Religion and culture · 1 outlet covered this

நாடு முழுவதும் களைகட்டிய விநாயகர் சதுர்த்தி விழா.. பிரமாண்டமான சிலைகள் பிரதிஷ்டை செய்து பூஜை

How outlets told it

Daily Thanthi994h ago

நாடு முழுவதும் களைகட்டிய விநாயகர் சதுர்த்தி விழா.. பிரமாண்டமான சிலைகள் பிரதிஷ்டை செய்து பூஜை

Read at Daily Thanthi
நாடு முழுவதும் களைகட்டிய விநாயகர் சதுர்த்தி விழா.. பிரமாண்டமான சிலைகள் பிரதிஷ்டை செய்து பூஜை
Photo: Daily Thanthi

முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமான், ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி தினத்தில் அவதரித்தார். இந்த நாள் விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்படுகிறது. அவ்வகையில் இன்று (14.9.2026) விநாயகர் சதுர்த்தி விழா, நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

விநாயகர் சதுர்த்தியையொட்டி கோவில்களில் விநாயகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. சிறப்பு வழிபாடுகளில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு விநாயகரை தரிசனம் செய்கின்றனர். இதனால் கோவில்களில் வழக்கத்தைவிட இன்று கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

வீடுகளில் விநாயகர் வழிபாடு மேற்கொள்ளும் மக்கள், விநாயகர் சிலைகளை வைத்து அலங்கரித்து, விநாயகருக்கு பிடித்தமான கொழுக்கட்டை, மோதகம், லட்டு, அப்பம், அவல், பொரி, கடலை, சுண்டல் போன்ற நைவேத்யங்களை படைத்து பூஜை செய்கின்றனர்.

மும்பை சிஞ்ச்போக்லி சா சிந்தாமணி விநாயகர் சிலைஇதேபோல் கோவில்கள் சார்பிலும், பல்வேறு இந்து அமைப்புகள் சார்பிலும் பொது இடங்களில் பிரமாண்ட சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜை செய்யப்படுகின்றன. தமிழ்நாடு முழுவதும் சுமார் 1 லட்சம் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன. தலைநகர் சென்னையில் மட்டும் 1,562 சிலைகளை வைத்து வழிபட காவல்துறை அனுமதி வழங்கியிருக்கிறது. அந்த இடங்களில் காலை முதலே சிலைகள் பிரதிஷ்டை செய்து பூஜைகள் நடைபெறுகின்றன. சென்னை புறநகர்ப் பகுதிகளிலும் சுமார் 1500 சிலைகள் வரை நிறுவப்பட்டு வழிபாடுகள் நடத்தப்படவுள்ளன.

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர்பிள்ளையார்பட்டி

புகழ்பெற்ற பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேக மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. மூலவர் ஸ்ரீ கற்பக விநாயகர் ராஜ அலங்காரமான தங்க கவச அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். தெப்பக்குளத்தில் அங்குசதேவருக்கு தீர்த்தவாரி நடைபெற்றது. மதியம் மூலவருக்கு முக்குறுணி மோதகம் படைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற உள்ளது. விநாயகரை தரிசனம் செய்வதற்காக அதிகாலையிலேய பக்தர்கள் குவிந்தனர். நேரம் செல்லச்செல்ல பக்தர்களின் வருகை அதிகரித்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து விநாயகரை வழிபடுகின்றனர்.

​பக்தர்களின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும் கோவில் நிர்வாகம் மற்றும் காவல் துறை சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம்மணக்குள விநாயகர் கோவில்

திருச்சி உச்சி பிள்ளையார் கோவிலில் இன்று மாணிக்க அலங்காரத்தில் விநாயகர் அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்து தரிசனம் செய்கின்றனர். கோவை முந்தி விநாயகர் கோவிலில் காலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசன்ம் செய்கின்றனர்.

புதுச்சேரியில் உள்ள புகழ்பெற்ற மணக்குள விநாயகர் கோவிலில் அதிகாலை முதலே சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, மூலவர் மற்றும் உற்சவருக்குப் பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட 21 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகமும் கலசாபிஷேகமும் செய்யப்பட்டது.

தொடர்ந்து மூலவர் விநாயகப் பெருமானுக்குத் தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டது. உற்சவர் விநாயகப் பெருமான் கற்பக விருட்ச அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கோவிலுக்கு வருகை தரும் பக்தர்ககளுக்கு வழங்குவதற்காக 16,000 லட்டுகள் தயார் செய்யப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

பாதுகாப்பு ஏற்பாடுகள்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாடு முழுவதும் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள பகுதிகள் மற்றும் கோவில்களில போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வழிபாடு முடிந்த பின்னர், காவல்துறையால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச்சென்று நீர்நிலைகளில் கரைக்க உள்ளனர். சென்னையில் வருகிற 19 மற்றும் 20 ஆகிய நாட்களில் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்கள் வழியாக விநாயகர் ஊர்வலம் நடத்தி சிலைகளை கரைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதற்காக நாடு முழுவதும் உள்ள முக்கிய நீர்நிலைகளில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் மற்றும் பூஜைப்பொருட்கள் விற்பனை அமோகமாக நடைபெறுகிறது. குறிப்பாக, வீடுகளில் வைத்து வழிபடுவதற்காக சிறிய அளவிலான விநாயகர் சிலைகளை வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.