12000 மேடைகள் பட்டிமன்ற திலகம் பாப்பையா காலமானார்..! ‘தாய்மார்களின் உரிமை குரல்’
Read at Polimer News1 outlet covered this
12000 மேடைகள் பட்டிமன்ற திலகம் பாப்பையா காலமானார்..! ‘தாய்மார்களின் உரிமை குரல்’
How outlets told it

அன்பு பெரியோர்களே.. அருமை தாய்மார்களே .. இனிய குழந்தைகளே... என்ற அசர வைக்கும் அந்த குரலால்.. தமிழ் சொந்தங்களுக்கு பட்டிமன்ற நடுவராக பரிச்சயமானவர் முத்தமிழ் பேரறிஞர் சாலமன் பாப்பையா..!மதுரை மாவட்டம் சாத்தங்குடியில் சுந்தரம் - பாக்கியம் தம்பதியரின் மகனாக 1936 ஆம் ஆண்டு பிறந்தவர். 10ஆம் வகுப்பு படிப்பு முடித்து விட்டு மேற்படிப்பு படிக்க வசதி இல்லாமல் தவித்தார். பேராசிரியர் ஒருவர் அமெரிக்கன் கல்லூரியில் படிப்பதற்கு விண்ணப்பம் வழங்கிய நிலையில், உறவினர் ஒருவர், நகையை விற்று கொடுத்த பணத்தில், அமெரிக்கன் கல்லூரியில் சேர்ந்து படித்து பட்டம் பெற்றதோடு பின்னாட்களில் அதே கல்லூரியில் பேராசியராகவும் பணிபுரியும் வாய்ப்பை அவருக்கு வழங்கியது அவரது தமிழ்..!50 வருடங்களாக தமிழ்த்துறை தலைவராக தொடர்ந்த சாதனையாளர் சாலமன் பாப்பையா. தற்போதைய மதுரை எம். பி. யும் வேள்பாரி நாவலை எழுதியவருமான சு. வெங்கடேசன் , பட்டிமன்றம் ராஜா உள்பட ஆயிரக்கணக்கான மாணவர்களை உருவாக்கிய பெருமைக்குரியவர் சாலமன் பாப்பையா..! தமிழ்திரையுலகில் முன்னணி நாயகர்களில் ஒருவராக இருக்கும் சிவகார்த்திகேயன் தன்னுடைய கல்லூரி காலங்களில் சாலமன் பாப்பையாவின் குரலில் பேசிதான் பிரபலமானார்.. ஒரு குடும்பம் சிறக்க காரணம் கணவனா? மனைவியா?, வாழ்க்கைக்கு பெரிதும் உதவுவது உறவா? நட்பா?, செல்போன் வாழ்க்கை சவுகரியமே..! சங்கடமே..! என்பது உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் 12 ஆயிரத்துக்கு மேற்பட்ட மேடைகளில் நடுவராக அமர்ந்து பட்டிமன்றங்களை நடத்தி சிறப்பான தீர்ப்புகளை வழங்கியவர் சாலமன் பாப்பையா. பெரும்பாலான பட்டிமன்றங்களில் சாலமன் பாப்பையாவின் தீர்ப்பு தாய்மார்களுக்கு சாதகமாகவே இருக்கும்.. இதுகுறித்து பேசிய அவர், நம்ம வீட்டில் மட்டுமல்ல நாட்டிலும் பெண்களுக்கு கொடுக்க வேண்டியது நிறைய உள்ளது என்றும், தாய்மையை போற்ற வேண்டும் பெண்களுக்கு செய்ய இன்னும் நிறைய கடமை இருக்கின்றது என்ற பெண்ணுரிமை குரல் சாலமன் பாப்பையா..!