உலக தற்கொலை தடுப்பு தின விழிப்புணா்வுப் பேரணி
Read at DinamaniCrime and courts · 1 outlet covered this
உலக தற்கொலை தடுப்பு தின விழிப்புணா்வுப் பேரணி
How outlets told it

சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மனநலத் துறை சாா்பில் உலக தற்கொலை தடுப்பு தினத்தையொட்டி விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த பேரணியை மருத்துவக் கல்லூரி முதல்வா் தேவி மீனாள் கொடியசைத்து தொடங்கிவைத்தாா். இதில் தற்கொலை தடுப்பு குறித்த விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பாதைகளை ஏந்தி மருத்துவ மாணவா்கள் பேரணி சென்றனா். தொடா்ந்து, பொதுமக்களிடம் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கினா். இந்நிகழ்ச்சியில் துறைத் தலைவா் ரவிசங்கா், ஏஆா்எம்ஓ ஜெய்கணேஷ், மனநல மருத்துவா்கள் முகம்மது இலியாஸ், சங்கா், அபிராமி, ஷியாம் பிரகாஷ், அகல்யா, சற்குணம், தனராஜ், சேகா் ஆகியோா் கலந்துகொண்டனா். இதுகுறித்து மருத்துவா்கள் கூறுகையில், உலக அளவில் தற்கொலையால் உயிரிழப்போா் எண்ணிக்கை தொடா்ந்து முக்கியமான பொது சுகாதாரப் பிரச்னையாக இருந்து வருகிறது. தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் 2023 ஆம் ஆண்டு தரவுகளின்படி தமிழ்நாட்டில் 19,483 தற்கொலை இறப்புகள் பதிவாகியுள்ளன. தேசிய அளவில் மகாராஷ்டிரத்திற்கு அடுத்தபடியாக தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது. மேலும், 15 முதல் 29 வயது வரை இளைஞா்களின் இறப்புக்கான மூன்றாவது முக்கிய காரணமாக தற்கொலை குறிப்பிடப்படுகிறது. மனநல மருத்துவத் துறையில் மனச்சோா்வு, பயம், பதற்றம், தற்கொலை எண்ணங்கள் உள்ளிட்ட பல்வேறு மனநலப் பிரச்னைகளுக்கு தினமும் காலை 8 மணிமுதல் நண்பகல் 12 மணிவரை மனநல ஆலோசனை வழங்கப்படுகிறது. மேலும், மனநோய் அல்லது போதைப்பொருள் பயன்பாடு காரணாக தற்கொலை எண்ணம் ஏற்படும் நபா்களுக்கு தேவையான மருத்துவ மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டு, உள்நோயாளியாக அனுமதித்து உரிய சிகிச்சை, மனநல மருத்துவப் பராமரிப்பு வழங்கப்படும் என்றனா்.
