தீ விபத்தால் உருகுலைந்த பழமையான சென்ட்ரல் திரையரங்கு - மதுரையில் ரசிகர்கள் கவலை
Read at The Hindu Tamil1 outlet covered this
தீ விபத்தால் உருகுலைந்த பழமையான சென்ட்ரல் திரையரங்கு - மதுரையில் ரசிகர்கள் கவலை
How outlets told it

Updated on: 12 Sep 2026, 4:50 pm2 min readமதுரை: மதுரையில் பழமையான சென்ட்ரல் திரையரங்கில் ஏற்பட்ட தீ விபத்தால் கட்டிடமே உருகுலைந்து காட்சி அளிக்கிறது. இது சினிமா ரசிகர்களை கவலை அடைய செய்திருக்கிறது. மதுரையின் அடையாளங்களில் ஒன்று சினிமா திரையரங்குகள். மதுரை மக்களுக்கு முக்கிய பொழுது போக்கு இடமாக திரையங்குகள் இருந்திருக்கின்றன. இன்றைக்கு சிந்தாமணி போன்ற சில பழமையான திரையரங்குகள் வர்த்தக நிறுவனமாக மாறியுள்ளன. அந்த வகையில் மீனாட்சி அம்மன் கோயில் மேற்கு கோபுரத்திற்கு மிக அருகில் அமைந்துள்ள பழமையான சென்ட்ரல் திரையரங்கு தொடர்ந்து செயல்பட்டு வந்தது. கரோனாவுக்கு பிறகு பராமரிப்பு என்ற பெயரில் இத்திரையரங்கு மூடப்பட்டது. இருப்பினும், இவ்வளாகம் கார் பார்க்கிங், பொம்மைகள் மற்றும் பல்வேறு பிளாஸ்டிக் பொருட்களை சேமித்து வைக்கும் குடோனாகவும் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இத்திரையரங்கு வளாகத்தில் செயல்பட்ட கார் பார்க்கிங் பகுதியில் நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டது. மேல் மாடியிலுள்ள பிளாஸ்டிக் குடோனுக்கும் தீ பரவியது. 15-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் வரழைத்து தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். 2 வது நாளாக இன்றும் புகை வந்துகொண்டே இருந்தது. தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தால் தற்போது சென்ட்ரல் திரையரங்கு அடையாளமே சிதைந்து உருகுலைந்து காட்சி அளிப்பது சினிமா ரசிகர்களை கவலை அடைய செய்துள்ளது. சென்ட்ரல் திரையரங்கு குறித்து மதுரை சேர்ந்த சினிமா திறனாய்வாளர் கு. கணேசன் கூறியது: “மதுரை நகரில் 1939-ல் சென்டரல் திரையரங்கு ஆரம்பிக்கப்பட்டது. 1732 இருக்கைகளை கொண்ட இத்திரையரங்கில் மட்டும் தான் பெண்களுகென தனி இருக்கைகள் ஏற்படுத்தினர். நடிகர் தியாராசர் பாகவதர் நடித்த ‘சிவகவி’ என்ற படத்தின் வெற்றி விழாவுக்கு பாகவதரே நேரில் பங்கேற்றுள்ளார். நடிகர்கள் சிவாஜி கணேசன், எம்ஜிஆர் ஆகியோரின் படங்களும் அதிக நாட்கள் ஓடிய விழா கொண்டாடியபோது, அவர்களும் நேரில் பங்கேற்று இருக்கின்றனர். புது படங்களை விட பழைய படங்களே அதிகமாக திரையிடப் படும். சுப்பிரமணியபுரம் போன்ற சில படங்களின் படபிடிப்பு தளமாக இருந்துள்ளது. நகரில் மையப்பகுதி மற்றும் மீனாட்சி அம்மன் கோயில், பெரியார் பேருந்து நிலையம், ரயில் நிலையம் மிக அருகிலுள்ள இருப்பதால் மீனாட்சி கோயிலுக்கு வருவோர் இத்திரையரங்கில் படம் பார்ப்பதை வழக்கமாக கொண்டு இருந்துள்ளனர். இங்கு வெளியாகும் பெரும்பாலான படங்கள் 100 நாட்கள் தாண்டி ஓடியிருக்கின்றன. 1990-க்கு பிறகு சிறிய திரையரங்குகள் மதுரையில் அதிகரித்தால் சென்ட்ரல் போன்ற பழமையான திரையங்குகளில் புதிய படங்கள் வெளியிடுவது குறைந்தது. இதுபோன்ற சூழலில் தான் 2022-ம் ஆண்டு முதல் பராமரிப்பு காரணம் சொல்லி மூடப்பட்டது” என்றார். இந்த தீ விபத்து காரணம் குறித்து திடீர் நகர் போலீஸார் விசாரிக்கின்றனர். மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகத்துக்கான ஏற்பாடு நடக்கும் நிலையில், பக்தர்களின் வருகையும் தினமும் அதிகரித்துள்ளது. இந்த நேரத்தில் கோயிலுக்கு அருகிலுள்ள திரையரங்கில் தீ விபத்து ஏற்பட்டது பக்தர்களின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