தமிழ் குடும்பங்களில் உள்ள வரதட்சணை கலாச்சாரத்தை நகைச்சுவையாகவும், காரசாரமாகவும் சாடியவர் சாலமன் பாப்பையா. பழங்காலத்தில் பெண்ணுக்கு பொருள் கொடுத்து பரிசம் போட்ட பாரம்பரியத்தை , கல்வியாளர்கள், பெண் வீட்டார் கொடுக்கும் வரதட்சணையாக மாற்றி விட்டதாகவும், வரதட்சணை ஆண்களின் அவமானம் என்றும் ஆதங்கம் தெரிவித்த புரட்சியாளர் சாலமன் பாப்பையா. பட்டிமன்றங்களில் காதல் குறித்து மிகவும் அழகாகவும் கவிதை நயத்துடனும் விவரிப்பது சாலமன் பாப்பையாவின் வழக்கம். நீங்கள் காதலித்துள்ளீர்களா? என கேட்டபோது, காதலிக்கும் அளவிற்கு ஆண்டவன் தன்னை வசீகரத்துடன் படைக்கவில்லை என்று நகைச்சுவையாக பேசிய சாலமன் பாப்பையா, பல பெண்கள் என்னை வசீகரித்திருக்கலாம் அது காதலாகாது, ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் கவர்ந்தால் தான் காதல் மலரும் என்று உடைத்து பேசிய பண்பாளர். உள்நாடு மட்டுமல்லாமல், கடல் கடந்து தமிழர்கள் வசிக்கின்ற பல்வேறு நாடுகளுக்கும் தனது குழுவினருடன் சென்று சிறப்பான தலைப்புகளில் ஏராளமான பட்டிமன்றங்களை நடத்தியவர் சாலமன் பாப்பையா. அவரது தமிழ் புலமையை பார்த்து பிரமாண்ட இயக்குனர் ஷங்கர், முதல்வன், பாய்ஸ், சிவாஜி ஆகிய படங்களில் நடிக்க வைத்தது குறிப்பிடதக்கது. சிவாஜி படத்தின் வெற்றிவிழாவில், இந்த படத்தில் நான் நடித்ததை விட ரஜினிகாந்தை படித்துக் கொண்டேன் என்று சாலமன் பாப்பையா நகைச்சுவையாக பேசினார். ஒரு காலத்தில் நகைச்சுவை நடுவராக இருந்து, அரசியல் களம் கண்ட திண்டுக்கல் ஐ லியோனியை பட்டிமன்ற உலகிற்கு அறிமுகப்படுத்திய பிதாமகர் சாலமன் பாப்பையா. இன்றும் பண்டிகை நாட்களையும்.. சாலமன் பாப்பையா பட்டிமன்றத்தையும் தமிழ் குடும்பத்தினரின் வாழ்வில் இருந்து பிரிக்க இயலாத அளவுக்கு ஒவ்வொரு பண்டிகை நாளிலும் இல்லத்தின் வரவேற்பறையில் சாலமன் பாப்பையாவின் குரல் எதிரொலித்துக் கொண்டேயிருந்தது. பிள்ளைகள் நமக்கு பாடம் சொல்லிக் கொடுப்பார்கள் என்ற காரல் மார்க்ஸ்சின் வரிகளை சுட்டிகாட்டி அது எப்படி சிறியவர்கள் நமக்கு சொல்லிக்கொடுப்பார்கள் என்று நினைத்தேன், இப்போது பேரன் எனக்கு கணினியை கற்றுத்தருகிறான் என்று வெளிப்படையாக தெரிவித்தார் சாலமன் பாப்பையா. சிந்தனை திறன் மிக்க ஆக்கப்பூர்வமான, சமுதாயத்துக்கு தேவையான செய்திகளை காலமாற்றத்துக்கு ஏற்ப பட்டிமன்றத்தின் வாயிலாக தீர்ப்பாக சொன்னவர் சாலமன் பாப்பையா. இந்த நிலையில் வயது மூப்பு காரணமாக உடலக்குறைவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த சாலமன் பாப்பையா வெள்ளிக்கிழமை காலை காலமானார். அவருக்கு வயது 90 . அவரது மறைவுக்கு முதல் அமைச்சர் விஜய், திமுக தலைவர் மு. க. ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் புகழ் அஞ்சலி செலுத்தினர். அவரது உடல் மதுரையில் உள்ள இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. பட்டிமன்றம் உள்ளவரை பாப்பையாவின் பெயரும் புகழும் என்றென்றும் நிலைத்திருக்கும்..!
