Cinema and entertainment · 1 outlet covered this

சூரியின் “மண்டாடி” திரைப்படத்தை பாராட்டிய சீமான்

How outlets told it

சூரியின் “மண்டாடி” திரைப்படத்தை பாராட்டிய சீமான்
Photo: Daily Thanthi

சூரியின் உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பை மக்கள் கொண்டாடுவது அவரின் கலைப்பயணத்திற்கு கிடைத்த மகத்தான வெற்றி என்று ‘மண்டாடி’ படத்தை சீமான் பாராட்டியுள்ளார்.

வெற்றிமாறன் இயக்கிய ‘விடுதலை’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான சூரி, அதன்பிறகு ‘கருடன்’, ‘கொட்டுக்காளி’, ‘மாமன்’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். அவரது நடிப்பில் வெளியான பல படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதுடன், வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றன.

நட்சத்திர பட்டாளத்துடன் ‘மண்டாடி’

தற்போது மதிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மண்டாடி’ படத்தில் சூரி கதாநாயகனாக நடித்துள்ளார். எல்ரட் குமார் தயாரிக்கும் இப்படத்தில் மகிமா நம்பியார் கதாநாயகியாக நடித்துள்ளார். ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். சுஹாஸ், சத்யராஜ், ரவீந்திரா விஜய், அச்யுத் குமார், சாச்சனா நமிதாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மீனவர்களின் வாழ்க்கையை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் கதை, அவர்களுக்கிடையே நடைபெறும் படகுப்போட்டியை மையமாகக் கொண்டுள்ளது. ‘மண்டாடி’ திரைப்படம் செப்டம்பர் 10-ம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் திரையரங்குகளில் வெளியானது.

Our very own #Suhas showered his love for the #Mandaadi team in his own place! ♥️

The love and support mean everything! ♥️ It's a Celebration for whole Mandaadi Team #Mandaadi Running Successfully in theatres near you! @sooriofficial #Suhas #Sathyaraj @Mahima_Nambiar… pic.twitter.com/jPrXomKTuY

— RS Infotainment (@rsinfotainment) September 13, 2026

இந்நிலையில் சீமான் ‘மண்டாடி’ படக்குழுவுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் “கடலோடு பிறந்து, அலையோடு வளர்ந்து, புயலோடு போரிட்டு வாழும் நம் நெய்தல் நிலத்து மக்களின் வாழ்வியலையும், வீரத்தையும், மரபையும் திரைமொழியில் உயிர்ப்பித்திருக்கும் ‘மண்டாடி’ திரைப்படத்தைத் தமிழ் மக்கள் பேரன்போடு வரவேற்று கொண்டாடி வருவது அளப்பரிய மகிழ்ச்சியளிக்கிறது. கடல்சார் வாழ்வியலான பாய்மர படகு போட்டியை பெருந்திரையில் பெருமையோடு பதிவு செய்திருக்கும் ‘மண்டாடி’, தமிழ்த் திரையுலகில் பாராட்டப்பட வேண்டிய முக்கியமான படைப்பாக அமைந்திருக்கிறது.

கதைநாயகனாக நடித்திருக்கும் என் அன்புத்தம்பி சூரி, தனது ஒவ்வொரு படைப்பின் மூலமும் தன்னைத் தானே செதுக்கிக்கொண்டு கலைப்பயணத்தில் அடுத்தடுத்த உயரங்களை எட்டி வருகிறார். ‘மண்டாடி’ திரைப்படத்திற்காக அவர் செலுத்தியிருக்கும் கடின உழைப்பை, அர்ப்பணிப்பையும் மக்கள் தங்கள் பேரன்பால் அங்கீகரித்துக் கொண்டாடுவது தம்பி சூரியின் கலைப்பயணத்திற்குக் கிடைத்த மகத்தான வெகுமதி.

உலகத்தின் கதைகளைத் தமிழில் சொல்வதைக் காட்டிலும், தமிழரின் கதையை உலகம் பேசுமாறு செய்வதே தமிழ்த் திரையுலகின் பெருவெற்றியாகும். அத்தகைய படைப்புகளைத் தமிழ் மக்கள் ஒருபோதும் கைவிடமாட்டார்கள்; தங்கள் பேரன்பால் தோளில் தூக்கிச் சுமப்பார்கள் என்பதற்கு ‘மண்டாடி’ திரைப்படத்திற்குக் கிடைத்திருக்கும் மக்களின் கொண்டாட்டமே சான்றாகும் ” என்று கூறியுள்ளார்.

அன்புத்தம்பிகளின் ‘மண்டாடி’யைக் கொண்டாடித் தீர்க்கிறார்கள் மக்கள் – பெருமகிழ்ச்சி!

கடலோடு பிறந்து, அலையோடு வளர்ந்து, புயலோடு போரிட்டு வாழும் நம் நெய்தல் நிலத்து மக்களின் வாழ்வியலையும், வீரத்தையும், மரபையும் திரைமொழியில் உயிர்ப்பித்திருக்கும் ‘மண்டாடி’ திரைப்படத்தைத் தமிழ் மக்கள்… pic.twitter.com/fVvTHIC92S

— செந்தமிழன் சீமான் (@Seeman4TN) September 13, 2026