Religion and culture · 1 outlet covered this

மகாமகம் திருவிழாவை சிறப்பாக நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரம்: அமைச்சர் ரமேஷ்

How outlets told it

Dinamani653d ago

மகாமகம் திருவிழாவை சிறப்பாக நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரம்: அமைச்சர் ரமேஷ்

Read at Dinamani
மகாமகம் திருவிழாவை சிறப்பாக நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரம்: அமைச்சர் ரமேஷ்
Photo: Dinamani

மகாமகம் திருவிழாவை சிறப்பாக நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என்று இந்து அறநிலைத்துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம் துர்க்கை அம்மன் கோயிலில் இந்து அறநிலைத்துறை அமைச்சர் ரமேஷ் இன்று சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், மகாமகம் திருவிழாவை சிறப்பாக நடத்த வேண்டும் என்பதை முதல்வர் வலியுறுத்தியுள்ள நிலையில், மகாமகம் தொடர்புடைய அனைத்து திருக்கோயில்களிலும் தேவையான திருப்பணிகள் மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது குறித்து ஆய்வு செய்து வருகிறோம். கும்பகோணம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மகாமகம் தொடர்புடைய முக்கியமான திருக்கோயில்கள் உள்ளன. குறிப்பாக 17 முக்கிய திருக்கோயில்கள், விநாயகர் கோயில்கள், சைவத் திருக்கோயில்கள் மட்டுமின்றி, பட்டீஸ்வரம், சுவாமிமலை உள்ளிட்ட புகழ்பெற்ற திருக்கோயில்களும் பக்தர்கள் அதிகளவில் வரக்கூடிய முக்கியமான ஆன்மிகத் தலங்களாக உள்ளன. இந்தக் கோயில்களில் பக்தர்களுக்குத் தேவையான குடிநீர், கழிவுநீர் வடிகால், தூய்மை, மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எந்த நிலையில் உள்ளன என்பதையும், மேலும் என்னென்ன திருப்பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்பதையும் நேரடியாக ஆய்வு செய்து வருகிறோம். குறிப்பாக நாகேஸ்வரன் கோயிலில் கழிவுநீர் வடிகால் வசதி முறையாக இல்லாததால், கோயில் வளாகத்திலேயே துர்நாற்றம் வீசும் நிலை இருப்பதை ஆய்வின்போது கண்டறிந்தோம். மாநகராட்சி உள்ளிட்ட சம்பந்தப்பட்ட துறைகளின் ஒருங்கிணைப்புடன் இதுபோன்ற பிரச்னைகளை உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம். அதேபோல், புகழ்பெற்ற சுவாமிமலை முருகன் கோயிலிலும் பக்தர்கள் செல்லக்கூடிய பகுதிகளில் அடிப்படை வசதிகள், வெளிச்சம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டிய நிலை இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. கடந்த காலங்களில் கோயில் திருப்பணிகள் குறித்து பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டிருந்தாலும், பல கோயில்களில் அடிப்படை வசதிகளே முறையாக இல்லை என்பது வேதனைக்குரிய விஷயம். இதனைக் கருத்தில் கொண்டு, ஒவ்வொரு கோயிலாக நேரடியாகச் சென்று ஆய்வு செய்து வருகிறோம். நேற்று மட்டும் சுமார் பத்து திருக்கோயில்களில் ஆய்வு மேற்கொண்டோம். இன்று காலையிலிருந்து மேலும் ஐந்து முதல் ஆறு திருக்கோயில்களில் ஆய்வு மேற்கொண்டுள்ளோம். தொடர்ந்து மற்ற கோயில்களிலும் ஆய்வு நடத்தப்பட உள்ளது. ஒவ்வொரு கோயிலிலும் எந்த அளவுக்கு பணிகள் தேவைப்படுகின்றன, பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளில் என்னென்ன குறைபாடுகள் உள்ளன, உடனடியாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் என்னென்ன என்பதைக் கண்டறிந்து, அதற்கான மதிப்பீடுகளைத் தயாரித்து பணிகளைத் தொடங்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மகாமகம் திருவிழாவை முன்னிட்டு கும்பகோணம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள அனைத்து திருக்கோயில்களும் சிறப்பான முறையில் தயார்படுத்தப்பட்டு, பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் கிடைக்கும் வகையில் நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி, மகாமகம் திருவிழா சிறப்பாக நடைபெறுவதற்கான அனைத்து பணிகளும் ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.