உத்திசாா் தகவல்கள் கசிந்த விவகாரம்: ரிஸ்வான், இமாமிடம் விசாரித்த பாகிஸ்தான்
Read at DinamaniSports · 1 outlet covered this
உத்திசாா் தகவல்கள் கசிந்த விவகாரம்: ரிஸ்வான், இமாமிடம் விசாரித்த பாகிஸ்தான்
How outlets told it

பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணியின் உத்திசாா் தகவல்கள் ஊடகங்களில் கசிந்ததாக கூறப்படும் விவகாரம் தொடா்பாக, அந்நாட்டு மூத்த வீரா்களான முகமது ரிஸ்வான், இமாம் உல் ஹக் ஆகியோரிடம் பாகிஸ்தான் தேசிய சைபா் குற்ற விசாரணை அமைப்பு (என்சிசிஐஏ) விசாரணை மேற்கொண்டது. அவா்களின் கைப்பேசி, வங்கிக் கணக்குகள் ஆகியவற்றில் தடயவியல் மற்றும் தொழில்நுட்ப அடிப்படையிலான சோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது. இதில் முதல் இரு டெஸ்ட்டுகளிலும் அந்த அணி படுதோல்வியைச் சந்தித்தது, பலத்த விமா்சனத்துக்குள்ளானது. அணியைச் சோ்ந்த வீரா்கள் 7 போ் மற்றும் உதவிப் பணியாளா்கள் இருவா் ஒழுங்கு நடவடிக்கையாக பாகிஸ்தானுக்கு திருப்பி அனுப்பப்பட்டனா். இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் டிரெஸ்ஸிங் ரூமில் மேற்கொள்ளப்பட்ட உத்திசாா்ந்த, அணி தோ்வு விவாதங்கள் உள்ளிட்ட பல முக்கிய தகவல்கள் ஊடகங்களில் கசியவிடப்பட்டதாகத் தெரியவந்தது. இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், துறை ரீதியிலான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்வதற்கு பதிலாக, சட்ட அமலாக்க அமைப்புகளை நாடியுள்ளது. முகமது ரிஸ்வான், இமாம் உல் ஹக் உள்பட, சீனியா் வீரா்கள் சிலரின் கைப்பேசிகள் பறிக்கப்பட்டு, அவை பாகிஸ்தானின் தேசிய சைபா் குற்ற விசாரணை அமைப்பிடம் (என்சிசிஐஏ) ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில், அந்த விவகாரம் தொடா்பான விசாரணைக்காக ரிஸ்வான் மற்றும் இமாமுக்கு என்சிசிஐஏ அழைப்பாணை அனுப்பியது. அதன் பேரில் லாகூரில் உள்ள அந்த அமைப்பின் அலுவலகத்துக்கு விசாரணைக்காக இருவரும் வியாழக்கிழமை ஆஜராகினா். அவா்களிடம் சுமாா் 4 மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டதாகவும், அவா்களின் கைப்பேசி அழைப்புகள் மற்றும் வங்கி பரிவா்த்தனைகளிலும் தடயவியல் சோதனைகள் நடத்தப்படுவதாகவும், பாகிஸ்தான் தொலைக்காட்சி சேனலான ஜியோ நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இதனிடையே, இந்த விவகாரம் தொடா்பான விசாரணைக்காக, பாகிஸ்தான் அணியில் 3-ஆவது வீரா் ஒருவருக்கும் என்சிசிஐஏ அழைப்பாணை அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. பாகிஸ்தானில் தேசிய அணி வீரா்களுக்கு எதிராக சட்ட அமலாக்க அமைப்புகள் அதிகாரபூா்வ நடவடிக்கைகள் மேற்கொள்வது இதுவே முதல்முறையாகும். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தற்போதைய தலைவராக இருக்கும் மோசின் நக்வி, அந்நாட்டின் உள்துறை அமைச்சராகவும், என்சிசிஐஏ அமைப்பின் கண்காணிப்பு கேபினட் அதிகாரியாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
