1 outlet covered this

சாலமன் பாப்பையா மறைவு: கமல்ஹாசன் இரங்கல்

How outlets told it

சாலமன் பாப்பையா மறைவு: கமல்ஹாசன் இரங்கல்
Photo: Daily Thanthi

பட்டிமன்ற நடுவரும் தமிழறிஞருமான சாலமன் பாப்பையா காலமானார். அவருக்கு வயது 90. மதுரையை சேர்ந்த சாலமன் பாப்பையா பட்டிமன்ற நிகழ்ச்சிகள் மூலம் தமிழக மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியராக பணியாற்றிய இவர், தமிழ் இலக்கியங்கள் குறித்து ஆற்றிய உரைகளாலும் பிரபலமானவர். திருக்குறள் உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கியங்களுக்கு உரை எழுதியுள்ளார். தமிழக அரசு சார்பில் கடந்த 2000-ம் ஆண்டு இவருக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டது. தொடர்ந்து தமிழ் மொழி மற்றும் இலக்கியத்துக்கு ஆற்றிய பங்களிப்பை பாராட்டி, 2021-ம் ஆண்டு மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.‘பாய்ஸ்’, ‘சிவாஜி’ உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 90 வயதான சாலமன் பாப்பையா, உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். சாலமன் பாப்பையா மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். கமல்ஹாசன் இரங்கல்இந்த நிலையில், சாலமன் பாப்பையா மறைவுக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து கமல்ஹாசன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-“பழந்தமிழ் இலக்கியங்களைப் பாமர மொழியில் விளக்குவது தனித்த ஒரு கலை. அந்தத் திறமையை, பட்டிமன்றம் என்ற வடிவத்தின் மூலம் நிலைநாட்டி நூற்றுக்கணக்கான மாணவர்களை உருவாக்கிய பேராசிரியர் சாலமன் பாப்பையா மறைந்தார். நிறைவாழ்வில் பெருஞ்செயல் செய்து காலம் சென்றிருக்கும் அவரது புகழ் நிலைத்திருக்கும். அவர்தம் குடும்பத்தினருக்கும், தங்கள் ஆசிரியரை இழந்து வாடும் மாணாக்கர்களுக்கும் என் இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்”