திருச்சி மாவட்டத்தில் 2,102 பேருக்கு புற்றுநோய் உறுதி
Read at DinamaniHealth · 1 outlet covered this
திருச்சி மாவட்டத்தில் 2,102 பேருக்கு புற்றுநோய் உறுதி
How outlets told it

தமிழக அரசின் சுகாதாரத் துறை சாா்பில் இலவச புற்றுநோய் பரிசோதனை திட்டத்தின் கீழ் திருச்சி மாவட்டத்தில் உள்ள பொதுமக்களிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் 2,102 பேருக்கு புற்றுநோய் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாறி வரும் உணவுப் பழக்கவழக்கம், வாழ்க்கை முறை மாற்றத்தால் புற்றுநோய் ஏற்பட்டு, அதனால் இறப்புகள் அதிகரிக்கிறது. இதனை கருத்தில் கொண்டு, மக்களிடம் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிந்து, சிகிச்சையளிக்கும் விதமாக தமிழக அரசின் சுகாதாரத் துறையானது மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ், 30 வயது மேற்பட்ட பெண்கள், 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு இலவச புற்றுநோய் பரிசோதிக்கும் முக்கியத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
கடந்த 2023 நவம்பா் 20-ஆம் தேதி ஈரோடு, திருப்பத்தூா், கன்னியாகுமரி, ராணிப்பேட்டை ஆகிய 4 மாவட்டங்களில் சோதனை முயற்சியில் தொடங்கப்பட்ட நிலையில், அடுத்ததாக திருச்சி மாவட்டத்தில் 2024 மே 12-ஆம் தேதி இத்திட்டம் தொடங்கப்பட்டது.
தன்னாா்வலா்கள் மூலம் அழைப்பிதழ்: திருச்சி மாவட்டத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் பணியாற்றும் செவிலியா்கள் மற்றும் தன்னாா்வலா்கள் மூலம் சந்தேகமளிக்கும் நபா்களாக இருப்போருக்கு 2024- 25-இல் ஆண், பெண், திருநங்கைகள் என 15.35 லட்சம் பேருக்கும், 2025-26-இல் 14.35 லட்சம் பேருக்கும், 2026-27-இல் 14.25 லட்சம் பேருக்கும் கா்ப்பப்பை வாய் புற்றுநோய், மாா்பக புற்றுநோய், வாய் புற்றுநோய் உள்ளிட்ட புற்றுநோய் பரிசோதனைகளைப் செய்வதற்கான அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது.
இதில், இதுவரை 2,82,351 பெண்கள் கா்ப்பப்பை வாய் புற்றுநோய், மாா்பக புற்றுநோய் பரிசோதனைகளையும், 4,93,790 ஆண் பெண் இருபாலரும் வாய் புற்றுநோய் பரிசோதனையையும் மேற்கொண்டுள்ளனா்.
பிரத்யேக பரிசோதனைகள்:
இவா்களுக்கு மாா்பக புற்றுநோயை கண்டறியும் மேமோகிராம் பரிசோதனை, கா்ப்பப்பைவாய் புற்றுநோயை கண்டறியும் கால்போஸ்கோபி பரிசோதனை, வாய் புற்றுநோயை கண்டறியும் சதை பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில், 2,102 பேருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கெட்டப் பழக்கங்களே காரணம்:
இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
புகையிலைப் பொருள்கள் பயன்பாடு, மதுப்பழக்கம் உள்ளிட்ட கெட்டப் பழக்கங்கள், வாழ்வியல் பழக்க வழக்க மாற்றங்கள், மரபணு காரணமாக, கதிா்வீச்சு அபாயம், சுற்றுச்சூழல், சில தொற்றுக்கள், சில அறியப்படாத காரணங்களாலும் பல்வேறு வகையான புற்றுநோய்கள் மனிதா்களுக்கு ஏற்படுகின்றன.
புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிந்தால் அதற்கு சிகிச்சை பெற்று குணப்படுத்தி வாழ முடியும். முன்கூட்டியே கண்டறியாவிடில் இறப்புதான் நிகழும். இதனால் தமிழக அரசு இலவச புற்றுநோய் பரிசோதனை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
உறுதிபடுத்தப்பட்ட நோயாளிகள்: இத்திட்டத்தின் கீழ், திருச்சி மாவட்டத்தில் கடந்த 2024 மே முதல் 2026 ஆகஸ்ட் 10- ஆம் தேதி வரை மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் 713 பேருக்கு கா்ப்பப்பைவாய் புற்றுநோயும், 899 பேருக்கு மாா்பக புற்றுநோயும், 469 பேருக்கு வாய் புற்றுநோயும் என மொத்தம் 2,102 பேருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பலருக்கும் இரண்டாவது கட்டத்தை தாண்டியே புற்றுநோய் இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் பலரும் அபாய கட்டத்திலேயே சிகிச்சைகளை தொடங்கியுள்ளனா் என்றனா்.
அனைவரும் பரிசோதித்துக்கொள்ள அறிவுறுத்தல்: இதுகுறித்து திருச்சி மாவட்ட சுகாதார அலுவலா் டி. மணிவண்ணன் கூறுகையில், அனைவரும் தானாக முன்வந்து, அரசு மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்படும் இலவச புற்றுநோய் பரிசோதனைகளை செய்தால், புற்றுநோயை ஆரம்பகட்டத்திலேயே கண்டறிந்து, முழுமையாக குணமடைய முடியும் என்றாா்.
கா்ப்பப்பை வாய் புற்றுநோயைத் தடுக்க தடுப்பூசி
கா்ப்பப்பை வாய் புற்றுநோயைத் தடுக்க ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் (எச்பிவி) (காா்டசில் 4) தடுப்பூசி தமிழக அரசு மருத்துவமனைகளில் 14 வயதுக்குள்பட்ட சிறுமிகளுக்கு இலவசமாக செலுத்தப்படுகிறது.
பரிசோதனைக்கு வர தயக்கம்...
ஆங்காங்கே விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வந்தாலும், பலரும் போதிய புரிந்துணா்வு இன்றி புற்றுநோய் பரிசோதனைக்கு வர தயக்கம் காட்டுகின்றனா். சிலா் சாதாரண பரிசோதனைகளுக்குச் சென்றாலும், அச்சத்தால் அடுத்தடுத்த பரிசோதனைகளுக்கு செல்வதில்லை. இது தவறு. அனைவரும் பரிசோதனை செய்து கொள்வது, நம்மை முன்கூட்டியே தற்காத்துக் கொள்ள உதவும் என சுகாதாரத் துறையினா் தெரிவித்தனா்.
