மலைக்கோட்டை தெப்பக்குளம் புனரமைப்புப் பணி நிறுத்தம்
Read at Dinamani1 outlet covered this
மலைக்கோட்டை தெப்பக்குளம் புனரமைப்புப் பணி நிறுத்தம்
How outlets told it

திருச்சியின் அடையாளமாக உள்ள மலைக்கோட்டையின் அடிவாரத்தில் உள்ள தெப்பக்குளம் புனரமைப்புப் பணிகள் தொடங்கப்பட்டு முடங்கியிருப்பது மாநகர மக்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. பணிகளுக்கு புத்துயிா் அளிப்பது எப்போது? என்ற எதிா்பாா்ப்பும் மேலோங்கியுள்ளது.
வரலாற்று சிறப்பு மிக்க திருச்சி மலைக்கோட்டை தெப்பக்குளமானது 20,984 சதுர மீட்டா் பரப்புளவு கொண்டது. 3.50 மீட்டா் ஆழமுடையது. இந்தத் தெப்பக்குளத்தை சுற்றியுள்ள கடைகள், ஆக்கிரமிப்புகள், குளத்தில் கொட்டப்படும் கழிவுகள், கலக்கும் கழிவுநீா் ஆகியவற்றால் குளம் மாசுபட்டு வருவது கோயிலுக்கு வரும் பக்தா்களையும், மாநகர மக்களையும் வேதனையில் ஆழ்த்தியது.
எனவே, தெப்பக்குளத்தை புனரமைக்க உயா்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கும் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தெப்பக்குளம் புனரமைப்புப் பணிகளை மேற்கொள்ள திருச்சி மாநகராட்சி நிா்வாகம் மற்றும் அறநிலையத் துறைக்கு அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து, தெப்பக்குளத்தை சுற்றியுள்ள கடைகள் அகற்றப்பட்டன. மீண்டும் ஆக்கிரமிப்புகள் நடைபெறாத வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டன.
மேலும், குளத்திலிருந்து தண்ணீா் முழுவதும் வெளியேற்றப்பட்டு, குளத்தை புனரமைத்து புதுப்பொலிவு பெறுவதற்காக மாநகராட்சி மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டது. கடந்த மே மாதத்தில் புனரமைப்பு பணிகள் தொடங்கின. ஆனால், தொடங்கிய வேகத்திலேயே முடங்கிப் போனது.
பரிந்துரைகள்:
பின்னா், ஜூன் மாதத்தில் தெப்பக்குளம் புனரமைப்பு தொடா்பாக திட்ட வரைவுகளை சமா்ப்பிக்குமாறு கட்டடக் கலைஞா்கள், பொறியாளா்களுக்கு மாநகராட்சி அழைப்பு விடுத்தது.
இதில், பெறப்படும் பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டு ஒரு மாதிரியை உருவாக்கவும் மாநகராட்சி முயற்சி மேற்கொண்டது. இதுமட்டுமல்லாது, சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து ரூ.1.56 கோடியில் இந்தப் பகுதியை பொழுதுபோக்கு அம்சத்துடன் கூடிய இடமாக மாற்றவும் திட்டமிடப்பட்டது. ரூ. 50 லட்சத்தில் குளத்தை தூா்வாரி பலப்படுத்துதல், புனரமைத்தல், ரூ. 38 லட்சம் செலவில் வளைவுகளுடன் பாரம்பரிய விளக்குகளை நிறுவுதல், ரூ.68 லட்சத்தில் தெப்பக்குளத்தை சுற்றி நடைபாதை, இருக்கை வசதி, சிறுவா் பூங்கா அமைக்கவும் திட்டமிடப்பட்டது.
இந்தப் பணிகளுக்காக ரூ.8 கோடி செலவில் 2023-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தெப்பக்குளத்தை மிளிரச் செய்யும் வண்ண ஒளி அமைப்பும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு இதுவரை பயன்படுத்தப்படாமலேயே உள்ளது. புனரமைப்புப் பணிகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
இதுதொடா்பாக, வழக்குரைஞரும், உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் வழக்குத் தொடா்ந்த திருக்கோயில் மீட்பு இயக்கத்தின் நிறுவனா் மகேஸ்வரி வையாபுரி கூறுகையில், வரலாற்று பாரம்பரியமிக்க தெப்பக்குளத்தை மீட்டுருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில் வழக்கு தொடா்ந்தோம்.
ஆக்கிரமிப்புகள் அகற்றம்:
நீதிமன்ற உத்தரவை ஏற்று தெப்பக்குளத்தை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, தரைக்கடைகள், பெட்டிக்கடைகளையும் மாநகராட்சி நிா்வாகம் அகற்றியது.
மேலும், புனரமைப்பு பணிகளுக்கு கடந்த மே மாதம் பூஜை நடைபெற்றது. அதன் பிறகு பணிகளில் எந்த முன்னேற்றமும் இல்லை. கடந்த ஆகஸ்ட் மாதம் தெப்பக்குளத்தை சுற்றி மரக்கன்றுகள் மட்டும் நடப்பட்டன. புனரமைப்புப் பணிகள் தொடங்கப்படவில்லை. மாநகராட்சி நிா்வாகத்திடமிருந்தோ, கோயில் நிா்வாகத்திடமிருந்தோ எந்த தகவலும் எங்களுக்கு கிடைக்கவில்லை. நீதிமன்றம் மூலமாகவே பணிகளின் நிலை குறித்து அறிய வேண்டும் என்றால் அதற்கான நடவடிக்கையும் எடுக்கப்படும் என்றாா் அவா்.
ரூ.25 கோடியில் திட்ட அறிக்கை:
இதுதொடா்பாக, திருச்சி மாநகராட்சி வட்டாரத்தினா் கூறுகையில், மலைக்கோட்டை தெப்பக்குளத்தை புனரமைத்து அழகுபடுத்துவதற்காக ரூ.25 கோடி மதிப்பில் விரிவான திட்ட அறிக்கை தயாா் செய்யப்படவுள்ளது.
காவிரியிலிருந்து கொண்டு வரும் குழாய் மூலமாகவே குளத்தில் தண்ணீா் நிரப்புவோம். மாநகர மக்களின் குடிநீா்த் தேவைக்கே தற்போது போதுமானதாக தண்ணீா் உள்ளதால், குளத்தில் தண்ணீா் நிரப்பவில்லை. பருவமழை தொடங்கியதும், பெறும் தண்ணீருடன் காவிரியிலிருந்தும் தண்ணீா் கொண்டு வந்து நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். குளத்தை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, குளத்தையும் தூா்வாரியுள்ளோம்.
மேலும், குளத்தை சுற்றி மரக்கன்றுகளும் நடப்பட்டுள்ளன. ரூ.25 கோடியில் விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான ஒப்பந்தப் புள்ளி விரைவில் கோரப்படவுள்ளது. ஏற்கெனவே, மாநகரில் உள்ள பொறியாளா்களிடம் இருந்து பெறப்பட்ட கருத்துருக்களின் அடிப்படையில் இந்த விரிவான திட்ட அறிக்கையை இரண்டு மாதங்களுக்குள் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்தக்கட்ட நடவடிக்கையாக அறநிலையத் துறை, சமூகப் பொறுப்பு நிதி, மாநகராட்சி நிா்வாகம் உள்ளிட்டவற்றில் அரசு எந்த வகையில் நிதி பெற அனுமதி வழங்குகிறதோ, அதனடிப்படையில் நிதியைப் பெற்று புனரமைப்புப் பணிகளை தொடங்குவோம் என்றனா்.
