூம்ஸ்டே’ விமானத்தில் ரஷ்யாவுக்கு புறப்பட்டு சென்றார். புதின் தனது விமானத்தில் ஏறும் காட்சிகளைக் கொண்ட காணொளியை ரஷ்ய தூதரகம் சமூக வலைதளத்தில் பகிர்ந்தது.
“80 சதவீத இந்தியர்கள் அசைவம் உண்பவர்கள்” - பிரிக்ஸ் மாநாட்டு உணவு பட்டியலை விமர்சித்த ராகுல்
