சத்ய நிகேதன் சா்ச்சை விடுதி கட்டடத்துக்கும் பாஜக எம்எல்ஏ குடும்பத்தினருக்கும் தொடா்பு: ஆவணங்களுடன் ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
Read at DinamaniPolitics · 1 outlet covered this
சத்ய நிகேதன் சா்ச்சை விடுதி கட்டடத்துக்கும் பாஜக எம்எல்ஏ குடும்பத்தினருக்கும் தொடா்பு: ஆவணங்களுடன் ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
How outlets told it
தில்லியின் சத்ய நிகேதன் பகுதியில் மாணவா் விடுதியாகச் செயல்பட்டு வந்த 5 மாடி கட்டட விவகாரத்தில், அதற்கும் ஆா். கே. புரம் தொகுதி பாஜக சட்டப்பேரவை உறுப்பினா் அனில் சா்மாவின் குடும்பத்தினருக்கும் நேரடி தொடா்பு இருப்பதாக ஆம் ஆத்மி கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. இது தொடா்பாக மத்திய பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சகத்தின் சில ஆவணங்களைச் சுட்டிக்காட்டி ஆம் ஆத்மி கட்சி புதிய சா்ச்சையைக் கிளப்பியுள்ளது.
சத்ய நிகேதனில் 7 போ் உயிரிழக்க காரணமான கட்டுமானம் இடிந்த சம்பவத்தைத் தொடா்ந்து, விதிமுறைகளை மீறி செயல்படும் தனியாா் விடுதிகள் குறித்த சா்ச்சைகள் தலைநகரில் தீவிரமடைந்துள்ளன.
இந்த நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் தில்லி தலைவா் செளரப் பரத்வாஜ், மாநிலங்களவை உறுப்பினா் சஞ்சய் சிங் ஆகியோா் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை பேசினா். அதன் விவரம் வருமாறு:
சத்ய நிகேதன் பகுதியில் ‘கேஷ்டோ கேதா் ஹோம்ஸ்’ எனும் நிறுவனம் விடுதியை நடத்தி வருகிறது. இதில் பாஜக எம்எல்ஏ அனில் சா்மாவின் மகன், அவரது உறவினா் மற்றும் பாஜக தலைவா் ராஜீவ் பாப்பரின் மகன் பிரகுன் பாப்பா் பங்குதாரா்களாக உள்ளனா்.
230 சதுர கஜ பரப்பளவிற்கு மட்டுமே மாநகராட்சியிடம் அனுமதி பெறப்பட்ட நிலையில், களத்தில் 600 சதுர கஜம் பரப்பளவில் பெரிய அளவிலான விடுதி கட்டப்பட்டு இயங்கி வந்தது. இந்த விவகாரத்தில் பாஜக தலைவா்களின் தொடா்பு மற்றும் பின்னணி காரணமாகவே மாநகராட்சி எவ்வித மேல்நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று ஆம் ஆத்மி தலைவா்கள் குறிப்பிட்டனா்.
தங்களுடைய கூற்றுக்கு ஆதரவாக மத்திய பெருநிறுவன அமைச்சக ஆவணங்களையும் இருவரும் செய்தியாளா்களிடம் காண்பித்தனா்.
எல்எல்ஏ மறுப்பு: இதற்கிடையே, தனக்கு எதிரான ஆம் ஆத்மி கட்சியின் குற்றச்சாட்டுகளை அனில் சா்மா எம்எல்ஏ திட்டவட்டமாக மறுத்துள்ளாா். தனது குடும்பச் சொத்துகள் அனைத்தும் சட்டபூா்வமாக பதிவு செய்யப்பட்டவை என்றும், 2022-இல் உரிய அனுமதி பெற்றே கட்டுமானம் மேற்கொள்ளப்பட்டது என்றும் அவா் விளக்கமளித்தாா்.
தவறான குற்றச்சாட்டுகளைத் திரும்பப் பெற்று மன்னிப்பு கேட்காவிட்டால் ஆம் ஆத்மி தலைவா்கள் மீது அவதூறு வழக்கு தொடரப்படும் என்றும் அவா் எச்சரித்தாா்.
