சாலமன் பாப்பையா மறைவு: அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள் - மு.க.ஸ்டாலின் இரங்கல்
Read at Daily Thanthi1 outlet covered this
சாலமன் பாப்பையா மறைவு: அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள் - மு.க.ஸ்டாலின் இரங்கல்
How outlets told it

Published on: 11 Sep 2026, 9:29 amசென்னை, பட்டிமன்ற நடுவரும் தமிழறிஞருமான சாலமன் பாப்பையா காலமானார். அவருக்கு வயது 90. ஏற்கனவே உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், வயது மூப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் சாலமன் பாப்பையா மறைவுக்கு திமுக தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான மு. க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்திருப்பதாவது:-சிரித்த முகம் - சிந்தையைக் கவரும் தமிழ் - மதுரை மண்ணின் மணம் ஆகியவற்றால் உலகெங்கும் வாழும் தமிழர்களின் பேரன்பைப் பெற்ற பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் ஆற்றொணாத் துயரும் அடைந்தேன். திருக்குறளுக்கு உரை கண்டவர், புறநானூற்றுக்குப் புதிய வரிசை கண்டவர், கம்பனையும் ஆய்ந்தறிந்தவர் எனப் பண்டைத் தமிழிலக்கியத்தில் எந்த அளவுக்கு விற்பன்னராகத் திகழ்ந்தாரோ, அதே அளவுக்கு எளிய மொழியில் நகைச்சுவையாகப் பேசும் திறனும் கைவரப் பெற்றவராகப் பாப்பையா திகழ்ந்தார். பொங்கல், புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகை நாட்கள் பாப்பையாவின் பட்டிமன்றத்தோடுதான் தமிழர்களுக்குத் தொடங்கும் எனும் அளவுக்குத் தமிழர்களின் அன்றாட வாழ்க்கையோடு இரண்டற இயைந்துவிட்ட பெருமைக்குரியவர் பேராசிரியர் சாலமன் பாப்பையா. பட்டிமன்றம் என்றாலே பாப்பையாதான் எனக் கூறும் அளவுக்குத் தமிழ்நாடு மட்டுமல்லாது, உலகின் பல நாடுகளிலும் பல்லாயிரம் பட்டிமன்றங்களுக்கு நடுவராக இருந்தவர். தற்கால மதுரையின் பெருமைமிகு அடையாளமாகவே மாறிப் போனவர். பாப்பையா பரம்பரை எனச் சொல்லத்தக்க அளவுக்குத் தன்னைப் போலவே பல பேச்சாளர்களைத் தமிழுக்குக் கொடையாகத் தந்தவர். தலைவர் கலைஞர் மீதும் என் மீதும் மிகுந்த அன்பைப் பொழிந்தவர் பேராசிரியர் பாப்பையா. கழகம் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர் எங்கள் மீது காட்டும் அன்பில் எந்த மாற்றமும் இருந்ததில்லை. எப்போது சந்தித்தாலும் புன்னகையோடும் வாஞ்சையோடும் கரங்களைப் பற்றிக்கொள்ளும் அன்பிலான உறவை நாங்கள் கொண்டிருந்தோம். கடந்த ஆண்டு மே மாதம் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக நான் மதுரை சென்றிருந்தபோது நடந்த மக்கள் சந்திப்பில் அவரது வீட்டு வாசலுக்கு வந்து என்னை வரவேற்றார். சில மாதங்களுக்கு முன்புதான் துணைவியாரை இழந்திருந்த பேராசிரியரிடம், “உடல்நலனைப் பார்த்துக்கொள்ளுங்கள்” என்று சொல்லிவிட்டு வந்தேன். அவர் இன்று நம்மை விட்டுப் பிரிந்ததை மனம் ஏற்க மறுக்கிறது. தனது அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள். பேராசிரியர் சாலமன் பாப்பையாவை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தார்க்கும் மதுரை மக்களுக்கும் உலகெங்கும் வாழும் அவரது ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
